நிழற்சாலை

நிழற்சாலை

சிறகு உலகு

‘பச்சை காக்கா

நீல காக்கா எல்லாம் பாத்தேன்'

என்றதும்

அப்படியெல்லாம் எதுவும் கிடையாது என்றேன்

‘பச்சை காக்காதான் கிளி

நீல காக்காதான் மயில்'

குதூகலித்தது குழந்தை

தளிர்களின் உலகில்

நுழைய

நமக்குத்தான் தேவை

தனித்துவமான

சிறகுகள்!

- ப்ரணா

அருள் பரிசு

சிலை முன் சிறுமி

கற்பூரமேற்றியதும்

மெல்லிய

புன்னகையொன்றை

அவிழ்த்துவிட்டு

கடும் வெயிலைச்

சற்று மங்கச்செய்கிறார்

சாலையோரக்

கடவுள்.

- ரகுநாத் வ

தந்திரச் சரிதம்

விழும்போது

தாங்கிப் பிடித்து

எழும்போது

கொல்லும்

சிலந்தி வலைகள்

சொல்கின்றன

கார்ப்பரேட்டுகளின் கதைகளை!

- செந்தில்குமார் ந

கள்வர் பயம்

வீட்டில் வறுமை

மட்டுமே

இருக்கிறது

சந்தோஷம்தான்

அதுவேனும்

திருடு போனால்

- வி.வைத்தியநாதன்

செல்வச் சிறை

வலுவான இரும்பு கேட்டில் கால்களை

தொங்கப்போட்டு புழுதியில் புரளும்

தெருநாய்களின் விளையாட்டை

கதவிடுக்கில்

கண் வைத்துப் பார்க்கும்

கொழுகொழு நாயை

முழுதும் ரசிக்கவிடாமல்

கழுத்தில் இறுக்கியிருந்தது

பளபளப்பான சங்கிலி!

- கோவை.நா.கி.பிரசாத்

புத்தனாதலின் புதிர்

வீடடையும் மாலை வேளையில்

பேருந்து முழுவதும் நிறைந்து

வழிகிறது சோர்வு

கதவருகே காத்திருக்கும் ஜீவன்களை

எண்ணிப் பதைத்தபடி பெண்கள்


கடன் அட்டைகளைத் தடவிப் பார்த்தபடி

ஜன்னலுக்கு வெளியே பார்வையோட்டும் ஆண்கள்

எத்தனை முறை பயணித்தும்

ஊர் சேரும் பயணம் வாய்க்கப்பெறாத ஓட்டுநர்

சில்லறைக் கவலைகளில்

காலமெல்லாம் உழலும் நடத்துநர்

இவர்களைத் தினமும் தரிசித்தும்

தொப்பை குலுங்க எதைத்தான்

எண்ணிச் சிரிக்கிறாரோ

ஓட்டுநர் இருக்கை முன் அமர்ந்திருக்கும்

அந்த குண்டு புத்தர்.

- கி.சரஸ்வதி

ரசனையை வெல்லும் ரணம்

சட்டென்ற பாய்ச்சலில்

தாழப்பறந்து

குளத்து மீனைக் குறி தப்பாது

கொத்திக்கொண்டு பறக்கும்

மீன்கொத்தியின் வேட்டையாடலை

ரசிக்க முடியவில்லை

அலகில் சிக்கித்துடிக்கும்

மீனின் தவிப்பினை பார்த்த பிறகு!

- நேசன் மகதி

இறத்தல்

கனக்கிறது...

கையிலிருக்கும்

இறந்த வண்ணத்துப்பூச்சி!

- மு.முபாரக்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in