நிழற்சாலை

நிழற்சாலை

குரூரத்தின் சாட்சி

பௌர்ணமி வெளிச்சத்தில்

லாவகமாக

வளைத்துப் பிடித்து

எலியை விழுங்கும்

பாம்பின்

திடத்தை

வியந்தபடியே

நானும் பிள்ளைகளும்

ஒளிந்திருந்து

பார்ப்பதைப் போலவே

எங்கேயாவது இருந்து

பார்த்துக்கொண்டிருக்கலாம்

எலியின் பிள்ளைகளும்.

-ந.சிவநேசன்

நீயாகும் அது

அதிகாலைச் சிணுங்கலில்

துயில் கலைத்துவிடுகிறது

நடை பழகச் செல்ல நினைவூட்டுகிறது

இதயத் துடிப்பை எண்ணிக்கை

துல்லியத்தில் கேட்டு நிற்கிறது

மணித்துளியளவும் பிரிய மறுக்கிறது

இட்ட கட்டளைகளுக்கெல்லாம் செவிசாய்க்கிறது

உன்னைப்போலச்

சின்னச் சிரிப்பும்

செல்லக் கைகோப்பும் இருந்தால்

நீயாகிவிடலாம் அது!

- கி.சரஸ்வதி

வகுப்பறை

பூக்களையேந்தியவாறு

கைகளை

உயர்த்துகின்றன

தேர்ச்சியடைந்த

செடிகள்!

- ரகுநாத் வ

தளிர் கரத்திலிருந்து வழியும் கங்கை

லேசாய்

இருமியதும்

மகள்

கொண்டுவந்து

நீட்டும்

சொம்பில்

ததும்புகிறது

கங்கை!

-வீ.விஷ்ணுகுமார்

தூறல் புன்னகை

குடை மறந்த நாளில்

பெய்யும் மழையில் தெரிகிறது

உடன் வரும்போதெல்லாம்

மௌனமாய் இருந்துவிட்டு

விடைபெறும்போது

புன்னகைக்கும் குழந்தையின் சாயல்!

-மு.முபாரக்

பிரார்த்தனை

புல்லாங்குழல் இசை

வேண்டாம்

மயிலிறகிற்கு ஆசையில்லை...

வெண்ணெய் கேட்டால் அது

பேராசையாக இருக்கலாம்...

குறைந்தது ஒரு வேளையாவது

சாப்பாடு கிடைக்க வேண்டும்

கண்மூடி... கைகூப்பி...

கோயில் முன் வேண்டுதல் சுமந்து நிற்கிற

காகிதம் பொறுக்கும் சிறுவர்களுக்காய்

ஒருவேளை கண் திறக்கக்கூடும்

கடவுள்!

- ச.ஆனந்த குமார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in