நிழற்சாலை

நிழற்சாலை

புரிதல் கோளாறு

உடல் போர்த்திய பளபள துணிகள்

மணிகள் சொருகப்பட்ட வண்ணக் கொம்புகள்

கம்பீரம் கூட்ட செயற்கைத் திமில்

மணிகள் பூட்டிய கழுத்து

அத்தனையையும் மறுதலிக்கும்

பூம்பூம் மாட்டின் இடவலமான

தலையாட்டலை

ஆம் என்பதாகவே புரிந்துகொள்கிறது

மொழியை மட்டும் நம்பும்

மனித மந்தை!

- கி.சரஸ்வதி

காத்திருத்தல்

நிலையத்தில் நுழையும் பேருந்துகளில்

தெரிகிறது வராத பேருந்துகளின் சாயல்

காத்திருந்த கண்கள்

காட்சிப்பிழைக்குப் பழகி

எல்லா ஊர்களின் பெயர்ப் பலகையிலும்

தான் செல்ல வேண்டிய ஊர்ப்பெயரை

எழுதி எழுதிப் பார்க்கிறது

வர வேண்டிய நேரம்

கடந்த பின்னர்

கனவுலகில்

சஞ்சரிக்கத் தொடங்கும் பேருந்து

ஒருவழியாய் வந்தடைந்து

எல்லோரையும்

பார்க்கும் பார்வையில்

சற்றே இரக்கம் தெரியத்தான் செய்கிறது!

- சாமி கிரிஷ்

சிற்பி

மகளின்

சுவரோரக் கிறுக்கல்களில்

கவிதைகள்

அரங்கேறிவிடுகின்றன

மொழிபெயர்க்கவியலாத

சிற்பமாவதில்தான்

பேருவகை அடைகிறது

செம்மொழி!

- ரகுநாத் வ

அனுபவம்

வெயில் தாங்கும்

மரத்தின் கீழ்

தடி கொண்டு நடக்கும்

தாத்தாவின் நிழலும்

மரத்தின் நிழலும்

மவுனமாகப் பேசிக்கொள்கின்றன

இளைப்பாறும்

அனுபவம் தனை!

- சே கார்கவி

நிலாச்சோறு

ஒரு வாய் சோறு ஊட்டிவிட

குழந்தையை

இடுப்பில் சுமந்து

நிலவைக் காட்டி

பக்கத்து வீட்டுத் தாத்தாவை

பயமுறுத்தச் சொல்லி

இல்லாத பேயை அழைத்து

இரவில் கதை சொல்லி

உணவளித்த

நாட்களை நினைத்துப் பார்க்கும்

அந்த முதிய தாயை

முன்னகர்ந்து செல்லச் சொல்கிறது

முதியோர் இல்லத்து

உணவு நேர வரிசை!

- நேசன் மகதி

துளிர்த்தல்

காய்ந்ததென கைவிடப்பட்ட

செடியொன்று

பூக்கத் தொடங்கியிருந்தது...

தற்கொலை செய்துகொண்டவனின் வீட்டில்!

- மு.முபாரக்

சுகமான சுமை

பொழுதெல்லாம்

மூட்டை சுமக்கும் தொழிலாளி

பொழுது சாய்ந்ததும்

ஆசையாய்

தன் பிள்ளை

முதுகில்

உப்புமூட்டை ஏறிக்கொண்டதும்

இறக்கி வைத்துவிடுகிறார்

அத்தனை சுமைகளையும்.

- காசாவயல் கண்ணன்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in