நிழற்சாலை

நிழற்சாலை

நிச்சலன வனம்

கானகத்தைப் பிளந்து

மதம் பிடித்த யானையாய்

ஓடிக்கொண்டிருக்கும் ரயில்.

கானுயிரிகளின் வாழ்வின் தினமும் சங்கூதிச் செல்கிறது

இரவின் திரையைக் கிழித்தபடி.

இரும்புச்சக்கரங்கள் ஏறி இருப்புப் பாதையின்

இரு பக்கமும் யானைகளின் சடலங்கள்.

உடற்கூறாய்வு அறிக்கைப்படி

தும்பிக்கை துண்டாடப்பட்டு வயிறு வீங்கிக்கிடந்த

பெண் யானை நிறைமாத கர்ப்பம்.

சூறைக்காற்றை மரங்களின் தலைகளில் அறைந்து

ஒப்பாரி வைத்து அலறுகிறது மிச்சமிருக்கிற வனம்.

கதறி கண்ணீரைப் பொழியும் வானத்தில்

சில நாட்களுக்குச் சூரியனுமில்லை சந்திரனுமில்லை.

- வலங்கைமான் நூர்தீன்

இணையா உலகம்

தெரியாத நபரின்

கோரிக்கையில்

உறுத்துகிறது நட்பதிகாரம்


கட்டை விரல்களின்

விருப்பத்தொடுகை

ஊறச்செய்கிறது

உயிரணுக்களை


கலங்களின் மெனு கிரீடம்

அசைகையில்

குதூகலிக்கிறது மனது

நானாக இன்னொருவர்

சுற்றித்திரிகையில்

விரக்தி அச்சாகின்ற


என் சுவர்களில்

வாசிக்கப்பட்டுக்கொண்டிருக்கலாம்

எனக்கே பரிச்சயமில்லா

என் போலி உலகம்!

- ரகுநாத் வ

இரவில் நீந்தும் சொற்கள்

நடுச்சாமம் வரை

நீளும் உரையாடலில் உதிரும்

சொற்கள் யாவும் நட்சத்திரங்கள்.

அவ்வளவு நேரம்

போனில் அழைத்து உரையாடிவிட்டு

மெசேஜிலும் பேசுகிறாய்

அசைவ விருந்துக்குப் பிறகான

ஐஸ்கிரீம் கொசுறு அது.

கிசுகிசுப்பான குரலில்

நீ பேசி அனுப்பும்

வாய்ஸ் செய்திகளுக்கு

இரைக்கு அலையும்

பூனையின் கால்தடம்.

அழைப்பை ஏற்கையில்

அணையும் தொடுதிரை வெளிச்சம்

காதிலிருந்து எடுக்கும்போதுதான்

மீண்டும் ஒளிர்கிறது...

அதற்கும் வெட்கம்

இருக்கும்தானே!


-ந.சிவநேசன்

உதிரம் வழியும் விருட்சம்

மனம் கசிய

பார்த்துக்கொண்டிருக்கும்

அத்தனை கிளைகளும்

மௌனமாய் இருக்கின்றன

கோடரியைக் கண்டதும்

கீச்சிட்டு பறவைகள் வெளியேறுவதும்

உள்வருவதுமாயிருக்கின்றன

அடுத்த மரத்தின் கிளைகளுக்கு

அணில்கள் தாவிவிட்டன

உதிர்தலை ஒரு பூ

ஆரம்பித்து வைக்கிறது

இப்போது வெட்டுப்பட

ஆயத்தமாகிவிட்டது மரம்.


- மகேஷ் சிபி

வேண்டுதல்கள்

பிரகாசமான வாழ்வுக்கெல்லாம்

பிரயாசப்படவில்லை

வேண்டுதலெல்லாம்

அடிக்கடி மினுங்காமல்

குறைந்தபட்சம்

ஒற்றைப் புள்ளியில்

நின்று ஔிர்ந்து

எரிபொருள் இருப்பு காட்டும்

இருசக்கர வாகனத்தின்

அத்தியாவசியமான

பயணமாவது வாய்க்க

அருள் புரியட்டும்

ஆண்டவர்களாகிய

ஆட்சியாளர்கள்.

- சாமி கிரிஷ்

பக்தி

சாமி படம் போட்ட

பழைய காலண்டர்

அவ்வளவு எளிதாக

தூக்கிப்போட

மனமில்லை

அம்மாவுக்கு

தற்போது

பூஜையறையில்.

- தாமரை நிலவன்

அஞ்சலி

கானக மண்ணிலிருந்து

வெட்டி அடுக்கப்பட்டு

கனரக வாகனங்கள்

ஏற்றிக்கொண்டுவரும்

மரத்துண்டுகளின் மீது

இலைக் கைகளின்

மெல்லிய தொடுதலால்

இறுதி மரியாதை

செய்கின்றன

சாலையோர மரங்கள்.

- காசாவயல் கண்ணன்

ஆசை


புத்தன்

அமரும்வரை

ஞானியாய் இருந்த

அந்த போதி மரம்

சித்தார்த்தன் அகன்றதும்

ஆசை வளர்த்துக்

காத்திருக்கிறது

இன்னொரு

புத்தனுக்காய்!


-கோவை.நா.கி.பிரசாத்

காலத் தராசு

எடைக்கல் தராசுகளில்

கொசுறாய்க் கிடைத்தது

கைப்பிடி அன்பு

டிஜிட்டலில்

துல்லியமாக

அளக்கப்படுகிறது

மனக் குறுக்கம்.


- கி.சரஸ்வதி

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in