நிழற்சாலை

நிழற்சாலை

உருகும் சாலை


கொளுத்தும் வெயிலில்

நெடுஞ்சாண்கிடையாக

வெகுநேரம் விழுந்து கிடந்து

இடைவிடாது வாகனங்கள்

முதுகில் ஏறி இறங்கிய

வலியையும்

சுகமாக

அனுபவித்துக் கிடக்கிறது

குறுக்கும் நெடுக்குமாக

நடந்து செல்லும்

குழந்தையின்

பிஞ்சுக் காலடித் தடம் பட்ட

நெடுஞ்சாலை.

- காசாவயல் கண்ணன்

இயல்பாதல்

காணொலியின் நடுவில்

உடல் முழுதும்

வயர்கள் செருகப்பட்ட குழந்தை

சோகமாய் பார்க்கிறது

கைகூப்புகிறது

கம்மிய குரலில் பேசும் அம்மாவைக் கவனிக்கிறது

அவசரமாக

Skip ad பொத்தானை அழுத்துகையில்

பதியும்

ரேகையின் வழி

புலனாகி மறைகிறது

புறக்கணித்தலின் முகம்

துயரமொன்று

துண்டிக்கப்பட்ட

விளம்பரமாதலின் வழி

இயல்புக்குத் திரும்பி

நகர்கிறது

பரிணாம உலகு.


-ந.சிவநேசன்

அறிவித்தல்


தேநீர்க் கடை மரத்தடியில்

இறப்பு செய்தி வாசிக்க

உதிர்கிறது பழுத்த இலை.


- பாண்டியராஜ்

புன்னகை

பேருந்தின் முன் இருக்கையில்

முகத்தை மறைத்து ‘பே’வென

விளையாட்டு காட்டிய குழந்தையின்

மகிழ்ச்சி வெளிச்சத்தில் கம்பிகளுக்கிடையே இருட்டில்

தொலைத்த மின்மினிப்பூச்சிகளை

ரசித்துக்கொண்டு வருகிறான்

நன்னடத்தையில்

விடுதலையாகி ஊர்திரும்பும்

ஆயுள் தண்டனைக் கைதி.

- சத்யா மருதாணி

ஆறுதல்


உயிரற்ற பொருள்தான்

இருப்பினும் சாய்ந்தால்

ஆறுதலளிக்கிறது...

பேருந்தின் கம்பி!


- ரகுநாத் வ

ப்ரேக்_அப்

உனக்கும் எனக்கும்

இனி ஒன்றும் இல்லை

எனச் சொல்ல

நீ வந்தாய் தானே

அன்று நீ உன் புருவ மயிரை

சீர் செய்து இருக்க

தேவையே இல்லை

எனக்குப் பிடித்த

இளஞ்சிவப்பு நிற

சேலை அணிந்து

வராமலிருந்திருக்கலாம்

விடைபெறுதல் நிமித்தமாக

நீ உன் மிருதுவான கையை

என்னிடம் நீட்டி இருக்கக் கூடாது

உன் கண்களில் நீர்

கசிந்திருக்க கூடாது

மீண்டும் ஒரு முறை முயற்சி செய்வோம்

அடுத்த முறையாவது

முடித்துக்கொள்வோம்

இந்தக் காதலை.

- சந்தோஷ் மகேஸ்வரி

நடுக்கம்

தன் வனத்தைத்

திருடிக்கொண்டு

தான் வேட்டையாட

குதிரை செய்துதந்தவனை

ஆசீர்வதிக்கும்போது

கருப்பனின் கரங்களும்

கொஞ்சம் நடுங்கத்தான் செய்தன!


- து. விஜயகுமார்

குப்பைகள் எரியும் சாலை

குப்பைகளை அவளிடம்

ஒப்படைக்கும் வரை

ஆயிரமாயிரம் கதைகளைப் பேசிவிட்டு

தாகத்திற்குக் கொஞ்சம் தண்ணீர் கொடுங்கம்மா

என்ற கேள்வியை கேட்டும்

கேட்காததுபோல்

கடந்துசென்றவர்கள் பயணிக்கும் பாதை

நெருப்பாகவும் பயணிப்பவர்கள்

சாத்தானாகவும் தெரிகிறார்கள்...

வீடடைந்த பின்பும்!

- மு.முபாரக்

மணிமேகலையின் வீடு திரும்பல்

ஆடுகளை

மேய்த்துக்கொண்டிருப்பவனுக்கு

இரண்டு டம்ளர்

கட்டிட வேலை செய்யும்

மேசனுக்கும் சித்தாளுக்கும்

தலா இரண்டு டம்ளர்

கட்டிடக் கூரை மேல் நின்றுகொண்டு

வெல்டிங் அடிப்பவனுக்கு ஒரு டம்ளர்

ஒற்றை மாட்டைக் கையில் பிடித்தபடி

ரோட்டோரத்தில் மேய்த்துக்கொண்டிருப்பவளுக்கு

இரண்டு டம்ளர்

என எல்லா மோரையும் விற்றவள்

தாகத்தோடு

உச்சி வெயிலில்

வீட்டுக்கு நடந்துபோகிறாள்

பாத்திரத்தில் மிச்சமிருக்கும்

சொட்டுச் சொட்டு மோரால்

சூரியனின் தாகம் தீர்த்தபடி


-சௌவி

அன்னை தெய்வம்


தனக்கு விருப்பமான

கோயில் பிரசாதம்

பிள்ளைகளுக்கும்

பிடிக்கும் என்பதால்

எடுத்துவரும் அம்மா

கோயிலுக்கு

வெளியே

நடமாடும்

கடவுள்.

- தாமரை நிலவன்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in