ஆங்கிலம், மலையாளத்திற்கு சென்ற நாஞ்சில் நாடனின் படைப்பு

நாஞ்சில் நாடன்
நாஞ்சில் நாடன்

சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் 'சூடிய பூ சூடற்க’ என்னும் சிறுகதைத் தொகுப்பு ஆங்கிலம், மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், வீரநாரயணமங்கலத்தைச் சேர்ந்தவர் நாஞ்சில் நாடன். இப்போது கோயம்புத்தூரில் வசித்துவருகிறார். நாஞ்சில் நாட்டு வட்டார வழக்கில் விரியும் நாஞ்சில் நாடனின் எழுத்துகள் மனித மனங்களின் உணர்வுக்குவியலாக பிரதிபலிப்பவை. இவர் எழுதிய தலைகீழ் விகிதங்கள் என்னும் நாவலே சேரன் நடிப்பில், ‘சொல்ல மறந்த கதை’ என்னும் பெயரில் திரைப்படமானது. பாலா இயக்கிய பரதேசி திரைப்படத்தின் வசனகர்த்தா என்பது உள்பட இவரது திரைப்பங்களிப்பும் அதிகம்.

நாஞ்சில் நாடன் எழுதிய `சூடிய பூ சூடற்க' என்னும் சிறுகதைத் தொகுப்பு கடந்த 2010-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுபெற்றது. இந்த சிறுகதைத் தொகுப்பில் 15 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளது. இந்த படைப்பில் இடம்பெற்றுள்ள சிறுகதைகள் உயிர்மை, ஆனந்தவிகடன், உயிர் எழுத்து உள்பட பல்வேறு இதழ்களிலும் 2005 முதல் 2007-ம் ஆண்டுவரையில் வெளியானவையாகும். இதை இப்போது சாகித்ய அகாடமியே, ஆங்கிலம் மற்றும் மலையாளத்தில் மொழிபெயர்த்துள்ளது.

இதுகுறித்து காமதேனுவிடம் பேசிய எழுத்தாளர் நாஞ்சில் நாடன், ”2008-ம் ஆண்டு `சூடிய பூ சூடற்க' என்னும் சிறுகதைத் தொகுப்பு வெளியானது. தமிழ் இலக்கிய உலகில் பரவலான கவனம் பெற்ற அந்த புத்தகம் 10 பதிப்புகளைக் கடந்து, 25 ஆயிரத்திற்கும் அதிகமான பிரதிகள் விற்றது. உண்மையான தியாகிகளுக்கும், போராளிகளுக்கும் கிடைக்க வேண்டிய மரியாதை அவர்களுக்கே கிடைக்க வேண்டும். மற்றவர்கள் எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதை முன்வைத்தே `சூடிய பூ சூடற்க' சிறுகதை விரியும். எங்கள் கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு. வாடிய பூவைக் கூட சூடிக்கொள்வார்கள். இன்னொரு பெண் சூடிய பூவை சூடக்கூடாது என! `சூடிய பூ சூடற்க' பதமும் அப்படித்தான்! படைப்பை இப்போது சாகித்ய அகாடமியே ஆங்கிலம் மற்றும் மலையாளத்தில் மொழிபெயர்த்து கொண்டுவந்திருப்பதில் மகிழ்ச்சி!” என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in