இதழ், நூலகம்... அறிவு வெளிச்சம் பாய்ச்சிய பிதலீஸ் மரணம்

ஒளிவெள்ளம் பத்திரிகையுடன் பிதலீஸ்
ஒளிவெள்ளம் பத்திரிகையுடன் பிதலீஸ்

ஒளிவெள்ளம் என்னும் இதழை நடத்தியதோடு, தன் நூலகத்திற்கு வருவோருக்கு பயணப்படி கொடுத்து வாசிப்பைத் தூண்டியவருமான பிதலீஸ் வயோதிகத்தால் இன்று உயிர் இழந்தார். அவரது இழப்பு குமரிமாவட்ட இலக்கியவாதிகளை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நாகர்கோவில், ஆசாரிபள்ளம் பகுதியில் இருக்கின்றது அந்த நூலகம். 70 வயதை கடந்த வயோதிக தம்பதியினர் தான் அந்த நூலகத்தை நடத்தி வருகின்றனர். நூலகத்திற்கு வாசிக்க வருபவர்களுக்கு பயணக் கட்டணம் வழங்கப்படும் என எழுத்துக்கள் அங்கு பொறிக்கப்பட்டுள்ளது. அப்படியாவது நான்கு பேர் வாசிக்க வரட்டுமே என்று தான் இப்படி ஒரு யோசனை செய்தோம் என்று முன்னுரை கொடுப்பவர் பிதலீஸ்.

வீட்டு நூலகத்தில் பிதலீஸ் (கோப்பு படம்)
வீட்டு நூலகத்தில் பிதலீஸ் (கோப்பு படம்)

பி.எஸ்சி வேதியியல் பட்டதாரியான இவர், படிப்பு முடிந்ததும் சுயதொழில் செய்தவர். சொந்தமாக பேக்கரி கடை நடத்தியதோடு, கணக்காளர் பணியும் செய்து வந்தார். வாழ்வில் பல வேலைகளையும் பார்த்துவிட்டு சுழன்று கொண்டிருந்தவருக்கு ஏதோ ஒரு வகையில் கன்னியாகுமரி மாவட்ட எழுத்தாளர்கள் சங்கத்தின் நட்பு கிடைத்தது. அதன் பின்பு அவரது தேடல் புத்தகங்களை நோக்கி நகர்ந்தது.

நிறைய வாசிக்கத் துவங்கினார். எம்.ஏ இதழியல் படித்தார். 2002-ம் ஆண்டு முதல் ஒளிவெள்ளம் என்னும் சிற்றிதழையும் நடத்தி வந்தார். மாவட்ட மைய நூலகத்தில் உறுப்பினரான பின்பு, அவரது பகுதியிலும் ஒரு சிறிய நூலகம் அமைக்க வேண்டும் என விரும்பினார். நண்பர்களது வீடுகளுக்கு சென்று புத்தகங்கள் சேகரித்தார். அவர் வீட்டில் இயங்கிவந்த ஒளிவெள்ளம் நூலகத்தில் 3000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளது. வீட்டில் உள்ள வாசிப்பு அறையில் தி இந்து உள்பட தினசரி, வார, மாத இதழ்கள் 50 க்கும் மேற்பட்டவை வருகின்றது. பிதலீஸின் மனைவி மேரி ஆசிரியையாக இருந்து ஓய்வு பெற்றவர். பிதலீஸ் நிர்வகித்து வந்த இல்ல நூலகத்திற்கு விடுமுறையே கிடையாது.

இலவச நூலகத்தில் ஆர்வத்துடன் வாசிக்கும் பகுதிவாசிகள்
இலவச நூலகத்தில் ஆர்வத்துடன் வாசிக்கும் பகுதிவாசிகள்

திரையரங்குகள், சூப்பர் மார்க்கெட், ஷாப்பிங் மால்களுக்கு சென்று பொருள்கள் வாங்குவதற்குகூட குடும்பத்தோடு சென்று வருகிறார்கள். ஆனால் அறிவை பெருக்கும் நூலகத்திற்கு யாருமே குடும்பத்துடன் வர விரும்புவதில்லை என எப்போதும் புலம்பும் பிதலீஸ், அதனாலேயே தன் நூலகத்திற்கு வருபவர்களுக்கு பயணக் கட்டணம் வழங்கப்படும் என அறிவிப்பு செய்தார். ``இளைய தலைமுறையை வாசிக்க வைப்பதைவிட நாம் நம் சந்ததிகளுக்கு விட்டு செல்லும் விஷயம் வேறு என்ன இருந்துவிட முடியும்? இந்த நூல்கள் அடங்கிய நூலகமும், வெளியே உள்ள வாசிப்பு சாலையுமே எங்கள் குழந்தைகள்'' என எப்போதும் சொல்லும் பிதலீஸின் மறைவு, குமரிமாவட்ட இலக்கிய உலகுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in