விருது கிடைத்ததில் எனக்கு சிறு கூச்சம் இருக்கிறது!

சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் அம்பை பேட்டி
அம்பை
அம்பை

‘சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை’ என்னும் சிறுகதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருது அம்பைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 40 ஆண்டுகளுக்கும் மேலாக பெண்கள் வரலாறு மற்றும் அவர்களது வாழ்க்கை பற்றிய ஆய்விலும் ஈடுபட்டு வருபவர் அம்பை. ‘ஸ்பாரோ’ என்னும் பெயரில் பெண்களுக்கான அமைப்பு ஒன்றைத் தொடங்கி நடத்தும் இவர், அதன் நிர்வாக இயக்குநராகவும் இருக்கிறார்.

1976-ம் ஆண்டில், ‘சிறகுகள் முறியும்’ என்ற தனது சிறுகதைத் தொகுப்பின் மூலம் இலக்கிய உலக்குக்கு அறிமுகமானவர் அம்பை. அதன் பிறகு, இவர் எழுதிக்குவித்தவை ஏராளம். கோவையில் பிறந்தாலும் இப்போது மும்பையில் வசிக்கும் அம்பையை, அலைபேசியில் அழைத்து வாழ்த்துச் சொல்லிப் பேசினோம். இனி அவரது பேட்டி...

பெண்களின் வலிகளைச் சொல்லும் சிறுகதை எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், பெண்ணிய செயற்பாட்டாளர் இந்த மூன்றில் உங்களுக்குப் பிடித்த முகம் எது?

என்னை ஒரு மொழிபெயர்ப்பாளர் என்னும் வரையறைக்குள் கொண்டுவந்துவிடமுடியாது. காலச்சுவடு கண்ணன் கேட்டுக் கொண்டதன் அடிப்பையில் இரோம் ஷர்மிளாவின் கவிதைத் தொகுப்பையும், ‘ஸைபீரியப் பனியில் நடனக் காலணியுடன்’ என்னும் ஆங்கிலப் படைப்பையும் தமிழுக்கும் கொண்டுவந்தேன். ‘ஸைபீரியப் பனியில் நடனக் காலணியுடன்’ படைப்பை ரொம்பவும் ரசித்து மொழிபெயர்த்தேன். ஆனாலும் நான் முழுநேர மொழிபெயர்ப்பாளர் இல்லை. சிறுகதை எழுத்தாளர், செயற்பாட்டாளர் இரண்டையுமே என்னால் பிரித்துப் பார்க்கமுடியாது. இரண்டுமே இணைந்துதான் வரும். என் படைப்புகளிலும் பெண், ஆண் இருபாலும் வாழ்வதற்கான குரல் ஒலிக்கும். அதில், எப்படி சரியான மனிதர்களாக வாழவேண்டும் என்னும் குரல் சற்று தூக்கலாக இருக்கும்.

அம்பை
அம்பை

உங்கள் சிறுகதைகளில் பெரும்பாலும் ‘பகடித் தன்மை’ அதிகமாக இருக்கிறதே... அது இயல்பாகவே வருகிறதா?

நகைச்சுவை உணர்வு இல்லாமல் நம்மால் வாழ்க்கையை அணுகவே முடியாது. பெண்களுக்கு நன்றாகவே சிரிக்கத் தெரியும். அவ்வையாரே நகைச்சுவையுணர்வோடு தான் வாழவும் எழுதவும் செய்தார். நகைச்சுவை, மனித வாழ்வின் அச்சாரம். அது வாழ்வில் இயல்பாக இருப்பதால் எழுத்திலும் இயல்பாக வந்துவிடுகிறது.

பெண்ணியம் சார்ந்து எழுத வேண்டிய தேவை இன்றும் இருப்பதாக நினைக்கிறீர்களா?

நிச்சயமாக இருக்கிறது. உங்கள் அம்மாவைப் பற்றியும், என் அம்மாவைப் பற்றியும் யார் எழுதியிருக்கிறார்கள்? பெண்ணியம் என்னும் பதம் பேசுபொருள் ஆவதற்கும் முன்பே அவர்களுக்கே தெரியாமல் பலரும் பெண்ணிய சிந்தனையோடு இயங்கியிருக்கிறார்கள். அந்தவகையில் இன்னும் எழுதப்படாத விஷயங்கள் நிறையவே இருக்கின்றன. அண்மையில் எனக்கு ஒரு மராட்டிய குடும்பத்தில் இருந்து அழைப்புவந்தது. “எங்கள் பாட்டி, இரண்டாவது உலகப்போரின் போது பர்மாவில் இருந்து நடந்தே இந்தியாவுக்கு வந்தார்கள். அதை ஆவணப்படுத்த முடியுமா?” எனக் கேட்டார்கள். நானும், என் அமைப்பினரும் உடனே நேரில் போய் அதை ஆவணப்படுத்தினோம்.


இதைச் சொன்னதும் நண்பர் ஒருவர், “பர்மாவில் இருந்து நடந்தே இந்தியா வருவதில் என்ன பெண்ணியம் இருக்கிறது?” எனக் கேட்டார். “அதில் இல்லைதான். ஆனால், அப்படி வந்தவரை ஆவணப்படுத்த வேண்டும் என்னும் எண்ணத்தில் பெண்ணியம் இருக்கிறது” என்றேன். இந்த நுட்பமான விஷயத்தை நாம் தலைமுறை கடந்து, கடத்த வேண்டிய தேவை இன்னும் இருக்கிறது. பெண்ணிய எழுத்துக்கான தேவை இன்னும் இருக்கிறது.

புதிதாக எழுத வருபவர்களுக்கு நீங்கள் சொல்லும் அறிவுரை என்ன?

வயதாகிவிட்டது என்றாலோ விருது வாங்கிவிட்டாலோ அறிவுரை சொல்லத்தான் வேண்டுமா? என்னைக் கேட்டால் அறிவுரைகள் சொல்வதே தேவையற்றது. எழுதுவதற்கு ஏன் வரவேண்டும்? எதற்கு வந்தோம் எனத் தெரிந்துதான் எழுத வருகிறார்கள். வந்த நோக்கத்தில் அவர்கள் தெளிவாக இயங்கினாலே போதும்.

இப்போது என்ன எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்?

1950-களில் மிகத்தீவிரமாக இயங்கிய பெண் எழுத்தாளர் சரோஜா ராமமூர்த்தி. சுதந்திரப் போராட்டத்திலும் கலந்து கொண்டு சிறை சென்றிருக்கிறார். இவரது கணவர் து.ராமமூர்த்தியும் பிரபல எழுத்தாளர்தான். சரோஜா ராமமூர்த்தியும், நானும் நெருங்கிய நட்பில் இருந்தோம். அவர் இப்போது உயிருடன் இல்லை. அவரது கதைகளில் நான் தேர்ந்தெடுத்த சிறுகதைகளை நூல் வடிவில் கொண்டுவருகிறேன். அவரது கணவர் து.ராமமூர்த்தியும் இப்போது உயிருடன் இல்லை. ஆனால், அவர் முன்னரே எனக்கு இந்த நூலுக்கு முன்னுரை எழுதித்தந்துவிட்டார். அந்த நூலை விரைவில் கொண்டுவர வேண்டிய தோழமைக் கடமை எனக்கு இருக்கிறது. அதில்தான் இப்போது கவனம் செலுத்திவருகிறேன்.

விருதைப் பெற்றுத் தந்த படைப்பு...
விருதைப் பெற்றுத் தந்த படைப்பு...

சாகித்ய அகாடமி விருது பெற்ற தருணம் எப்படி இருந்தது?

ஒரு கட்டத்துக்கு மேல் நாம் செல்லும்போது விருதுகள் நம்மை அதிர்வுக்குள்ளாக்குவதில்லை. மனம் பக்குவம் அடைந்துவிடும். இந்தத் தருணத்தில் பூரித்துப் போகவில்லை. அதேநேரம், நான் பெரிதும் மதிக்கும் படைப்பாளிகள் ஞானக்கூத்தன், சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன் போன்றோருக்கு கிடைக்காத விருது, எனக்குக் கிடைத்திருப்பதில் சிறு கூச்சம் இருக்கிறது.

உங்கள் இலக்கியப் பங்களிப்புக்கு தாமதமாகவே விருது அங்கீகாரம் வந்திருப்பதாக படைப்புலகில் பேசப்படுகிறதே?

விருது வரும்போது வந்துவிட்டு போகட்டுமே என்பதுதான் என் மனநிலை. நான் இந்த விருது கிடைக்கும் என எதிர்பார்ப்பும் வைத்தது இல்லை. என்னை பெரிய ஆளுமையாக நினைத்துக் கொள்வதும் இல்லை. ஒவ்வொரு ஆண்டும் விருதுக்காக எழுதத் தொடங்கினால் பொறாமை குணம் மனதில் குடிகொண்டுவிடும். நான் என் எழுத்துகளில் மகிழ்ச்சி அடைகிறேன். மகிழ்ந்து எழுதுகிறேன். அவ்வளவுதான்

தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேசுவோம். சமூகப்பணிக்காக குழந்தை பெற்றுக்கொள்ளக்கூடாது என்னும் நிபந்தனையோடு தான் திருமணமே செய்தீர்களாமே?

என் இணையர் விஷ்ணு, திருமணத்தின் போது அரசுப்பணியில் இருந்தார். நான் கல்லூரியில் ஆசிரியைப் பணியில் இருந்தேன். இருவருக்குள்ளும் ஒரு கனவு இருந்தது. அவர் அரசு வேலையை விட்டுவிட்டு திரைப்பட இயக்குநராக உருவாகி சுதந்திரமாக செயல்பட நினைத்தார். நான் ஆய்வுகள் செய்ய விரும்பினேன். இப்படியான சூழலில் திருமணம் செய்துவிட்டு குழந்தைகள் பெற்றுக்கொண்டால், எப்படி இந்தச் சூழலை எதிர்கொள்ள முடியும்? இதே நாம் இருவராக மட்டுமே இருந்தால் ரொட்டியும், மோரும் குடித்துக்கூட பணி செய்துகொள்ள முடியும் எனத் தோன்றியது. இந்த உடன்படிக்கையில் இருவருக்குள்ளும் தனிப்பட்ட லட்சியங்கள் இருந்தன.

லட்சுமி அம்பையானது ஏன்?

1950-களில் ஆனந்தவிகடனில் ஆசிரியராக இருந்த தேவன், ‘பார்வதியின் சங்கல்பம்’ என்னும் பெயரில் ஒரு கதையை எழுதியிருப்பார். அதில் பார்வதி என்ற பெண், எளிமையான குடும்பத்தில் பிறந்தவர். அவளது கணவனுக்கோ இவள் பொருளாதாரத்தில் பின் தங்கியவள், படிக்காதவள் என்னும் அகந்தை பிடித்து ஆட்டும். ஒருகட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறிய பார்வதி 'அம்பை' என்னும் பெயரில் படைப்புகளை எழுதத் தொடங்குவதாக கதை நகரும். அன்றைய காலத்தில் இது எவ்வளவு முற்போக்கான பாத்திர வார்ப்பு பாருங்கள். அந்தக் கதை என்னுள் ஏற்படுத்திய தாக்கமே என் பெயரை, அம்பை என மாற்றினேன்.

இதேபோல் மகாபாரதத்தில் வரும் பெண் கதாபாத்திரங்களில் முக்கியப் பங்கை வகிப்பவள் அம்பை. காசிராஜனின் மூத்த மகளாக ஒரு ராஜகுமாரியாக மட்டும் அறிமுகம் ஆகும் அம்பையின் பாத்திரம் பின்பு மகாபாராத வரலாற்றில் முக்கிய இடத்தைப் பிடிக்கும். அரச குடும்பத்தில் பிறந்தவள், சுயம்வரத்தால் வாழ்க்கை இழந்து சிவனை நோக்கித் தவம் செய்து சிகண்டியாக மறுபிறவி எடுத்து, பீஷ்மரைக் கொல்லும் பாத்திரம் அது. இரு பிறவிக்குரிய தன்மையிலும், ஆண், பெண் இரு நிலையிலும் அந்தத் தன்மை இருக்கும். அதனாலும் அம்பை என்னும் பெயரைத் தேர்ந்தெடுத்தேன்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in