தமிழக அரசின் விருதைப் பற்றி நாம் பேசுவதே இல்லை!

செவாலியே விருதுபெற்ற காலச்சுவடு கண்ணன் பேட்டி
காலச்சுவடு கண்ணன்
காலச்சுவடு கண்ணன்

நாகர்கோவில் காலச்சுவடு அலுவலகம் களைகட்டியுள்ளது. பிரெஞ்சு அரசு காலச்சுவடு பதிப்பகத்தின் ஆசிரியரும், ஊடகவியலாளருமான கண்ணனுக்கு செவாலியே விருது வழங்கும் செய்தியை அறிவித்த நொடியில் இருந்து வாழ்த்துச் செய்திகளால் நனைந்து கொண்டிருந்த கண்ணனிடம் காமதேனு மின்னிதழுக்காகப் பேசினோம்.

பிரெஞ்சு அரசிடமிருந்து இவ்வளவு பெரிய அங்கீகாரம் கிடைக்கும் என எதிர்பார்த்தீர்களா?

பிரெஞ்சு அரசிடம் இருந்து மட்டுமல்ல. ஒரு பதிப்பாளன் என்னும் முறையில் எந்த அங்கீகாரமும் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எனக்கு இருந்ததில்லை. ஒரு பதிப்பாளரின் பணிக்கு அனேக விருதுகள் இருப்பதாகவும் எனக்குத் தெரியவில்லை. கோவாவில் இருக்கும் பப்ளிஷிங் நெஸ்ட் என்ற அமைப்பு ஆண்டு தோறும் பதிப்புத்துறை சார்ந்து விருதுகளை வழங்கிவருகின்றனர். அதற்கு சன்மானம் கிடையாது என்றாலும் தேர்ந்த ஒரு தேர்வுக் குழுவினர் மூலமாக தேர்வு செய்வார்கள் என்பதால் அந்த விருதுக்கு பெரிய அளவில் மரியாதை உண்டு. இந்தியாவின் சிறந்த பதிப்பகம் என அவர்கள் வழங்கும் விருதை காலச்சுவடு 2018-ல் பெற்றது. அதற்கு முன்னரும் பின்னரும் அந்த விருதைப் பெற்றவர்கள் அனைவருமே பன்னாட்டு ஆங்கில பதிப்பாளர்கள்.

அதைத் தாண்டி பதிப்பாளர்களுக்கு உலக அளவிலேயே பெரிய விருதுகள் இருப்பதாக நான் நினைக்கவில்லை. அப்படியே இருந்தாலும் அது ஒரு தமிழ்ப்பதிப்பாளனை நோக்கிவரும் என்று நான் எண்ணியதும் இல்லை. செவாலியே விருது எனக்கு முன்பாக மூன்று இந்திய, ஆங்கில பதிப்பாளர்களுக்குக் கொடுத்திருக்கிறார்கள் என்பதை எனக்கு விருதுகொடுத்த பின்புதான் நான் தெரிந்துகொண்டேன்.

நாங்கள் குடும்பமாக திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலுக்குச் சென்றுகொண்டிருந்தோம். பேராசிரியர் அ.கா.பெருமாளும் உடனிருந்தார். எதேச்சையாக செல்போனை எடுத்துப் பார்த்தபோது மின்னஞ்சல் வந்திருந்தது. நான் முதலில் அதை செவாலியே விருது எனவும் புரிந்துகொள்ளவில்லை. ஏதோ ஒருவகையில் கெளரவம் செய்வதாக மட்டுமே என் குடும்பத்தினரிடம் பகிர்ந்தேன்.

சிறிதுநேரத்தில் வரிசையாக நண்பர்கள் அழைப்பதும், பாராட்டுவதுமாக இருந்தது, அதன்பின்புதான் செவாலியே விருது என தெரிந்துகொண்டேன். தேர்வு விதிமுறைகள்கூட எனக்குத் தெரியாத நிலையில் அவர்களே என் பணிகளைக் கவனித்து இப்படியொரு விருதைக் கொடுத்திருப்பது நல்ல கெளரவமாகப்பட்டது.

தென்னிந்தியாவில் முதன்முறையாக ஒரு தமிழ் பதிப்பாளருக்கு இவ்விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி. இந்த விருது இத்தனை புகழ்வாய்ந்ததாக கருதப்படுவதற்கு நடிகர் சிவாஜி கணேசனுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும். அவர் இல்லையென்றால் இந்த விருது இத்தனை பரந்துபட்ட தளத்தில் போய் சேர்ந்திருக்கிறாது. வாழ்த்துச் சொல்பவர்களில் சிலர்கூட செவாலியே சிவாஜி விருதுக்கு வாழ்த்துகள் எனச் சொல்கிறார்கள்.

இலக்கிய உலகிலும் இது பெரும் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியிருப்பதை கவனித்தீர்களா?

எனக்குத் தெரிந்த இலக்கிய வட்டத்தில் தொடர்புகொள்ளாதவர்களே இல்லை என்றே நினைக்கிறேன். பதிப்பாளருக்குத்தான் இது முதல் முறையே தவிர, தமிழனுக்குக் கிடைத்த முதல்விருது அல்ல. பிரெஞ்சு, இந்தியப் பதிப்புத்துறையை நெருக்கிக் கொண்டுவந்ததற்காகவும், பரஸ்பரம் ஒத்துழைப்பை ஏற்படுத்தியதற்காகவும் இந்த விருது எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள். எனக்கு பிரெஞ்சு பதிப்புத்துறையோடு 15 ஆண்டுகால உறவு இருக்கிறது. அதை சார்ந்து பலபணிகள் நடந்திருக்கின்றன. எனக்குத் தெரிந்தவரை எந்த இந்திய மொழியிலும், பத்து, பன்னிரண்டு ஆண்டுக்குள் 15 பிரெஞ்சு நூல்களை வெளியிட்ட பதிப்பாளர்கள் இல்லை. இதேபோல் சில தமிழ்படைப்புகளையும் பிரெஞ்சுக்குக் கொண்டு சென்றுள்ளோம்.

எங்களின் செயல்பாடுக்குப் பின்னால் இருக்கக்கூடிய (கண்ணனின் தந்தை சுந்தர ராமசாமி) சுரா கண்ட கனவின் இன்னொரு சாதனை என இதை எடுத்துக்கொள்ளலாம். அவரது பங்களிப்புக்கு அவருக்கு இதுபோன்ற பன்னாட்டு விருது மட்டுமல்ல, தமிழ் சமூகம் சார்ந்தும் எந்த விருதும் கிடைக்கவில்லை. டெல்லியில் ஒரு அமைப்பும், இலங்கைத் தமிழர்கள் இயல்விருதும் கொடுத்தார்கள். தமிழக அரசோ, தமிழ் சமூகமோ அவரைக் கண்டுகொள்ளவில்லை. அது நடக்கவில்லை என்ற வருத்தத்தை மறந்துவிட முடியாது. அதேசமயம், இன்றைய காலக்கட்டத்தில் முக்கியமான படைப்பாளிகளை வாசகர்களிடம் கொண்டு சேர்த்து சமூகம் அவர்களைக் கண்டுகொள்ள வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்தும் பணியை காலச்சுவடு செய்வதில் மகிழ்ச்சி!

பொறியியல் பட்டதாரியான நீங்கள் உங்கள் அப்பாவால் துவக்கப்பட்ட காலச்சுவடு என்னும் இலக்கியப் பணியை எப்படி சுமந்தீர்கள்?

காலச்சுவடை அப்பா நடத்தும்போது நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். காலச்சுவடை பொறுத்தவரை சிறுபத்திரிகை மரபில் தமிழில் வந்த சத்தான கடைசி கண்ணி என்று சொல்லலாம். அதன்பின் பல்வேறு முயற்சிகள் நடந்திருக்கின்றன. அதை நான் மறுக்கவும் முடியாது. ஆனால், பெருமுயற்சியாக கடைசியாக வந்த பத்திரிகை சுராவின் காலச்சுவடு என்று சொல்லலாம். நான் ஒரு பத்திரிகை நடத்தவேண்டும் என விரும்பித் தொடங்கியபோது என்னுடைய கனவு ஒரு சிறுபத்திரிகை நடத்துவது அல்ல. இதை தலையங்கத்திலேயே எழுதினோம். சிறுபத்திரிகை என்னும் வார்த்தையைத் தவிர்த்து, இதை ஒரு தீவிர இதழ் என்றே ஆரம்பத்தில் இருந்தே குறிப்பிட்டு வந்திருக்கிறோம். ஒரு சிறுபத்திரிகையின் வரையறைக்குள் இதன் உள்ளடக்கம் எப்போதுமே இருந்ததில்லை.

பொறியியல் துறையை விட பத்திரிகைத்துறையில் எனக்கு ஆர்வம் அதிகம். நான் படித்த காலத்தில் பத்திரிகைத்துறை சார்ந்த படிப்புகளைத் தெரிந்திருக்கவில்லை. கலை அறிவியல் கல்லூரி, அதைவிட்டால் மருத்துவம், பொறியியல் என்னும் காலக்கட்டம் அது. ஆனால், பிரிட்டிஷ் கவுன்சில் போன்ற இடங்களுக்குச் சென்று எல்லா பத்திரிகைகளையும் படித்து, வாசிப்பின் வழியாக பத்திரிகைக்கான சட்டகத்தை உருவாக்கினேன்.

சென்னை போன்ற பெருநகரங்களில் தான் பெரும்பான்மையான பதிப்பகங்கள் இருக்கின்றன. கடைக்கோடி நாகர்கோவிலில் இருந்துகொண்டு காலச்சுவடை கவனிக்கவைத்தது எப்படி?

அதற்குக் காரணம், தொழில்நுட்பம்தான். இதே காலச்சுவடு 1980-களில் வருவதாக இருந்தால் ஒரு பத்திரிகையை வேண்டுமானால் கொண்டுவந்திருக்கலாம். ஒரு பதிப்பகம் என யோசிக்கும்போது அது சிக்கலையோ, அல்லது வெவ்வேறு ஏற்பாடுகள் செய்ய வேண்டிய சூழலையோ ஏற்படுத்தியிருக்கும். எனக்கு பெருநகருக்குள் சென்று வாழும் விருப்பம் எப்போதுமே இருந்ததில்லை. நான் பயணிப்பதை பெரிதும் விரும்புபவன். மாதம் தோறும் காலச்சுவடுக்காக சென்னை சென்றபோதுகூட எனக்கு அது சோர்வைத் தந்ததில்லை. எங்கே பயணித்தாலும் அடித்தளம் நாகர்கோவில் என்பதில் உறுதியாக இருந்தேன். அதைத்தாண்டி வேறு திட்டம் இல்லை.

கணினி, டிடிபி, ஆப்செட் தொழில்நுட்பங்கள் 90-களிலேயே தொடங்கிவிட்டதால் இங்கிருந்தே பணி செய்யும் வாய்ப்பு சாத்தியமானது. தொலைபேசி புரட்சியில் இருந்து, இணையப் புரட்சிவரை உள்ளூரையே உலகம் ஆக்கிவிட்டது.

முதல்வர் வாழ்த்துப் பதிவிட்டிருந்தார்... அமைச்சர் மனோ தங்கராஜ் நேரில் வந்தே வாழ்த்தினார். இலக்கியம் தமிழகத்தில் தழைக்கிறது போலயே..?

அரசியல் இலக்கியப் பண்பாட்டு மரபில் இந்தக் காலக்கட்டத்திற்கு முன் எப்போதும் இலக்கியவாதிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையே பெரிய தொடர்பு இருந்ததே இல்லை. தமிழின் மிகமுக்கிய எழுத்தாளர்கள் யாருமே தமிழக அரசின் விருதைப் பெற்றிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. நாம் மீண்டும், மீண்டும் சாகித்ய அகாடமி, ஞானபீட விருது தொடர்பிலேயே கேள்வி எழுப்புகிறோம். தமிழக அரசின் விருதைப்பற்றி நாம் பேசுவதே இல்லை. அந்த எதிர்பார்ப்புக்கூட இல்லாமல் இருந்த சூழலில், ஒரு மாற்றம் தெரிகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் படைப்பாளிகள் முக்கிய விருதுகள் பெரும்போது வாழ்த்துவதை நான் வரவேற்கிறேன். இந்த விருதுக்காகவும் முதல்வர் வாழ்த்துவார் என நான் எதிர்பார்க்கவே இல்லை. அதுவும் இன்ப அதிர்ச்சியாகவே இருந்தது. முதல்வர் வாழ்த்தியதால் இந்த விஷயம் பெரியவட்டத்திற்குச் சென்றது. அதற்காக முதல்வருக்கு நன்றி!

அமைச்சர் மனோதங்கராஜ் அரசியலுக்கு அப்பாற்பட்டு என் 15 ஆண்டுகால நண்பர். அதனால் அவர் வந்து வாழ்த்துவதென்பது இயல்பான விஷயம். இவையெல்லாம் இலக்கியத்திற்கும் அரசியலுக்கும் இடையே ஏற்படும் புதிய நெருக்கமாகவே பார்க்கிறேன்.

இந்த தலைமுறையில் வாசிப்புப் பழக்கம் குறைந்துவிட்டதாகக் கூறப்படுவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

இது மறுக்க வேண்டியது மட்டுமல்ல. அப்படிச் சொல்பவர்களைக் கண்டிக்கவும் வேண்டும். நம் கண்முன்னே சென்னை புத்தகச் சந்தை மிகப்பெரிய வெற்றிபெறுகிறது. அனைத்து மாவட்டங்களிலும் அரசே புத்தகச் சந்தையை கொண்டு செல்கிறது. இந்தச் சந்தைகள் முதியோர்களையோ, ஓய்வுபெற்றவர்களை நம்பியோ நடப்பதில்லை. இன்றைய தலைமுறையிடம் வாசிப்புப் பழக்கம் போதுமான அளவுக்கு இல்லை எனச் சொல்வது வேண்டுமானால் நியாயமாக இருக்கலாம். வாசிப்பதில்லை எனச் சொல்வது சமகாலத்தோடு தொடர்பை இழந்தவர்களின் புலம்பல் என்றுதான் சொல்வேன். அது ஒதுக்கப்பட வேண்டியது.

வாசிப்புப் பழக்கம் சற்றே குறைவாக இருப்பதற்குக் காரணம் இளைஞர்கள் அல்ல. நம் கல்விமுறைதான். கல்விக்கு அப்பாற்பட்ட புத்தகங்களை மாணவர்கள் வாசிக்க வேண்டும் என்னும் கருத்தை பெற்றோர்களும், கல்விமுறையும் ஏற்படுத்துவதில்லை. முழுக் கவனமும் படிப்பில் இருப்பதுதான் காரணம்.

புத்தகம் என்பது ஒரு சாதனம். அச்சு என்பது ஒரு காலக்கட்டத்தில் உருவான தொழில்நுட்பம். இப்படித்தான் படிக்க வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. புத்தகம் என்பது அதன் உள்ளடக்கம். அதன் வடிவம் அல்ல. இப்போது ஒலி வடிவிலும் புத்தகம் வருகிறது. உள்ளடக்கமே முக்கியம். புதுப்புதுத் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வாசிப்பை ஊக்கப்படுத்துவதே பதிப்பாளரின் பணி.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in