என் மக்களின் அன்புக்கு எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை!

– கண்மணி குணசேகரன் நெகிழ்ச்சி
என் மக்களின் அன்புக்கு எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை!
கண்மணி குணசேகரன்

எழுத்தாளர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படுவார்கள் என்பது உண்மைதான். ஆனாலும் மிக அதிகமான உணர்ச்சிக் கொந்தளிப்பும் நெகிழ்ச்சியுமாக இருக்கிறார் நடுநாட்டு எழுத்தாளர் கண்மணி குணசேகரன்.

அரசுப் போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் கண்மணி குணசேகரன், யதார்த்த எழுத்துக்குச் சொந்தக்காரர். வட்டார வழக்குச் சொற்களை தொகுத்து அகராதியாக்கியவர்களில் மிக முக்கியமானவர். கரிசல் சொற்களை கி.ராஜநாராயணனும், கொங்கு வட்டாரச் சொற்களை பெருமாள்முருகனும், நெல்லை வட்டாரச் சொற்களை அ.கா.பெருமாளும் சேகரித்து தொகுத்திருப்பது போல, நடுநாட்டு மக்களின் வழக்குச் சொற்களைத் தொகுத்திருப்பவர்.

திருக்கோயிலூர் தொடங்கி, கடலூர், சிதம்பரம், பரங்கிப்பேட்டை வரை அடங்கிய ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டப் பகுதிகளில், மக்களிடையே புழக்கத்தில் உள்ள வட்டாரச் சொற்களை நடுநாட்டு சொல்லகராதியாக தொகுத்தவர் கண்மணி.

வட்டார மொழி தொகுப்பாளராக மட்டுமில்லாமல், அம்மொழியிலேயே தொடர்ந்து எழுதியும் வருகிறார். இவரது கவிதை தொகுப்புகள், சிறுகதைத் தொகுப்புகள், நாவல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. அஞ்சலை, நெடுஞ்சாலை, ஆகிய நாவல்கள் பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டிருக்கின்றன.

வன்னியரான கண்மணி குணசேகரன், தன்னுடைய எழுத்தால் மட்டுமே தான் அறியப்பட வேண்டும் என்று விரும்புகிறவர். ஆனாலும் அவர் அறியாமல் அவரது சமுதாயம் அவர் மீது படிமமாக படிந்திருக்கிறது. பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் மீது இவரும், இவர் மீது அவர்களும் பரஸ்பரம் அன்பு வைத்திருக்கிறார்கள்.

இந்நிலையில்தான் ‘ஜெய் பீம்’ பட சர்ச்சையில் கண்மணி தன்னையும் அறியாமலேயே சிக்கிக் கொண்டார். ஜெய் பீம் படத்துக்கு நடுநாட்டு பேச்சுவழக்கு உரையாடலை எழுதிக்கொடுத்த கண்மணி குணசேகரனுக்கு, அதற்காக ரூ.50 ஆயிரம் அந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனத்தால் ஊதியமாக தரப்பட்டது. இந்நிலையில், படத்தின் ஒரு காட்சியில் இடம்பெற்ற அந்தக் காலண்டரை வைத்து வன்னியர்களை இழிவுபடுத்தி விட்டதாக ஜெய் பீம் படக்குழுவுக்கு எதிராக வன்னியர்கள் மத்தியில் சர்ச்சை வெடித்தது. அப்போது, “கண்மணிதானே உரையாடல் எழுதியிருக்கிறார்... அவருக்கு இது தெரியாதா?” என்பதாகவும் சிலர் விமர்சித்தனர்.

அந்தச் சிறுபேச்சையும் தாங்கிக்கொள்ள இயலாத கண்மணி குணசேகரன், தனது முகநூல் பக்கத்தில் படக்குழுவின் மீதான தனது வருத்தத்தை உடனே பதிவு செய்தார். அதைப்பார்த்த ஜெய் பீம் இயக்குநர் த.செ.ஞானவேல், “படத்தில் அந்த காட்சியிலிருக்கும் காலண்டர் மாற்றப்பட்டுவிடும்” என்று உறுதியளித்தார்; அதன்படி காலண்டரும் மாற்றப்பட்டது. ஆனாலும், ‘எலிவேட்டை’ என்ற தலைப்பை மாற்றி ஜெய் பீம் என்று வைத்தது, படத்திலுள்ள எதிர்மறை கதாபாத்திரம் ஒன்றுக்கு குணசேகரன் என்று தன்னுடைய பெயரை வைத்திருப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களைச் சுட்டிக்காட்டி, தனக்கு ஊதியமாகக் கொடுக்கப்பட்டரூ. 50 ஆயிரம் சம்பளத்தை, காசோலையாக நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2 டி நிறுவனத்துக்கே திருப்பி அனுப்பிவிட்டார் கண்மணி குணசேகரன்.

கண்மணி திருப்பி அனுப்பிய காசோலை
கண்மணி திருப்பி அனுப்பிய காசோலை

அதோடு முடிந்துபோனது விஷயம் என்றிருந்தார் கண்மணி. ஆனால், அதற்குப் பிறகான தொடர் நிகழ்வுகள்தான் அவரை நெகிழ்ச்சிக்கும், மகிழ்ச்சிக்கும் உள்ளாக்கியிருக்கின்றன. அவரது சமூகத்தின்பால் அவருக்கு அன்பை அதிகப்படுத்தியிருக்கிறது. தனக்குப் பாதுகாப்பாக தனக்குப் பின்னால் தனது சமூகம் இருக்கிறது என்ற உணர்வையும் அவருக்கு ஏற்படுத்தி இருக்கிறது.

ஜெய் பீம் படத்தில்...
ஜெய் பீம் படத்தில்...

அப்படி என்ன நடந்தது?

சமூகத்தின் நற்பெயரை காப்பதற்காகத்தானே அவருக்கு கிடைத்த ஊதியத்தையே தன்மானத்துடன் அவர் திரும்பக் கொடுத்தார் என்று கருதிய வன்னியர்கள், ‘50 ஆயிரம் ரூபாய் என்பது கண்மணிக்கு பெரிய தொகையாயிற்றே, அதை திருப்பிக் கொடுத்துவிட்டு என்ன செய்வார்?’ என்ற தவிப்பில் தங்களால் இயன்றதை நூறு, இருநூறு, ஐநூறு, ஆயிரம் என்று கண்மணிக்கு அனுப்பி வைத்தனர். அவர் எவ்வளவோ மறுத்தும்கூட அவரது கைகளில் வலுக்கட்டாயமாக பணத்தை திணித்துவிட்டு சென்றவர்களும் உண்டு. இதனால் ஒருவித தர்மசங்கடத்தில் தவித்து வந்தார் கண்மணி.

கண்மணிக்கு ஐம்பதாயிரம் காசோலை வழங்கிய போது...
கண்மணிக்கு ஐம்பதாயிரம் காசோலை வழங்கிய போது...

இந்நிலையில் அண்மையில், முன் முற்போக்கு சமூகநீதிப் பேரவையைச் சார்ந்த மருத்துவர் விமுனாமூர்த்தி, இறைவன், பேராசிரியர் த.பழமலய், பொன். ஆறுமுகம், கனக வாசு உள்ளிட்டோர் கண்மணியைத் தேடிவந்து சந்தித்திருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் பொதுவெளியில் வன்னிய சமூகம் சார்ந்த செயற்பாட்டாளர்கள். கண்டியங்குப்பம் வந்த இவர்கள், ஜெய் பீம் விவகாரம் குறித்தும் அந்தப் படத்தை வைத்து உருவாக்கப்பட்ட தேவையற்ற சர்ச்சைகள் குறித்தும் நீண்ட நேரம் பேசி இருக்கிறார்கள். நிறைவாக, “இது திரையுலக வஞ்சகர்களின் சூழ்ச்சி. இதைப் பொருட்படுத்த வேண்டாம்” என்று கண்மணிக்கு ஆறுதல் சொல்லியதுடன், அவர் மறுத்தும் கேட்காமல் ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையையும் அவரிடம் தந்துவிட்டுப் போயிருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட விஷயங்கள்தான் கண்மணியை ரொம்பவே நெகிழவைத்திருக்கின்றன. இது விஷயமாக நாம் அவரைத் தொடர்பு கொண்டபோது, மிகவும் உணர்ச்சிவசப்பட்டவராகப் பேசினார்.

‘’இந்தச் சமூக மக்கள் விவசாயம் சார்ந்தவர்கள். தெருக்கூத்து, விவசாயம் இரண்டும்தான் அவர்களுக்குத் தெரியும். கோடைக்காலங்களில் தங்களுக்குள்ளாக குழுக்களை அமைத்து கூத்து நடத்துவார்கள். அதைத் தாண்டிய இலக்கிய அறிவு என்பது மக்களுக்கு இல்லை. இலக்கியம் சார்ந்து இயங்கும் ஒருசிலர் நம்மிடம் இருக்கிறார்கள் என்பதை இந்த மக்கள் கண்டுகொண்ட தருணம் இது.

இந்த நிகழ்வானது சமூகத்துக்கு என்னையும், எனக்கு சமூகத்தையும் நெருக்கமாக்கி இருக்கிறது. உனக்கு ஒன்று என்றால் நாங்கள் இருக்கிறோம் என்று பலரும் முன்வந்திருக்கிறார்கள். நம் சமூகத்தில் இப்படி ஒருவன் இருக்கிறான் என்று பலருக்கும் புரியவைத்திருக்கிறது. அதனால், அவர்கள் இப்போது எனது எழுத்துகளையும் தேட ஆரம்பித்து விட்டார்கள். அதோடு மட்டுமில்லாமல், நாங்கள் இருக்கிறோம் என்பதை மெய்ப்பிக்கும் விதமாக நான் திருப்பிக் கொடுத்த பணத்தை விட, இருமடங்கு பணத்தை இந்த சமூகத்தினர், அதுவும் சாமானிய மக்கள் எனக்குத் தந்திருக்கிறார்கள்.

அவர்களது அன்புக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. நடுநாட்டு வன்னியர்களின் வாழ்க்கை முறையைப் பிரதிபலிக்கும் விதமாக ‘வந்தாரங்குடி’ என்ற நாவல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் எழுதினேன். அது 850 ரூபாய் விலை. இந்த மக்களின் அன்புக்கு பிரதியுபகாரமாக அதை 250 ரூபாய் விலையில் மலிவுவிலைப் பதிப்பாக புதுப்பித்து அந்த மக்களிடம் கொண்டு சேர்க்கப் போகிறேன். நடுநாட்டுக்கான எனது எழுத்து இன்னும் வலிமை பெறும்” என்று நெகிழ்கிறார் இந்த சாமானியர்களின் எழுத்தாளர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in