கவிஞர் மித்ராவைக் கொண்டாடிய துளிப்பா கவிஞர்கள்!

கவிஞர் மித்ராவைக் கொண்டாடிய துளிப்பா கவிஞர்கள்!
கவிஞர் மித்ரா

கவிதையை நேசித்தவருக்கு நினைவாக வேறு எதை தந்துவிட முடியும்... கவிதையைத் தவிர? அப்படித்தான் சிதம்பரத்தைச் சேர்ந்த ஹைக்கூ முன்னோடிக் கவிஞர் மித்ராவுக்கு துளிப்பா (ஹைக்கூ)க்களால் நினைவேந்தல் நடத்தினார்கள், அவரிடம் கற்ற மாணாக்கர்களும், அவரைத் தொடரும் கவிஞர்களும்.

கவிஞர் மித்ரா
கவிஞர் மித்ரா

’அடிக்க அடிக்க/ அதிரும் பறை/ தலைமுறைக்கோபம்’.

’அணிலே நகங்களை வெட்டு/ பூவின் முகத்தில் / காயங்கள்’

’கடலில் நீந்துவதாய்/ கனவு காண்கின்றன/ தொட்டி மீன்கள்’

’உறவை மறந்து/ தத்தெடுத்தால்/ தழைக்கும் சந்ததி’ –

இவையெல்லாம் கவிஞர் மித்ராவின் துளிப்பாக்களில் அடையாளம் சொல்லக்கூடிய சில.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறையில் பணியாற்றியவர், முதுமுனைவர் மித்ரா என்னும் உண்ணாமலை அம்மாள். அண்ணாமலையில் முதுமுனைவர் பட்டம் பெற்ற முதல் நபரும் இவர்தான். மிகச்சிறந்த இலக்கியவாதியான இவர் இலக்கியங்கள் குறித்த ஆய்வுகள், வள்ளலார் நெறிகுறித்த ஆய்வுகள் உட்பட பலவற்றில் ஆய்வுகள் செய்திருக்கிறார். மரபுக்கவிதை, புதுக்கவிதை தொகுப்புகள் வெளியிட்டிருக்கிறார். ஆனாலும் இவர் துளிப்பாக்களால் மட்டுமே கொண்டாடப்படுகிறார்.

மித்ரா  துளிப்பா விருது (2021) பெற்ற  கவிஞர் ராஜிலா ரிஜ்வான்
மித்ரா துளிப்பா விருது (2021) பெற்ற கவிஞர் ராஜிலா ரிஜ்வான்

துளிப்பாக்களுக்கு அவர் பெரும் முன்னோடியாக விளங்கினார். மவுனம் சுமக்கும் வானம், குடையில் கேட்ட பேச்சு என்ற இவரது துளிப்பா தொகுப்புகள் கவியுலகில் அதிகம் போற்றப்படுபவை. துளிப்பா உலகில் மித்ரா சென்றிருப்பது மிகவும் அதிகதூரம். கவிஞர் நிர்மலாசுரேஷ் துளிப்பாவில் ஆராய்ச்சி படிப்பை முடித்தபோதுதான், இப்படி ஒருவர் இயங்குகிறார் என்பதே கவியுலகுக்குத் தெரியவந்தது. அதன்பின், இவரை நாடிவந்தவர்கள் ஏராளம்பேர் இவரால் ஆராய்ச்சி படிப்பை முடித்திருக்கிறார்கள்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தபோது மித்ரா, தனது மாணவர்களுக்கு கவிதையாலும், உணர்வாலும் தாயாக விளங்கியிருக்கிறார். யாரும் பசியென்றோ, வறுமையென்றோ வந்துவிடக்கூடாது. அவர்களின் வாட்டம் போக்குவதையே தனது முதல் பணியாக செய்தவர். மாணவர்களை படைப்புகள் படைக்க ஊக்குவித்தார். அவற்றை புத்தகங்களாகவும் கொண்டு வந்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட இடங்களில் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பையும் ஏற்படுத்தித் தந்தார். இலக்கியம் குறித்த எந்த சந்தேகத்தையும் போக்கிய மித்ரா, அதுகுறித்த வழிகாட்டுதல்களை வரையாது வழங்கினார்.

மித்ரா துளிப்பா விருது (2021) பெறும் கவிஞர் உமா (எ) உ.மாதவன்
மித்ரா துளிப்பா விருது (2021) பெறும் கவிஞர் உமா (எ) உ.மாதவன்

மித்ராவின் பணிகளை உள்ளூரில் யாரும் அங்கீகரிக்கவில்லை என்றாலும் அமெரிக்கா அங்கீகரித்தது. 2000-மாவது ஆண்டில் ’சிறந்த பெண்மணி’ என்ற விருதை மித்ராவுக்கு அளித்து பாராட்டியிருக்கிறது.

அதைக்கூட பல்கலையோ, தமிழ் கவியுலகமோ கொண்டாடவில்லை. அதையும் அவர் பொருட்படுத்தாமல் தன் கடன் பணி செய்து கிடந்தார். கடந்த ஆண்டு உடல் நலக்குறைவால் அவர் மரணமடைந்தபோது, பாரதியின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களைவிட சற்றே அதிகம் பேர் கலந்து கொண்டார்கள்.

கடந்த 2014-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் ‘மித்ரா துளிப்பா விருது்’ விழாவை இந்த ஆண்டு, அவரின் நினைவேந்தல் விழாவாகவும் சேர்த்து சிதம்பரம் நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடத்தினார்கள். பல்லவி குமார், மு.முருகேஷ், ம.ரமேஷ் உள்ளிட்ட தமிழகம் முழுவதுமுள்ள பெயர் சொல்லும்படியான துளிப்பா கவிஞர்கள் இந்த நிகழ்வில் பங்கெடுத்துக் கொண்டார்கள். தங்களின் துளிப்பாக்களால் மித்ராவை அவர்கள் தாலாட்டினார்கள்.

விழாவை ஒருங்கிணைத்தவரும், கவிஞர் மித்ரா பெயரால் ஆண்டுதோறும் விருதளிப்பவருமான கவிஞர் செல்லம்பாலாவிடம் இதுகுறித்துப் பேசினோம்.

‘’புகழ்பெற்ற கவிஞர்களுக்கு விருதளித்து விளம்பரம் தேடிக்கொள்வது ஒருவகை. ஆனால், தங்கள் பாக்களால் மட்டுமே வெளியுலகுக்கு அறிமுகமான சிறப்பான படைப்புகளைத் தந்த கவிஞர்களுக்கு விருதளிப்பது இன்னொரு வகை. 2-வது வகையைத்தான் நான் பின்பற்றி வருகிறேன். தொடர்ந்த துளிப்பா செயல்பாடுகள், அவற்றின் சிறப்பு ஆகியவற்றை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு சாமானிய கவிஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த விருது வழங்கப்படுகிறது.

இந்த விருதை யார் பெயரால் வழங்கலாம் என்று ஆராய்ந்தபோது அறிமுகமான பெயர்தான் இந்த மித்ராம்மா. அதுவரை அப்படி ஒருவர் இருக்கிறார் என்பது எனக்கும்கூட தெரியாது. அவரைப்பற்றி தெரிந்துகொண்ட பிறகு, இப்படியும் ஒருவர் இருக்கிறாரா என்ற வியப்பு அதிகம் மேலிட்டது. அவரது துளிப்பாக்கள், துளிப்பா கவிஞர்களுக்கான அடிப்படை பாடம். துளிப்பாக்களுக்கான இலக்கணம். அதனால்தான் அவரது அனுமதியுடன் அவரது பெயரால் விருது வழங்கத் தொடங்கினோம். சிறந்த துளிப்பா கவிஞர்கள் 10 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதுவரையிலும் மித்ராம்மா கையால்தான் இந்த விருது வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு கரோனா காரணமாக அந்த விருது வழங்கப்படவில்லை. அம்மாவும் எங்களைவிட்டு மறைந்தார்கள்.

மித்ரா போட்டி முடிவுகளோடு தூண்டில் காலாண்டிதழ் வெளியீடு
மித்ரா போட்டி முடிவுகளோடு தூண்டில் காலாண்டிதழ் வெளியீடு

அதனால் இந்த ஆண்டு விருது வழங்கும் விழாவை மித்ராம்மாவின் வளர்ப்புமகள் முனைவர் காயத்ரி மற்றும் விழுப்புரம் உலகதுரை, கவி விஜய் ஆகியோர் பங்களிப்புடன் அனைவரின் வேண்டுகோளை ஏற்று நினைவேந்தலாகவும் நடத்தினோம். நாங்கள் எதிர்பார்க்காத அளவுக்கு துளிப்பா கவிஞர்கள் பலரும் பங்கேற்று அவருக்கு புகழ் பாக்களை காணிக்கையாக்கினார்கள். அவரது பெயரால் இந்த விருதைப் பெறுவதை கவிஞர்கள் மிகப்பெருமையாகக் கருதுகிறார்கள்.

இந்த ஆண்டு முதல் 2 கவிஞர்கள் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு மித்ராம்மா பெயரிலான விருதும், 5,000 ரூபாய் ரொக்கமும் வழங்கப்படுகிறது. பொருளாதாரத் தடை உட்பட எவ்விதமான தடைகள் ஏற்பட்டாலும் கவிஞர் மித்ரா அவர்களின் பெயரால் வழங்கப்படும் இந்த விருது வழங்குவதை விடாமல் கொண்டு செல்ல வேண்டும், அதன்மூலம் அவருடைய சிறப்பை உலகறியச் செய்யவேண்டும் என்பதே என்னுடைய லட்சியம்” என்றார் செல்லம்பாலா.

கவிஞர்கள் அதற்கான அங்கீகாரம் கிடைக்காமல் தவிக்கும் இந்த காலத்தில், தனது எழுத்துகளால் துளிப்பாக்களை துளிர்க்கச் செய்த கவிஞர் மித்ராவை வாழும்போதும், வாழ்க்கைக்குப் பின்னரும் போற்றி நிற்கும் அனைவருமே போற்றுதலுக்குரியவர்கள் தான்.

Related Stories

No stories found.