ஈரம்கசிந்த நிலம் சி.ஆர்.ரவீந்திரன்

அலமாரியிலிருந்து...
ஈரம்கசிந்த நிலம் சி.ஆர்.ரவீந்திரன்

‘ஏனுங்க, என்னங்க, ஆமாமுங்க, அப்படித்தானுங்க, ஓரம்பாரமா.. இப்படியெல்லாம் பேச்சு வழக்கில் சொல்லாடும் கொங்கு மண் இலக்கியங்களுக்கு தனி குணம் உண்டு. வட்டார வழக்கில் வெளியான முதல் நாவலே கொங்கு மண் வழக்கில்தான் வெளி வந்தது. அதை எழுதியவர் ஆர். சண்முகசுந்தரம். அந்நாவலின் பெயர் ‘நாகம்மாள்’ அன்று தொடங்கி இன்று வரை கோவை வட்டார வழக்கில் ஏராளமான எழுத்தாளர்கள் உருவாகி எழுதி வந்திருக்கிறார்கள். க.ரத்னம், சிற்பி பாலசுப்பிரமணியம், புவியரசு, சூர்யகாந்தன், சி.ஆர்.ரவீந்திரன், கண்மணி குணசேகரன் என இப்பட்டியலின் நீளம் அதிகம்.

அப்படி இந்த வட்டார வழக்கில் எழுதப்பட்ட நாவல், அதன் மண் மணத்தையும் மிஞ்சி பரந்துபட்ட உலகத்திற்குள், அது எழுதப்பட்டு எத்தனை காலத்திற்கு ஒரு எழுத்தாளன் வாழும் காலத்திலேயே பேசப்படும்? குறிப்பிட்ட எழுத்தாளர் 50- க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதி குவித்த பின்பும், வாசகனின் நெஞ்சில் நிலைத்து 25 ஆண்டுகளாக பேசப்படுகிறதென்றால் அந்தப் பெருமை ‘ஈரம் கசிந்த நிலத்திற்கானதாகத்தான் இருக்கும்.

‘‘கும்பிடு, கும்பிடு! மழை மாரி தவறாம பேயோணும். மாமாங்கம் பொழியோணும், மண்ணு வெளையோணும்னு கும்பிடு. தலைக்கட்டுக்கு தலைக்கட்டு வஞ்சகமில்லாமெ தவசந்தானியம் வெளையோணும்னு கும்பிடு. அண்ணெங் காலெத் தொட்டுக் கும்பிட்டு மெழியேப்புடி!’

கொங்கு மண்ணின் ஆதார சுருதியாக நின்று அம்மிணி என்ற கதாபாத்திரம் பேசும் பேச்சு, அவளைச் சுற்றி வாழும் மனிதர்களின் மாண்புகளை அவ்வளவு சுலபமாக தமிழ்கூறும் நல்லுலகின் வாசகர்கள் மறந்துவிடவில்லை.

1992 ஆம் ஆண்டு வாக்கில் கல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் விருது பெற்ற இந்நாவல் இதுவரை எட்டு பதிப்புகள் கண்டு, தற்போது காலச்சுவடு தமிழ் கிளாசிக் நாவல் வரிசையில் வெளியிட்டிருக்கிறது காலச்சுவடு. இந்த ஈரம் ஈரம் கசிந்த நிலத்திற்கு சொந்தக்காரர் சி.ஆர். ஆர் என்றழைக்கப்படும் சி.ஆர்.ரவீந்திரன். அப்பாவிற்கு சொந்த ஊர் கோவை அவிநாசி பக்கம் உள்ள ஆட்டயம்பாளையம். பின்னர் கோவை பேரூர் அருகே உள்ள செட்டிபாளையத்தில் குடியேறி விவசாயம் செய்து வந்திருக்கிறார்கள்.அப்பா அம்மாவுக்கு படிப்பில்லை. இவர் எம்.ஏ., ஆங்கில இலக்கியம் படித்து ஆரம்பகாலத்தில் சில ஆண்டுகள் மட்டும் கோவை அரசுக்கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றியிருக்கிறார். பிறகு முழு நேர எழுத்தாளர்தான். பத்திரிகையாளராகவும் பணியாற்றியுள்ளார். நாவல், சிறுகதை, கட்டுரை நூல்கள் என்று மட்டுமல்லாது மொழிபெயர்ப்பு நூல்களையும் தமிழுக்கு தந்திருக்கிறார். வெள்ளந்தி குணம். யதார்த்தமான பேச்சு. எழுத்தின் பாத்திரங்களில் மட்டுமல்ல, இவரின் குணாம்சமும் அதுதான்.. ,

பள்ளிப் படிப்பின்போதே கல்கண்டு, கண்ணன், தினமணிக்கதிர், மழலையர் இதழ்கள் வாசிப்பில் ஈடுபாடு, பிறகு மு.வ, ஜெயகாந்தன், நா.பார்த்தசாரதி வாசிப்பு உலகத்திற்குள் நகர்கிறார்.

சி.ஆர்.ரவீந்திரன்
சி.ஆர்.ரவீந்திரன்கேயெஸ்வி

’’அந்தக் காலத்தில் சிலோன் சென்று விட்டு வந்த சுந்தராஜன் என்பவர் எனக்கு ஆசிரியராக இருந்தார். அவரிடம் செம்பியன் செல்வன் எழுதிய அமைதியின் இறகுகள் என்ற நூல் இருந்தது. அவ்வளவு சுலபமாக யாரிடமும் பழகாதவர் அந்த ஆசிரியர். அவரிடம் தயங்கித்தயங்கி, அந்த நூலை இரவல் படிக்கக் கேட்டேன். அவரும் கொடுத்துட்டார். அதை படிச்சு அசந்துட்டேன். உடனே அந்த நூலில் இருந்த முகவரியை வைத்து செம்பியன் செல்வனுக்கு ஒரு கடிதம் எழுதிப் போட்டேன். அதில் அவர் தொடர்பு கிடைத்தது. அவர் அங்கே ஜியாகரபி புரபஸராக இருந்தார். விவேகி என்ற பத்திரிகையும், யாழ் இலக்கிய வட்டம்ன்னு ஒரு அமைப்பையும் நடத்தீட்டிருந்தார். அவர் மூலம் இலங்கை இதழ்கள், நூல்கள் தருவித்து படிக்கும் வாய்ப்பு அமைந்தது. அப்போது தகழி, பஷீர் போன்றவரது மலையாள நாவல்கள் படித்த அனுபவங்கள் பரிமாறிக் கொள்ள ஆங்கில, மலையாள மொழிபெயர்ப்பு வாய்ப்புகளை அவர் ஏற்படுத்திக் கொடுத்தார். ஒரு சமயம் ஒரு கதை எழுதவும் பணித்தார். அப்படி எழுதிய கதையைத்தான் தலைப்பை மட்டும் மாற்றி வீரகேசரி இதழில் அவரே தந்திருக்கிறார். அது பிரசுரமும் ஆனது. அந்த சிறுகதையின் வெளிப்பாடு கோவையில் அக்னிபுத்திரன், புவியரசு. ஞானி, மு.மேத்தா, தீபம் நா.பார்த்தசாரதி, விஜயா மு.வேலாயுதம் போன்றவர்கள் தொடர்பு கிடைத்து வானம்பாடியுடனும் பிணைத்தது!’’

என்று சொல்லும் ரவீந்திரனை ஒரு முறை திருப்பூர் வந்த கனிமொழியிடம் ஜெயகாந்தன் , ‘சி.ஆர்.ரவீந்திரன், ஈரம் கசிந்த நிலம்!’ என்றே அறிமுகப்படுத்தினாராம். குழந்தைக் கவிஞர்கள் பூவண்ணன், செல்லகணபதி இருவரும் மலேசியாவிற்கு போயிட்டு வந்தவர்கள், அறிமுகமில்லா நிலையிலேயே தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசினார்களாம். மலேசியாவில் நடந்த இலக்கிய கூட்டத்தில், ‘உங்களுக்கு ஈரம் கசிந்த நிலம் நாவல் எழுதிய சி.ஆர். ரவீந்திரனை தெரியுமா?’ன்னு கேட்டாங்களாம். இது போல ஈரம் கசிந்த நிலம் நாவல் குறித்து நிறைய அனுபவங்களை பேசுகிறார். .

‘‘அந்நாவல் வெளி வந்து 25 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. 1971-72 களில் குத்தகைதாரர்களுக்கு நிலம் சொந்தம். அவர்களை நிலத்திலிருந்து வெளியேற்றக் கூடாது!’ என்ற சட்டம் வந்தது. அதனால் விளைந்த மோதல், உறவுச்சிதறல், கிராம மேட்டிமைத்தனம், பஞ்சாயத்துகள், அந்த நிலத்தில் வாழவே முடியாது என்று குடும்பம் வெளியேறல் என சகலமும் பின்னப்பட்ட கதை அது. நிலத்தின் உயிர்ப்பு தன்மையிலும், அதன் பக்கபலமாய் வாழ்ந்து கொண்டிருக்கும் பாத்திரங்கள் மூலம்தான் இன்னமும் அந்நாவல் வாழ்ந்து கொண்டிருக்கிறது. வாசகர்கள் தொடர்ந்து வாசிக்கிறார்கள்!’’ அவர் சொல்லும்போது நாமும் அந்த நாவலுக்குள் மூழ்கிப் போகிறோம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in