330 புத்தகங்கள்... கவனிக்கப்படாத எழுத்தாளுமை மரணம்!

330 புத்தகங்கள்... கவனிக்கப்படாத எழுத்தாளுமை மரணம்!
ஈசாந்திமங்கலம் முருகேசன்

330 புத்தகங்களை இதுவரை எழுதியிருக்கும் ஈசாந்திமங்கலம் முருகேசன் தன் 87 வயதில் வயது மூப்பின் காரணமாக நேற்று நள்ளிரவு காலமானார். தன் வாழ்வின் கடைசித் தருணம் வரை எழுத்தே தவம் என பெருவாழ்வு வாழ்ந்தவர் ஈசாந்திமங்கலம் முருகேசன். ஆனால் அவரது திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கடைசிவரை கிடைக்கவில்லை என்பதுதான் அவரது மரணத்தில் வேதனையளிக்கும் சம்பவம்!

அண்மையில் ஈசாந்திமங்கலம் முருகேசனை சந்தித்தபோதுகூட 87 வயதிலும் தினமும் 16 மணிநேரம் வாசிக்கவும், எழுதவும் ஒதுக்குவதாகச் சொன்னார். ஏற்கெனவே 330 புத்தகங்கள் எழுதியிருக்கும் இவர், தற்போது 11 புத்தகங்கள் எழுதிவந்தார். 1949-ல் 9 -ம் வகுப்பு படிக்கும்போது, அவரது முதல் சிறுகதை நாளிதழில் வெளியானது. முருகேசனின் தாத்தா இசக்கிமுத்துப்பிள்ளை பெரியகவிஞர். அவர் கவிதைகளைப் படித்தே வளர்ந்ததால் இவருக்குள்ளும் எழுத்துத்திறமை உருவானது.

1951 முதல் 1953 வரை இன்டர்மீடியட் கோர்ஸ் படித்துக்கொண்டிருக்கும்போது நாவலர் நெடுஞ்செழியனின் ‘மன்றம்’ பத்திரிகையில் எழுதும் வாய்ப்பு ஈசாந்திமங்கலம் முருகேசனுக்குக் கிடைத்தது. மன்றத்தில் துணை ஆசிரியராகவும் இருந்தார். பிழைப்பு நிமித்தம் ரசாயன உர கம்பெனியில் வேலைசெய்து கொண்டே எழுதத் துவங்கினார். மணிமேகலை பிரசுரத்தில் மட்டும் 40 புத்தக்கங்கள் எழுதியிருக்கிறார். கம்பராமாயணம் உரைநடைச் சுருக்கத்தை இரண்டே மாதத்தில் எழுதிமுடித்த பெருமையும் இவருக்கு உண்டு. அது தமிழகத்தை விட அமெரிக்காவில் அதிகம் விற்றது. இதுவரை மொத்தம் 330 புத்தகங்கள் எழுதியுள்ளார். 42 பதிப்பகங்களில் இவரது புத்தகங்கள் வெளியாகியுள்ளன. திராவிட இயக்கப்பற்றாளராக இருந்த முருகேசன், திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோதே ‘தளபதி மு.க.ஸ்டாலின்’ என்னும் புத்தகத்தை எழுதியிருந்தார். கெளரா பதிப்பக வெளியீடாக வந்திருந்த அந்தப்புத்தகம் விற்பனையிலும் சக்கைபோடு போட்டது.

ஈசாந்தி முருகேசன், ஈசாந்திமங்கலம் முருகேசன், பட்டத்தி மைந்தன், செந்தி மணாளன், கதிரவன் என பல புனைப்பெயர்களிலும் எழுதிவந்தார். மேல்நாட்டு அறிஞர்களின் வாழ்க்கை, அரேபியக் கதைகள் என மொழிபெயர்ப்பு நூல்களையும் அதிகம் எழுதியுள்ளார். ஒருவகையில் பதிப்பகங்களின் தோழனாகவும் இருந்தார். தன் படைப்புக்கென பெருந்தொகையை நிர்ணயித்துக்கொள்ளாமல் எழுத்தை நேசிப்பவராக இருந்தவர், எந்த இலக்கிய லாபியிலும் இல்லை. அதனாலேயே, ஈசாந்திமங்கலம் முருகேசனின் தமிழ் படைப்புலக பங்களிப்புகள் இவ்வளவு பெரிதாக இருந்தும், அதற்கு ஏற்ற அரசின் அங்கீகாரமோ, இவ்வளவு ஏன் சொந்த கிராமத்திலும், சிறு பாராட்டு விழா கூட நடந்தது இல்லை.

நாகர்கோவிலை மையமாகக் கொண்டு இயங்கும், ‘ராஜகோகிலா அறக்கட்டளை’, செந்தமிழில் அருள்நெறிப் பேரவை என்னும் ஒருசில அமைப்புகள் மட்டுமே இவர் படைப்பை அங்கீகரித்து கெளரவித்தது. படைப்புகளை பதிப்பகங்களுக்கு வாரி இறைத்த ஈசாந்திமங்கலம் முருகேசன், ‘தன் வாழ்வின் கடைசிவரை தமிழ் தனக்கு சோறு போட்டதாக பதிப்பகங்கள் கொடுக்கும் சிறுதொகையையே நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தவர்.

ஈசாந்திமங்கலம், கீழூர் பகுதியில் தன் மனைவியுடன் வசிந்துவந்த ஈசாந்திமங்கலம் முருகேசன் வயோதிகத்தின் காரணமாக நேற்று நள்ளிரவு உயிர் இழந்தார். அவரது இறுதிச்சடங்கு கீழூரில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து இன்று மாலை 4 மணிக்கு நடக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in