“மறுவாசிப்புக் கதைகளுக்கு விருது கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி!”

பால புரஸ்கார் விருது பெற்ற எழுத்தாளர் மு.முருகேஷ்
“மறுவாசிப்புக் கதைகளுக்கு விருது கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி!”

தமிழில் சிறந்த சிறுவர் இலக்கியத்துக்கான பால புரஸ்கார் விருது, கவிஞரும் பத்திரிகையாளருமான மு.முருகேஷுக்கு வழங்கப்படுகிறது. ‘அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை’ எனும் சிறுகதைத் தொகுப்புக்காக இந்த விருதை இவர் பெறுகிறார்.

தமிழில் ஹைக்கூ கவிதைகளைப் பரவலாக்கியதில் மிக முக்கியமானவரான மு.முருகேஷ், தமிழ் ஹைக்கூ கவிஞர்களின் படைப்புகளைத் தொகுத்து, ‘கிண்ணம் நிறைய ஹைக்கூ’ தொகுப்பை வெளியிட்டதன் மூலம் கவனம் பெற்றவர். ‘என் இனிய ஹைக்கூ’, ‘இருளில் மறையும் நிழல்’, ‘குழந்தைகள் அல்ல குழந்தைகள்’ உள்ளிட்ட ஏராளமான நூல்களை எழுதியிருக்கிறார். ‘பெரிய வயிறு குருவி', 'பறக்கும் பப்பி பூவும் அட்டைக்கத்தி ராஜாவும்' உள்ளிட்ட சிறுவர் இலக்கிய நூல்களுக்கும் சொந்தக்காரர் இவர்.

புதுக்கோட்டையைச் சேர்ந்த மு.முருகேஷ், தற்போது வந்தவாசியில் வசிக்கிறார். ‘இந்து தமிழ்திசை’ நாளிதழில் முதுநிலை உதவி ஆசிரியராகப் பணிபுரிகிறார்.

பால புரஸ்கார் விருது பெற்ற முருகேஷிடம் பேசியபோது, “தொடர்ந்து சிறுவர் இலக்கியத்தில் இயங்கிவருபவன் எனும் வகையில், இந்த விருது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. பரவலாக அறியப்பட்ட முயலும் ஆமையும் போன்ற கதைகளை இந்தத் தலைமுறைக் குழந்தைகளுக்கு ஏற்றவாறு மறுவாசிப்பு கதைகளாக உருவாக்கினேன். அதற்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரம் மேலும் நிறைய எழுதத் தூண்டுகிறது” என்றார்.

அடுத்து ஒரு கவிதைத் தொகுப்பையும் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார் முருகேஷ்!

Related Stories

No stories found.