கரிகாலன் சபதம் நூலில் நீர்சேமிப்பு தொழில்நுட்பங்கள்

ஆதலையூர் சூரியகுமாருக்கு நீர்வள ஆணைய அதிகாரி பாராட்டு
கரிகாலன் சபதம் நூலில் நீர்சேமிப்பு தொழில்நுட்பங்கள்
கமலா அங்கூர் மற்றும் சாச்சி ஜெயின்

ஆசிரியர் மற்றும் எழுத்தாளர் ஆதலையூர் சூரியகுமார் எழுதியுள்ள ‘கரிகாலன் சபதம்’ நாவலில், நம் பண்டைக்கால நீர் சேமிப்பு தொழில்நுட்பங்கள் அடங்கியிருக்கின்றன என்று மத்திய நீர்வள ஆணையத்தின் துணை இயக்குநர் பாராட்டு தெரிவித்துள்ளார்.


திருவாரூர் மாவட்டம், தென்குவளவேலி அரசு உயர்நிலைப் பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் ஆதலையூர் சூரியகுமார் எழுதிய 'கரிகாலன் சபதம்' நாவல், பண்டைய இந்தியாவின் நீர் சேமிப்பு தொழில்நுட்பங்களை விளக்குவதாக மத்திய நீர்வள ஆணையத்தின் துணை இயக்குநர் சாச்சி ஜெயின் பாராட்டு தெரிவித்திருக்கிறார்.

டெல்லி ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் நடைபெற்ற எளிய நிகழ்ச்சியில், உறவினர்களிடமும் நண்பர்களிடமும் கரிகாலன் சபதம் நாவலை அறிமுகப்படுத்தி பேசினார். நீர் சேமிப்பு திட்டங்களில் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது என்றும் முக்கியமாக கரிகால் சோழ மன்னன் கட்டிய கல்லணை, நீர் சேமிப்பு தொழில்நுட்பங்களுக்கு இந்தியாவிற்கே வழிகாட்டியாகத் திகழ்கிறது என்றும் குறிப்பிட்டார்.

கல்லணையின் வரலாற்றையும் கரிகாலன் வரலாற்றையும் உள்ளடக்கி எழுதப்பட்டிருக்கும் கரிகாலன் சபதம் நாவல் பாராட்டுக்குரியது. மற்ற மொழிகளிலும் மாற்றுவதற்கு மத்திய நீர்வள ஆணையம் சார்பில் முயற்சி மேற்கொள்ளப்படும் என்றார். நிகழ்ச்சியின்போது உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா 'பிரைட்டர் மைன்ட்ஸ் அகாடமி’யின் பயிற்சியாளர் கமலா அங்கூர், விமல் சவுகான் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதுகுறித்து எழுத்தாளர் ஆதலையூர் சூரியகுமார், காமதேனுவிடம் தெரிவித்ததாவது:

’’கரிகாலனின் பணியும், சாதனையும் உலகத்திற்கே வழிகாட்டக் கூடியவை. அந்த வகையில், நீர்வள தொழில்நுட்பங்களில் ஆர்வமுடைய டெல்லி மத்திய நீர்வள ஆணையத்தின் துணை இயக்குநர் சாச்சி ஜெயின் நான் எழுதிய கரிகாலன் சபதம் நாவலைப் பற்றி கேள்விப்பட்டு, நாவலின் பிரதியை அனுப்பக் கேட்டிருந்தார். நாவலின் பிரதியையும் அதன் சுருக்கமான ஆங்கில மொழிபெயர்ப்பையும் இணைத்து அனுப்பி இருந்தேன்.

அந்நாவலை, அவர் தனது நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அறிமுகப்படுத்தி பேசி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இமயத்தை வென்றவனின் வரலாறு இமயத்தில் எதிரொலித்து இருப்பதாகவே கருதுகிறேன்” என்றார்.

Related Stories

No stories found.