தமிழகத்தில் 100 ஏக்கரில் பேரீச்சைத் தோப்பு... விவசாயத்தில் அசத்தும் இளைஞர்!

தமிழகத்தில் 100 ஏக்கரில் பேரீச்சைத் தோப்பு... விவசாயத்தில் அசத்தும் இளைஞர்!

Published on

வறண்ட பூமி என வர்ணிக்கப்படும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 25 ஏக்கரில் காய்கறித் தோட்டம், பக்கத்திலேயே 100 ஏக்கரில் அரேபிய பேரீச்சைத் தோப்பு. தினமும் காரில் போய், அறுவடை செய்கிறார் விவசாயி. நம்ப முடியவில்லையா?

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகாவில் இருக்கிறது வீரசோழன் கிராமம். இங்குதான் மேலே சொன்னபடி, விவசாயம் செய்கிறார் கேரள இளைஞர் இப்ராஹிம் சபில்.

காய்கறிச் சோலை

சபிலின் தோட்டம் பாலைவனச் சோலைபோல காட்சி தருகிறது. ஒருபக்கம் கத்தரி, இன்னொரு பக்கம் தக்காளி, வெண்டை, மிளகாய், இடையிடையே, சின்ன வெங்காயம், துவரை, உளுந்து. இப்படி 25 ஏக்கரில் வெவ்வேறு விதமான காய்கறிகள். அதுமட்டுமல்ல, ஒருபக்கம் எருமை மாட்டு மந்தை. இன்னொரு பக்கம் நாட்டுக்கோழிகள் கூட்டம் கூட்டமாய் மேய்கின்றன. வெவ்வேறு ஆழ்துளைக் கிணறுகளிலிருந்து வெளியான தண்ணீரைச் சேகரித்து வைத்துள்ள சிமென்ட் தொட்டியில், ஆயிரக்கணக்கான நாட்டு மீன்கள் துள்ளிக் குதிக்கின்றன.

‘கடவுளின் தேசம்’ என்றழைக்கப்படும் செழிப்பான மாநிலத்தைச் சேர்ந்தவர் ராமநாதபுரத்தில் வந்து விவசாயம் செய்வது ஏன் என்ற கேள்வியுடன் பேசத் தொடங்கினோம். “மலப்புரம் தான் என் சொந்த ஊர். இயல்பிலேயே எனக்கு விவசாயத்தின் மீது ஆர்வம் உண்டு. ஈரோடு கே.எஸ்.ஆர். கல்லூரியில் பயோடெக்னாலஜி படித்து முடித்தவுடன் விவசாயம் செய்ய இடம் தேடினேன். கேரளத்தில் எந்த ஊரில் விவசாய நிலம் வாங்கினாலும், 1 ஏக்கருக்குக் குறைந்தது 1 கோடி ரூபாய் தேவை. மேலும், அங்கே ரப்பர், வாழை, மிளகு உள்ளிட்ட வாசனைப் பொருட்களைத்தான் பயிரிட முடியும். எனவே, தமிழகத்தில் இடம் தேடத் தொடங்கினேன்” என்றபடி காய்கறிகளைப் பறிக்கத் தொடங்கினார் சபில். நாட்டுத்தக்காளி ஒன்றைச் செடியிலிருந்து பறித்துத் தின்றபடியே பேச்சைத் தொடர்ந்தோம்.

கேரளத்தைவிட தமிழகம் தான் விவசாயத்துக்கு ஏற்ற பூமி. வெறும் இதயம் மட்டுமே உடல் கிடையாது. கை, கால், நகம் உட்பட எல்லாம் இருந்தால் தான் முழு உடல். தமிழகம் அப்படித்தான். ஆனால், இங்குள்ள விவசாயிகளுக்கு விழிப்புணர்வு இல்லை!

மழை வேண்டா விவசாயம்

“அந்த நேரத்தில் என் படிப்பின் ஒரு பகுதியாக ஒரு புராஜெக்ட்டுக்காக ராஜஸ்தானுக்குப் போக வேண்டி வந்தது. அங்கே வெற்றிகரமாக அரேபிய பேரீச்சையைப் பயிரிடுகிறார்கள். தமிழகத்தில் பாலைவனம் இல்லை. மழையே பெய்யாத ஊர் ஏதும் இருக்கிறதா என்று தேடினேன். நண்பர்கள் கமுதியைக் கைகாட்டி விட்டார்கள். 2013-ல், இந்தக் கிராமத்தில், நண்பர்களுடன் இணைந்து கூட்டாக 100 ஏக்கர் இடம் வாங்கி பேரீச்சை பயிரிட்டேன். ஒரு பேரீச்சைக் கன்று 3,500 ரூபாய். ஆண்டுக்கு 500 கன்றுகள் வீதம் இதுவரையில் 4,000 ஆயிரம் மரங்களை நட்டுள்ளேன். முதலில் நட்டு வைத்த மரங்களில் கடந்த ஆண்டே அறுவடை எடுத்து விட்டேன். நல்ல ருசி. இன்னும் 4 ஆண்டுகளுக்குள் 100 ஏக்கரிலும் அதை விரிவுபடுத்த வேண்டும்” என்றார் சபில்.

அடுத்து பேரீச்சையில் இருந்து நாட்டுக் காய்கறிகள், கால்நடை வளர்ப்பு ஆகியவற்றைத் தொடங்கிய கதையை விவரித்தார். “இந்தப் பகுதி நகர்மயம் ஆகாத

தாலும் விவசாயம் நடைபெறாததாலும் நிலத்தடி நீர்வளம் குன்றாமல் இருக்கிறது. இதைத் தெரிந்துகொண்டுதான் காய்கறித் தோட்டம் அமைக்கும் முயற்சியில் இறங்கினேன். நல்ல விளைச்சல். எருமைகளின் கழிவுகளை உரமாகப் பயன்படுத்துகிறேன். கோழிகள் பூச்சிகளைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. தண்ணீரில் கலக்கிய மீன்களின் அம்மோனியக் கழிவு, இயற்கையான நைட்ரேட் உரமாகச் செடிகளுக்குப் போகிறது.

இயற்கை விவசாயத்தில் மிகப் பெரிய பிரச்சினை, நோய்த் தாக்குதல் ஏற்பட்டால் மொத்த விவசாயமும் காலியாகிவிடும் என்பதுதான். எனவே, பாத்தி பாத்தியாகப் பிரித்து வெவ்வேறு காய்கறிகளைப் பயிரிட்டுள்ளேன். ஏதாவது ஒரு பயிர் மோசமாக நோய்த் தாக்குதலுக்கு ஆளானால், மொத்தமாகப் பிடுங்கி எரித்துவிடுவேன். நானே காய்கறிகளை அறுவடை செய்து மதுரையில் உள்ள இயற்கை வேளாண் கடைக்கு விற்கிறேன். விலை அதிகம் என்றாலும், மக்கள் தேடி வந்து வாங்குகிறார்கள்” என்று புன்னகை பூக்கிறார் சபில்.

ஆர்வம் அவசியம்

பறித்த காய்கறிகளை காரில் ஏற்றுகையில் லாப நஷ்டம் பற்றிப் பேச்சு வந்தது. “விவசாயத்தில் எடுத்தவுடன் லாபம் பார்க்க முடியாது. நிலத்தைச் செம்மைப்படுத்திப் பயிரிடத் தொடங்கியபோது மாதத்துக்கு ஒரு லட்சம் வரையில் செலவானது. இப்போது காய்கறிகள் விளைச்சல் வந்துவிட்டதால், அந்தச் செலவை மாதம் 25 ஆயிரமாகக் குறைத்துள்ளேன். இன்னும் ஓரிரு ஆண்டுகளுக்குள் லாபம் எடுக்கத் தொடங்கிவிடலாம் என்று நம்புகிறேன். ஆர்வம் இல்லாத யாரும் விவசாயத் தில் தாக்குப்பிடிக்க முடியாது” என்றார்.

சபிலைச் சந்தித்து விட்டுத் திரும்புகையில் அவர் சொன்ன இந்த வார்த்தைகள் மனதில் எதிரொலித்துக் கொண்டே இருந்தன: “கேரளத்தைவிட தமிழகம்தான் விவசாயத்துக்கு ஏற்ற பூமி. வெறும் இதயம் மட்டுமே உடல் கிடையாது. கை, கால், நகம் உட்பட எல்லாம் இருந்தால்தான் முழு உடல். தமிழகம் அப்படித்தான். இங்கே மலைப் பயிர்களைச் சாகுபடி செய்ய வேண்டும் என்றால், ஊட்டி, கொடைக்கானல் இருக்கிறது. வாழைக்குத் தேனி, தஞ்சை மாவட்டம். தென்னைக்கு கோவை. நெல்லுக்கு தஞ்சையும் நெல்லையும்.

பேரீச்சையைக்கூட பயிரிட இடம் கிடைக்கிறது. ஆனால், இங்குள்ள விவசாயிகள் பலருக்கு விழிப்புணர்வு இல்லை. என்னிடம் வேலை பார்க்கிற 40 பேரில், எனக்கு இடம் விற்றவர்களும் இருக்கிறார்கள்.”

படம்: ஜி.மூர்த்தி

x
காமதேனு
kamadenu.hindutamil.in