Rewind 2023 |பாப்புலரான டாப் 5 டயட் லிஸ்ட்!

Rewind 2023 |பாப்புலரான டாப் 5 டயட் லிஸ்ட்!

இன்றைய நவீன வாழ்க்கை முறையில் டயட் தவிர்க்க முடியாததாக அம்சமாக இருக்கிறது. உடல் நலனைக் கருத்தில் கொள்வதோடு உடற்பருமன் இல்லாமல் இளமையைத் தக்க வைக்கவும் டயட்டைத் தேர்ந்தெடுக்கின்றனர். புத்தாண்டு வந்து விட்டாலே ஏதேனும் ஒரு டயட்டைப் பின் தொடர வேண்டும் என்பதை இலக்காக வைத்துக் கொண்டு செயல்படுவர். டயட்டிலேயே சைவம் சாப்பிடுகிறவர்கள், அசைவம் சாப்பிடுகிறவர்கள் என அவரவருக்குத் தேவையான வகையில் பல டயட் இருக்கும் நிலையில், இந்த 2023ம் ஆண்டில் அதிக மக்களிடையே பாப்புலராக கொண்டாடப்பட்ட டாப் 5 டயட் லிஸ்ட் என்னென்ன என்பதைப் பார்க்கலாம் வாங்க.

1. கீட்டோ டயட் (Keto Diet)

கீட்டோ டயட்
கீட்டோ டயட்

கீட்டோ டயட் என்றழைக்கப்படுகிற கெட்டோஜெனிக் டயட் இன்று உலகளவில் பிரபலமானதாக இருக்கிறது. மாவுச்சத்து இல்லாமல் அதிக கொழுப்பு சத்து மற்றும் புரதம் நிறைந்த உணவை உட்கொள்ளும் முறையே கீட்டோ யட். இந்த டயட் 1920களில் வலிப்பு நோய் உள்ளவர்களுக்கு, குறிப்பாக வலிப்பு நோய் உள்ள குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டது. இதன் மூலம் உடற்பருமன் குறைவதால் பரவலாக இந்த டயட் பின்பற்றப்படுகிறது.

இந்த உணவு முறையில் மாவுச்சத்தை குறைப்பதன் மூலம், அதற்கு பதிலாக நாம் எடுத்துக்கொள்ளும் கொழுப்புச் சத்தை உடலின் ஆற்றலுக்காக உடல் எரித்து எடுத்துக் கொள்ளும். இந்த நடவடிக்கை கீட்டோசிஸ் என அழைக்கப்படுகிறது. இந்த டயட்டைப் பின்பற்றுவதன் மூலம் உடல் எடை குறைதல் மற்றும் நரம்பு மண்டலம் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வாக இருக்கும் என்றாலும் இந்த உணவு முறையைப் பின்பற்ற மற்ற உணவுமுறைகளைக் காட்டிலும் அதிகம் பணம் செலவாகும். நல்ல கொழுப்பு மிகுந்திருக்கும் பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற கொட்டை வகைகள் கொஞ்சம் விலை உயர்ந்தவை என்பதால் எல்லோராலும் எளிதில் பின்பற்ற முடியாதுதான். அப்படியிருந்தும் நிறைய பேர் இந்த கீட்டோஜெனிக் உணவு முறையைப் பின்பற்றியிருக்கின்றனர்.

2. பேலியோ டயட் (Paleo Diet)

பேலியோ டயட்
பேலியோ டயட்

கார்போஹைட்ரேட் எனப்படுகிற மாவுச்சத்தை நாம் எடுத்துக் கொள்ளும்போது அது உடனே எரிந்து நமது உடலுக்கு ஆற்றல் அளிக்கிறது. உடல் உழைப்பில்லாத போது மாவுச்சத்து முழுமையும் எரியாமல் கொழுப்பாக மாறி உடலில் தங்குவதால்தான் உடல் பருமன் ஏற்படுகிறது. மாவுச்சத்தை முழுவதும் நிராகரிக்கும் நோக்கோடு பின்பற்றப்படுவதுதான் பேலியோ டயட். கீட்டோ டயட்டில் எப்படி கொழுப்புச் சத்து பிரதானமானதாக இருக்கிறதோ அதே போல பேலியோ டயட்டில் புரதச்சத்தே பிரதானமாக இருக்கிறது.

Summary

வேளாண்மை மேற்கொள்ளப்படாத காலகட்டத்தில் ஆதிமனிதர்கள் இறைச்சியை மட்டுமே உண்டனர். அதன் மூலம் அவர்களுக்கு புரதம் அதிகம் கிடைத்தது. அதே உணவு முறைதான் இந்த பேலியோ டயட். அசைவம் மட்டுமல்ல சைவத்திலும் கூட புரதச்சத்து மிகுந்த காய்கறிகள், பழங்களை உட்கொள்வதன் மூலமாக பேலியோ டயட்டைக் கடைப்பிடிக்கலாம்.

அரிசி உள்ளிட்ட மாவுச்சத்து மிகுந்த உணவுகளை எடுத்துக் கொள்ளக்கூடாது என்பது மட்டுமே முக்கிய விதிமுறை. சைவ பேலியோ மற்றும் அசைவ பேலியோ இரண்டு முறைகளிலும் பின்பற்றுபவர்கள் உடல் எடை குறைந்து நல்ல மாற்றத்தை உணர்கின்றனர். இந்த உணவுமுறை பின்பற்ற எளிதானது மற்றும் பலவிதமான நன்மைகளை வழங்குகிறது.

3. மெடிட்டேர்னியன் டயட்(The Mediterranean Diet)

மெடிட்டேர்னியன் டயட்
மெடிட்டேர்னியன் டயட்

ஸ்பெயின், இத்தாலி, கிரீஸ் மற்றும் மொராக்கோ போன்ற நாடுகளின் பாரம்பரிய உணவுப் பழக்கவழக்கங்களை அடிப்படையாகக் கொண்டது The Mediterranean Diet (மத்தியதரைக் கடல் உணவுமுறை). இந்த உணவு முறையில் பழங்கள், காய்கறிகள், கொட்டைகள், விதைகள், பருப்பு வகைகள், ஆலிவ் எண்ணெய் மற்றும் முழு தானியங்கள் ஆகியவை முக்கிய உணவுப் பொருட்களாக இருக்கின்றன. டயட்டில் மிதமான அளவு மீன், முட்டை, கோழி மற்றும் பால் பொருட்கள் அடங்கும்.

Summary

இந்த டயட்டின் முக்கிய நன்மைகளில் ஒன்று, ஆலிவ் எண்ணெய், நட்ஸ் மற்றும் அவோகேடா பழங்களில் காணப்படும் மோனோ சாச்சுரேட்டட் மற்றும் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் என ஆரோக்கியமான கொழுப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதே. இவை உடலில் உள்ள வீக்கத்தைக் குறைக்கும் மற்றும் இதய நோய்க்கான சாத்தியங்களை குறைக்கும். கூடுதலாக, உணவு நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த தாவர அடிப்படையிலான உணவுகளே இந்த உணவு முறையில் பின்பற்றப்படுகிறது. இவை அனைத்தும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஊட்டச்சத்து நிறைந்ததாக இருப்பதுடன், இந்த டயட்டை பின்பற்றுவது மிகவும் எளிதானது.

4. வீகன் டயட் (The Vegan Diet)

வீகன் டயட்
வீகன் டயட்

வீகன் டயட் என்கிற சாத்வீக சைவ உணவு முறை வேகமாக பிரபலமடைந்து வருகிறது, உடல் நலனை மேம்படுத்துவதோடு சூழல் பாதிப்பைக் குறைக்கவும், உலகில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தவும் இந்த உணவுமுறை சிறந்தது என இதனைப் பின்பற்றும் வீகன்கள் கூறுகின்றனர். சைவம் சாப்பிடுகிறவர்கள் பால், தயிர், நெய் உள்ளிட்ட பால் பொருட்களை எடுத்துக் கொள்வர். இந்த வீகன் உணவு முறையில் இறைச்சி, பால், முட்டை மற்றும் பிற விலங்குகளில் இருந்து பெறப்பட்ட பொருட்களை அறவே தவிர்க்கின்றனர்.

Summary

பழங்கள், காய்கறிகள், கொட்டைகள், விதைகள் மற்றும் தானியங்கள் போன்ற தாவரங்களை அடிப்படையாகக் கொண்ட உணவுகளையே உட்கொள்கின்றனர். இந்த சாத்வீக சைவ உணவு உடல்நலன் சார்ந்த பல நன்மைகளை அளிக்கிறது. இதில் நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பைட்டோ கெமிக்கல்கள் அதிகம் உள்ளது. இவை இதய நோய் மற்றும் சில வகையான புற்றுநோய்கள் போன்ற நாட்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகின்றன. கூடுதலாக, சைவ உணவுமுறையானது உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும், மனநலத்தை மேம்படுத்தவும் உதவும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

5. விரத உணவு முறை  (The Intermittent Fasting Diet)

விரத உணவு முறை
விரத உணவு முறை

நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதை விட எப்போது சாப்பிடுகிறீர்கள் என்பதை மையப்படுத்தி கொண்டு வரப்பட்டது தான் விரத உணவு முறை. வேண்டுதலுக்காக குறிப்பிட்ட நேரம் வரை சாப்பிடாமல் விரதம் இருப்போமே அதுவேதான். அப்படியாக விரதம் இருப்பதன் வழியாக பல நண்மைகள் கிடைக்கின்றன என்பது கண்டறியப்பட்ட பிறகே இந்த உணவுமுறை நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த உணவுமுறையில் சாப்பிடும் நேரக்கணக்குகள் பல்வேறு விதமாக பின்பற்றப்படுகின்றன. 5:2 என்கிற உணவுமுறையில் ஐந்து நாட்களுக்கு சாதாரணமாக சாப்பிடுவதும், தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு உணவில் உட்கொள்ளும் கலோரிகளை 500-600 கலோரிகளாக கட்டுப்படுத்துவதும் ஆகும்.

Summary

மற்றொரு பிரபலமான முறை 16/8 என்பதாகும். ஒரு நாளைக்கு 16 மணி நேரம் சாப்பிடாமல் இருந்து விட்டு 8 மணி நேரத்துக்குள் மட்டுமே சாப்பிடுவது தான் இந்த உணவுமுறை. இப்படியாக விரதம் இருக்கையில் உடல் எடை குறைதல், மேம்பட்ட மனத் தெளிவு, கூடுதல் ஆற்றல், சீரான செரிமானம் மற்றும் மேம்பட்ட இன்சுலின் உற்பத்தி ஆகிய நன்மைகள் இருப்பதாக கூறப்படுகிறது.

எந்தவொரு புதிய உணவு முறையப் பின்பற்றத் தொடங்கும் முன்பும், உங்கள் உடல் நலத்திற்கேற்ப ஒருமுறை மருத்துவரிடம் ஆலோசனை பெற்று விட்டு, பின்பற்ற துவங்குங்கள். ஒவ்வொருவரின் உடல்நிலைக்கேற்ப டயட் முறைகள் மாறும்.

இதையும் வாசிக்கலாமே...

குட்நியூஸ்... 1,000 ரூபாயுடன் பொங்கல் பரிசு; ஜனவரி 2-வது வாரத்தில் வழங்க ஏற்பாடு!

இறுதி நாட்களின் பெருந்துயரம் | இன்று நடிகை சாவித்ரி நினைவுதினம்!

வாழ்க்கையை சுழற்றிப் போட்ட சுனாமி... கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய மீனவர்கள்!

பவுர்ணமி கிரிவலம்: திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

திருப்பதிக்கு ஜன.1 வரை பக்தர்கள் வரவேண்டாம்- தேவஸ்தானம்

x
காமதேனு
kamadenu.hindutamil.in