இருளர்னா ஒழுங்கா லோன் கட்டமாட்டோம்கிறது என்ன நியாயம்?

ஆதங்கக் கேள்வி எழுப்பும் அய்யனார்!
இருளர்னா ஒழுங்கா லோன் கட்டமாட்டோம்கிறது என்ன நியாயம்?

கொத்தடிமை தொழிலாளர் முறையை ஒழிக்க அரசாங்கம் என்னதான் நடவடிக்கை எடுத்தாலும் செங்கல் சூளைகளிலும் கரும்புக் காட்டிலும் இன்னமும் கொத்தடிமைகள் இருக்கவே செய்கிறார்கள். அதேசமயம், கொத்தடிமைத் தொழிலில் இருந்து மீட்கப்பட்ட பலரும் தங்களின் வாழ்வாதாரத்துக்கு வழி தெரியாமல் சுருண்டும் போயிருக்கிறார்கள். இவர்களுக்கு எல்லாம் விதிவிலக்கு அய்யனார் - பேபி ஷாலினி தம்பதி.

அய்யனார்
அய்யனார்

அய்யனார்- பேபி ஷாலினி தம்பதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த கயத்தூர் பகுதியில் வசிக்கும் இருளர் பழங்குடிகள். ஆண்டுக் கணக்கில் செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்தவர்கள். ஒருகட்டத்தில் அதிலிருந்து மீள நினைத்து, பட்ட கடனையெல்லாம் அடைத்துவிட்டு சூளையை விட்டு வெறுங்கையுடன் வெளியேறினார்கள்.

எப்படியும் பிழைத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையோடு வெளியில் வந்த இவர்களது வாழ்க்கையின் அடுத்த அத்தியாயம் சவால்களுடனேயே தொடங்கியது. ஆனாலும் சமாளித்தார்கள். வயிற்றுப் பிழைப்புக்காக சிறிய முதலீட்டில் மூலிகைச் சாம்பிராணி, ஊதுபத்திகள் தயாரிக்கும் தொழில் இறங்கினார்கள். வாழ்க்கையும் மணக்க ஆரம்பித்தது. இப்போது இவர்கள் தயாரிக்கும் மூலிகைச் சாம்பிராணியும் ஊதுபத்தி உள்ளிட்ட இதர பொருட்களும் தமிழகம் முழுக்க டிஸ்ட்ரிபியூட் ஆகிக் கொண்டிருக்கிறது.

பேபி ஷாலினி
பேபி ஷாலினி

தான் கடந்து வந்த கரடு முரடான பாதை குறித்து அய்யனார் நம்மிடம் பேசினார். “காலங்காலமா எங்க குடும்பம் கொத்தடிகைகளா இருந்திருக்கு. நான் பிறந்ததே செங்கல் சூளையில் தான். என்னைய படிக்க வைக்க எங்க வீட்ல வசதி வாயப்புகள் இல்லை. அதனால எட்டாம் வகுப்பு படிக்கிறப்பயே என்னையும் செங்கல் சூளைக்குள்ள தள்ளிட்டாங்க. அதைவிட்டா எங்களுக்கும் பொழைக்க வேற வழி இல்லைங்கிறதால நானும் செங்கல் சூளை வேலைக்குப் போக ஆரம்பிச்சேன். அப்படி வேலைக்குப் போன இடத்துல தான் எனக்கும் பேபி ஷாலினிக்கும் பழக்கமாகி ரெண்டு பேரும் உயிருக்கு உயிரா காதலிக்க ஆரம்பிச்சோம். பேபி வன்னியர் சாதி பொண்ணு. அதனால, எங்க காதலை ஏத்துக்கமாட்டாங்கன்னு தெரியும். அதனால ரெண்டு பேரும் ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கிட்டோம்.

ஆனாலும் பேபி அப்ப மைனர்ங்கிறதால என் மேல வழக்குப் போட்டாங்க. இருளர் சங்கம் தான் எனக்காக கேஸ் நடத்துச்சு. வழக்குல எங்களுக்குச் சாதகமாவே தீர்ப்பு வந்துச்சு. அப்பவும் நான் கொத்தடிமைத் தொழில்ல தான் இருந்தேன். கோர்ட் கேஸ் முடிஞ்ச பின்னாடி, இனியும் நாம கொத்தடிமையாத்தான் இருக்கணுமான்னு யோசிச்சு, வாடகை பாத்திரக் கடை வைக்கிறதுக்காக ‘தாட்கோ’வுல லோன் வாங்க அப்ளிகேஷன் போட்டேன். இன்டர்வியூலாம் வெச்சு எனக்கு லோன் குடுக்க செலக்ட் செஞ்சாங்க. ஆனா பேங்க்காரங்க, ‘நீங்க எல்லாம் ஒழுங்கா லோன் கட்டமாட்டீங்க’ன்னு சொல்லி லோன் தர மறுத்துட்டாங்க. அந்த ஆத்திரத்துல அங்கேயே லோன் அப்ளிகேஷனை கிழிச்சு போட்டுட்டு வந்துட்டேன்.

மூணு வருஷத்துக்கு முந்தி, அகர்பத்தி தயாரிக்கிறத பத்தி யூடியூப்ல ஒரு வீடியோ பார்த்தேன். அகர்பத்தியோட தேவை வருஷம் முழுக்க இருக்கும்கிறதால குறைந்த செலவுல குடிசைத் தொழிலா அகர்பத்தி, சாம்பிராணி தயாரிக்கலாம்னு முடிவு செஞ்சேன். ஆரம்பத்துல ஒரு பிஸ்டல் டை வாங்கி சாம்பிராணியும் அகர்பத்தியும் தயாரிச்சோம். பத்தாயிரம் போட்டதுல 2,500 ரூபாய் லாபம் கெடச்சுது. சரி, இதை இன்னும் கொஞ்சம் பெருசா செய்யலாமேனுட்டு கையில இருந்த நகைகளை அடமானம் வச்சோம். பத்தும் பத்தாதுக்கு அக்கம் பக்கத்துல இருக்கவங்களும் உதவி செஞ்சாங்க. அப்படியே படிப்படியா முதலீட்ட அதிகமாக்கி அதுக்கேத்த லாபம் எடுத்தோம். வேற பிராண்ட்ல பேக்கிங் செய்யுறதுல பிரச்சினை வந்ததால நாங்களே சுயமா ‘மயில் மாஸ்’னு ஒரு பிராண்டை உருவாக்கி லைசென்ஸ் வாங்கினோம்.

ஆடு மேய்க்க மலைக்குப் போறவங்க, திரும்பி வரும்போது மரிக்கொழுந்து, துளசி, வேப்பிலைன்னு மூலிகைகளைக் கொண்டு வருவாங்க. வெள்ளியங்கிரி மலையிலும் எங்க இனத்தவங்க இருக்கறாங்க. அங்க சேகரிக்குற மூலிகைகளை காய வச்சு அரைச்சுக் கொண்டுவந்தும் கொடுப்பாங்க.

ஆனாலும், நாங்க இருளர் சமூகம்கிறதால உள்ளூர்ல மட்டும் எங்க வியாபாரம் சரியாப் போகல. அதனால டீலர்களைப் புடிச்சு குறைஞ்ச லாபத்துக்கு தமிழ்நாடு முழுக்க எங்க தயாரிப்புகளை விற்க ஆரம்பிச்சோம். எங்க கிட்ட வாங்காத உள்ளூர் ஜனங்க டீலர்கிட்ட வாங்க ஆரம்பிச்சாங்க. அதுவரைக்கும் செங்கல் சூளைக்கு வேலைக்குப் போய்க்கிட்டு இருந்த பெண்கள், வயசானவங்க உள்பட பலரும் எங்கக்கிட்ட வேலைக்கு வர ஆரம்பிச்சாங்க. அதனால தொழிலை விரிவுபடுத்தி உற்பத்தியை அதிகரிச்சோம்” என்று நிறுத்திய அய்யனார், தன்னை சற்றே ஆசுவாசப்படுத்திக்கொண்டு தொடர்ந்தார்.

“ஒரு காலத்துல கொத்தடிமைகளா இருந்த எங்க குடும்பம் இப்ப நல்ல நிலையில இருக்கு. ஆனா, எங்க ஒரு குடும்பம் மட்டும் முன்னேறினா போதாது. எங்க இன மக்கள் எல்லாரும் எங்களப் போலயே முன்னுக்கு வரணும். அதுக்காக அவங்களுக்கும் தனித் தனியா தொழிலை உருவாக்கிக் குடுக்கணும்கிறதுதான் என்னோட ஆசை. அதுக்காக ஆர்வம் இருக்கிறவங்களுக்கு இந்தத் தொழிலைக் கத்துக்குடுத்துட்டு வர்றேன்.

எங்களுக்கு இப்ப வியாபாரம் ரொம்பவே நல்லா இருக்கு. இன்னும் கொஞ்சம் மெஷின் எல்லாம் வாங்கிப்போட்டு தொழிலை விரிவுபடுத்தலாம்னு பேங்க்ல லோன் கேட்டேன். என்னோட பேங்க் பணப் பரிவர்த்தனைகளை எல்லாம் பார்த்துட்டு லோன் தர சம்மதிச்சாங்க. ஆனாலும் என்ன காரணமோ தெரியல லோன் குடுக்கத் தயங்குறாங்க. இருளர்னா ஒழுங்கா லோன் கட்டமாட்டோம்னு சொல்றது என்ன நியாயம்னு தெரியல.

வாழ்க்கையோட அடித்தட்டுல இருக்கிற எங்க சமுதாய மக்களை முன்னேத்த அரசாங்கம் எத்தனையோ நல்ல திட்டங்களை கொண்டு வரத்தான் செய்யுது. ஆனா, அதிகாரிங்க அதையெல்லாம் செயல்படுத்த அக்கறை காட்டுறது இல்ல. அதனால எங்களுக்காக அரசாங்கம் ஒதுக்குற நிதியும் பயன்படுத்தப்படாம திரும்பிப் போகுதுன்னு சொல்றாங்க. நியாயமா தொழில் செஞ்சு கடனை திருப்பிக் கட்ட நினைக்கிற எங்களை மாதிரி ஆளுங்களுக்கு கடன் குடுக்க யோசிக்கிற பேங்குகள், பெரும் பணக்காரங்களுக்கு கோடி கோடியா அள்ளிக் குடுத்து திவால் ஆகுறாங்க. இத நினைச்சா தான் மனசுக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு” ஆதங்கத்துடன் முடித்தார் அய்யனார்.

செங்கல் சூளையில் கொத்தடிமையாக இருந்த ஒருவர் இன்னொரு இடத்தில் வேலைக்குச் சேர்வதிலேயே பெரும் சிக்கல் இருக்கிறது. அப்படியிருக்கையில், கொத்தடிமைத்தனத்திலிருந்து வெளியில் வந்து தன்னம்பிக்கையுடன் சுயமாக ஒரு தொழிலைத் தொடங்கி அதை ஆல்போல தழைக்கவும் வைத்திருக்கிறார் அய்யனார். அப்படிப்பட்டவர் இன்னும் உயரே வருவதற்காக கடன் கேட்கிறார். அவருக்கு தோள்கொடுத்து தூக்கிவிட வேண்டிய வங்கிகள், இருளர் என்ற காரணத்தைச் சொல்லி அவருக்கு கடன் தரமறுப்பதும் ஒருவித தீண்டாமை தான் என்பதை சம்பந்தப்பட்டவர்களுக்கு உணர்த்துவது யார்?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in