பிஞ்சு மனங்களில் நஞ்சை விதைக்கலாமா?

பள்ளிகளுக்குள் கையில் கயிறுகட்டி வளர்க்கப்படும் சாதி தீ!
பிஞ்சு மனங்களில் நஞ்சை விதைக்கலாமா?

பள்ளியில் மாணவர்கள் இரு தரப்பினராக பிரிந்து ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கிக் கொள்வார்கள். அவர்கள் மீது தண்ணீரைப் பீய்ச்சி அடித்து சண்டையை தலைமை ஆசிரியை விலக்கி விடுவார். பிறகு, பிரச்சினை என்னவென்று அவர் விசாரிக்கும் போது, கையில் கட்டியிருக்கும் கயிறைக்காட்டி நான் இன்ன சாதி என்பார்கள் மாணவர்கள். இதைச் சகிக்க முடியாத ஆசிரியை, அவர்கள் அனைவரின் கையில் இருக்கும் சாதி அடையாளக் கயிறுகளைப் பறித்து தீயிட்டு பொசுக்குவார். இது ஜோதிகா நடிப்பில் வெளியான 'ராட்சசி' படத்தில் இடம் பெற்ற ஒரு காட்சி.

சினிமாவில் மட்டுமல்ல... உண்மையில் தமிழகத்தில் குறிப்பாக, தென் மாவட்ட பள்ளி மாணவர்களிடையே இந்த சாதிக்கயிறு விவகாரம் ஆண்டாண்டுகளாகவே தொடர்கிறது. கோயில் கயிறு என்றால் அது ஒரே நிறத்தில் தான் இருக்கும். ஆனால், தமிழக பள்ளி மாணவர்களோ ஒரு கையில் இரண்டு கயிறுகளைச் சேர்த்துக் கட்டுகிறார்கள். அந்தக் கயிறுகளை வைத்து, நான் இன்ன சாதி என பெருமையாகப் பிரகடனப்படுத்திக் கொள்ளும் போக்கு தென்மாவட்ட மாணவர்கள் மத்தியில் வழக்கமாக இருக்கிறது.

பள்ளக்கால் அரசு மேல்நிலைப் பள்ளி.
பள்ளக்கால் அரசு மேல்நிலைப் பள்ளி.

இந்த கயிறு விவகாரம் சமீபத்தில், 12-ம் வகுப்பு படிக்கும் மாணவனின் உயிரை பறித்தது. நெல்லை மாவட்டம் பள்ளக்கால் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. கடந்த ஏப்ரல் 25-ம் தேதி இந்த பள்ளியில் 12-ம் வகுப்பு படித்த புதுக்குடி பகுதியைச் சேர்ந்த மாணவர், 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவரிடம் கையில் சாதிக் கயிறு கட்டி இருப்பது தொடர்பாக தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அந்த தகராறில் இருவரும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர்.

இதில் 12-ம் வகுப்பு மாணவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீஸார், அதே பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மூன்று மாணவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர். கைதான அந்த மாணவர்கள் மூவரும் இப்போது அரசு கூர்நோக்கு இல்லத்தில் இருக்கிறார்கள். இதன் தொடர்ச்சியாக அப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்கள் இருவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

 அன்பில் மகேஷ்
அன்பில் மகேஷ்

இந்த பிரச்சினை சம்பந்தமாக பேசிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ்,"எல்லோருக்கும் சமத்துவமான அரசாக இந்த அரசு செயல்படும். மாணவர்கள் சாதி மோதலில் ஈடுபடுவது வருத்தம் அளிக்கிறது. அத்துடன் மாணவர்களுக்கு கவுன்சலிங் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றார். இதையடுத்து அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குநரிடமிருந்து வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.

தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் சுற்றறிக்கை.
தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் சுற்றறிக்கை.

அதில், ‘சில இடங்களில் பள்ளி மாணவர்கள் பல வண்ணங்களில் கைகளில் கயிறு அணிந்து தங்களின் சாதியை அடையாளப்படுத்துவதாக தெரிய வருகிறது. இதனால் பல சாதிக் குழுக்களாக மாணவர்கள் பிரிந்து உணவு இடைவேளையின் போதும் மற்றும் விளையாடும் நேரத்திலும் பள்ளி நேரத்திலும் அனைவரோடும் கலந்து பழகாமல் குழுக்களாக இயங்கும் சூழல் உருவாகியுள்ளது.

எனவே, மாணவர் நலன் கருதி தலைமை ஆசிரியர்கள் இவ்விஷயத்தில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். இது போன்று சாதிக் குழுக்களாகப் பிரிவதால் ஏற்படும் மோசமான விளைவுகளை காலை பிரார்த்தனைக்குக் கூடும் போது தலைமை ஆசிரியர்கள் எடுத்துக் கூறவேண்டும். மேலும், மாணவர்கள் சாதி அடையாளமாக வண்ண வண்ண கயிறுகளை அணிவதைத் தடுக்கவும் அனைத்து வகை பள்ளிகளின் தலைமை யாசிரியர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்’ என அறிவுறுத்தப்பட்டது.

ஆனால், இந்தச் சுற்றறிக்கைக்குப் பிறகும் தமிழகத்தில் பல பள்ளிகளில் சாதி மோதல்கள் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் பெரிய காட்டுப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒரு மாணவர் சாதியைப் பற்றி தரக்குறைவாக பேசியதாக கூறி இரு தரப்பு மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் வெளிநபர்களும் பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்து மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

மே 10-ம் தேதி திண்டிவனம் அருகே, இருளர் சமுதாயத்தை சேர்ந்த 6-ம் வகுப்பு மாணவனை சக மாணவர்கள் சாதிப்பெயரை சொல்லி நெருப்பில் தள்ளிவிட்ட அதிர்ச்சி சம்பவமும் நடந்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களிடையே சமூக ரீதியான பிளவு ஏற்பட்டு, பெற்றோரும் சேர்ந்து போராட்டம் நடத்துமளவுக்குப் போயிருக்கிறது. இப்படி மாணவர்களிடையே சாதிப்பிரச்சினை இன்னமும் நீறுபூத்த நெருப்பாகவே இருக்கிறது.

தமிழகத்தில் மாணவர்கள் சாதிக்கயிறு அணிந்து வருவதாக 2018-ம் ஆண்டின் பயிற்சி ஐஏஎஸ் அதிகாரிகள் தமிழக அரசுக்குத் தெரியப்படுத்தினர். காவி, மஞ்சள், பச்சை வண்ணங்களில் அணியப்படும் இந்தப் பட்டைகள், கயிறுகள், நெற்றியில் வைக்கும் பொட்டு ஆகியவற்றின் மூலம் மாணவர்கள் தங்களது சாதியை அடையாளப்படுத்துவதோடு, அவற்றை வைத்து குழுக்களாக ஒன்று சேர்வதாகவும் அவர்கள் அரசுக்குத் தெரியப்படுத்தினர். இதையடுத்து இம்மாதிரியான பள்ளிகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளித்தலைமை ஆசிரியர்களுக்கு அப்போதே பள்ளிக் கல்வித்துறை ஆணையர் சுற்றறிக்கை அனுப்பினார்.

ஹெச்.ராஜாவின் ட்விட்
ஹெச்.ராஜாவின் ட்விட்

இந்த செய்தி வெளியானவுடனே, ‘கையில் கயிறு கட்டுவது. நெற்றியில் திலகமிடுவது இந்து மதநம்பிக்கை தொடர்பானது. இவற்றை பள்ளிகளில் தடை செய்வது அப்பட்டமான இந்து விரோத செயலாகும். மாற்றுமதச் சின்னங்களை தடை செய்யும் தைரியம் பள்ளி கல்வித்துறை ஆணையருக்கு வருமா? இந்த ஆணை உடனடியாக வாபஸ் பெறப்பட வேண்டும்’ என்று ட்விட் போட்டார் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா.

இதையடுத்து, அரசின் கவனத்திற்கு வராமல் இப்படி ஒரு சுற்றறிக்கை வெளியானதாக அன்றைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மழுப்பினார். தற்போதைய திமுக அரசு அப்படி பின்வாங்காமல் பள்ளிக்கல்வித்துறை மூலம் தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியதோடு நடவடிக்கையிலும் இறங்கியுள்ளது.

மதுக்கூர் ராமலிங்கம்.
மதுக்கூர் ராமலிங்கம்.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் நம்மிடம் பேசுகையில், “தென் மாவட்டங்களில் கொஞ்ச நாளாகத்தான் சாதிக்கலவரம் ஏற்படாமல் இருக்கிறது. முந்தைய கலவரங்கள் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி மோகன் குழு, ‘தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி இல்லாததும், நில உடமை சிந்தனை இருப்பதாலும் தான் சாதி மோதல் ஏற்படுகிறது’ என்றது.

தமிழகத்தில் சாதி, மோதல்கள் இல்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ஆனால், அதற்கான எல்லா ஆபத்துகளும் இருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. சாதி, மத உணர்வு கூடாது என அனைத்துப் பள்ளிகளிலும் விழிப்புணர்வு பிரச்சாரம் அவசியம் நடத்தப்பட வேண்டும். ஆசிரியர்களே சில இடங்களில் சாதி உணர்வோடு மாணவர்களைத் தூண்டி விடும் போக்கும் உள்ளது. அதையும் கண்டறிந்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

எம்.ஏ.பிரிட்டோ
எம்.ஏ.பிரிட்டோ

சாதிபாகுபாட்டிற்கு எதிராக நெல்லை மாவட்டத்தில் இயங்கி வரும் வான்முகில் அமைப்பின் இயக்குநர் எம்.ஏ.பிரிட்டோவிடம் பேசினோம். " நெல்லை மாவட்டத்தில் 1995-ம் ஆண்டில் இருந்தே சாதிய மனநிலை மாணவர்கள் மத்தியில் இருந்து வருகிறது. தற்போது கல்லூரி மாணவர்கள் மத்தியில் சாதி உணர்வு அதிகமாக பரவி வருகிறது. தனியார் கல்லூரிகளில் இரண்டு சாதி மாணவர்கள் மத்தியில் அடிக்கடி மோதல் நடக்கிறது. இதற்குக் காரணம், மாணவர்களை நேர் வழியில் ஊக்குவிக்க போதிய பயிற்சி ஆசிரியர்களுக்கு இல்லை.

முன்பு மாணவர்களுக்கு ரோல் மாடல் ஆசிரியர்கள் தான். ஆனால், இன்று சாதி தலைவர்கள் மாணவர்களுக்கு ரோல் மாடலாக மாறியுள்ளனர். இதற்குக் காரணம், மாணவர் - ஆசிரியர் இடையே உள்ள இடைவெளிதான். இப்போதுள்ள ஆசிரியர்கள் மாணவர்களிடமிருந்து ஒதுங்கிப் போகிறார்கள். அவர்களிடம் உரையாடல் நடத்துவதில்லை.

மேலும், மனித உரிமை குறித்த கல்வி மாணவர்களிடையே நடத்தப்படுவதில்லை. ஆனால். எங்கள் அமைப்பு சார்பில் மனித உரிமைக் கல்வியை மாணவர்கள் மத்தியில் எடுத்துச் செல்கிறோம். சமத்துவம், சகோதரத்துவம், பாகுபாடு கூடாது, முன் தீர்மானத்தோடு செயல்படக்கூடாது என்ற இந்த கல்வியை தமிழக பள்ளிகளில் கொண்டு சென்றாலே மாணவர்களிடையே இருக்கும் சாதியமன நிலை மாறும். அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

சாதி, மத மோதல்களுக்கு தமிழகத்தில் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என சூளுரைத்திருக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின், பள்ளி மாணவர்கள் மனங்களில் சாதி எனும் நஞ்சு விதைக்கப் படுவதையும் அதைவைத்து அவர்களுக்குள் நடக்கும் மோதல்களையும் அடியோடு ஒழிக்கவும் திடமான நடவடிக்கை எடுத்தால் நல்லது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in