ஏடிஎம் அட்டை தொலைந்துபோனால் என்ன செய்வது?

ஏடிஎம் அட்டை தொலைந்துபோனால் என்ன செய்வது?

நாம் அனைவருமே ஏடிஎம் டெபிட் கார்டு (பற்று அட்டை) பயன்படுத்தி வருகிறோம். சில சமயம் நம்மை அறியாமலேயே அந்த அட்டை தொலைந்துவிடும். சில சமயம் அட்டையைத் திருடர்களிடம் பறிகொடுத்து விடுவோம். நமது அட்டை தொலைந்துவிட்டது என்ற தகவல் நமக்குத் தெரியும்போது நம்மை அறியாமலேயே ஒரு பதற்றம் ஒட்டிக்கொள்ளும். அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் குழம்பி நமது நண்பர்களுக்கோ அல்லது குடும்பத்தினருக்கோ போன் செய்வோம். அவர்களிடம் அந்த அட்டையை எப்படி முடக்குவது (பிளாக் செய்வது) அல்லது எங்கு புதிய அட்டைக்கு விண்ணப்பிப்பது போன்றவற்றை கேட்டுத் தெரிந்துகொண்டு அதன்படி நடைமுறைகளை மேற்கொள்வோம். ஆனால் அதற்குள் அந்த அட்டையை வேறு ஒருவர் பயன்படுத்திவிட்டால் மிகப் பெரிய அளவுக்கு பிரச்சினையாகிவிடும். அதனால் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நமது தொலைந்து போன அட்டையை பிளாக் செய்ய வேண்டும்.

என்ன சொல்கிறது எஸ்பிஐ?

நமது நாட்டின் மிகப் பெரிய வங்கி எஸ்பிஐ. கிட்டத்தட்ட 45 கோடி மக்கள் இந்த வங்கியைப் பயன்படுத்தி வருகின்றனர். 22,219 கிளைகள் இந்த வங்கிக்குச் சொந்தமாக உள்ளன. எஸ்பிஐ வங்கிக்கு மட்டும் சொந்தமாக 62,617 ஏடிஎம் மையங்கள் இயங்கி வருகின்றன. பெரும்பாலானோர் பணம் எடுப்பதற்கு எஸ்பிஐ டெபிட் அட்டையைப் பயன்படுத்தியும் வருகின்றனர். அட்டை தொலைந்து போனால் உடனடியாக அதை பிளாக் செய்வதற்கு எஸ்பிஐ வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவற்றைப் பற்றி உங்களுக்குச் சில தகவல்கள்:

அட்டை தொலைந்ததும் உடனடியாக உங்கள் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து BLOCK என்று டைப் செய்து பின்பு உங்கள் அட்டையின் கடைசி 4 இலக்க எண்ணை டைப் செய்து 567676 என்ற எண்ணுக்கு உடனடியாக எஸ்எம்எஸ் செய்ய வேண்டும். பின்பு அடுத்த சில நொடிகளில் அட்டை பிளாக் செய்யப்பட்டதற்கான அதிகாரபூர்வ எஸ்எம்எஸ் உங்களுக்கு வந்து சேரும். தொலைந்துபோன அட்டையை பிளாக் செய்வதற்கு இது ஒரு வழிமுறை.

ஆனால் தற்போது எஸ்பிஐ வங்கி இன்னொரு வசதியைக் கொண்டுவந்துள்ளது. அதுதொடர்பாக வீடியோ ஒன்றையும் எஸ்பிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் என்ன குறிப்பிட்டுள்ளார்கள் என்றால், அட்டை தொலைந்ததும் உடனடியாக 1800 1234 அல்லது 1800-2100 எனும் எண்களுக்கு அழைக்க வேண்டும். போன் கால் கனெக்ட் ஆனவுடன் அட்டையை பிளாக் செய்ய 0 எனும் எண்ணை அழுத்த வேண்டும். அதன்பிறகு இரண்டு ஆப்ஷன்கள் கொடுக்கப்படும். எண் 1 அழுத்தினால் உங்கள் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் மற்றும் அட்டை எண்கள் விவரங்களைக் கொடுத்து அட்டையை பிளாக் செய்யமுடியும்.

எண் 2-ஐ அழுத்தினால் வங்கிக் கணக்கு எண் மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் விவரங்கள் மூலம் அட்டையை பிளாக் செய்ய முடியும். எந்த விவரங்கள் உங்களிடம் உடனடியாக உள்ளனவோ அவற்றை நீங்கள் தேர்வு செய்துகொள்ளலாம். ஏடிஎம் அட்டை எண் மூலமாக பிளாக் செய்ய விரும்பினால் ஏடிஎம் அட்டையின் கடைசி 5 இலக்க எண்ணை அளிக்க வேண்டும். பின்பு எண் 1-ஐ அழுத்தி அதை உறுதிப்படுத்த வேண்டும். மறுபடி கடைசி 5 இலக்க எண்ணை அளித்து எண் 2-ஐ அழுத்தினால் உடனடியாக அட்டை பிளாக் ஆகிவிடும். பின்பு அதற்கான உறுதிப்படுத்தப்பட்ட தகவல் உங்கள் மொபைலுக்கு எஸ்எம்எஸ்-ஆக வரும்.

புதிய அட்டையைப் பெற...

இந்த ஐவிஆர் கால் மூலமாக நீங்கள் புதிய ஏடிஎம் அட்டைக்கும் விண்ணப்பிக்க முடியும்.1800 1234 அல்லது 1800-2100 என்ற எண்ணுக்கு அழைத்து எண் 1-ஐ அழுத்தி உங்கள் பிறந்த வருடத்தையும் குறிப்பிடவேண்டும். பின்பு எண் 1ஐ அழுத்தி அதை உறுதிப்படுத்த வேண்டும். பின்பு உங்கள் வங்கி கணக்கில் குறிப்பிட்டுள்ள முகவரிக்குப் புதிய ஏடிஎம் அட்டை அனுப்பப்பட்டுவிடும். இந்த எண்ணைப் பயன்படுத்தி தொலைந்துபோன அட்டையை பிளாக் செய்யவும் முடியும், புதிய அட்டைக்கு விண்ணப்பிக்கவும் முடியும்.

இணையதளம் மூலம்...

அதுமட்டுமல்லாமல், எஸ்பிஐ வங்கியின் இணையதளம் மூலமாகவும் அட்டையை பிளாக் செய்ய முடியும். அட்டை தொலைந்தவுடன் வாடிக்கையாளர்கள் https://www.onlinesbi.com/ என்ற முகவரிக்குச் சென்று உங்கள் ஆன்லைன் கணக்கு விவரங்களான ‘User Name’ மற்றும் ‘Password’ போன்வற்றை டைப் செய்து உள்நுழைய வேண்டும். அங்கு e-services க்ளிக் செய்த பிறகு ATM Card Services கிளிக் செய்யவேண்டும். அதை க்ளிக் செய்த பிறகு `Block ATM Card’ ஆப்ஷன் வரும். அதையும் க்ளிக் செய்தால் உங்கள் ஏடிஎம் டெபிட் அட்டை பிளாக் ஆகிவிடும். தொலைந்துபோன உங்கள் அட்டையை மொபைல் ஆப் மூலமாக பிளாக் செய்யும் வசதியையும் எஸ்பிஐ வைத்துள்ளது.

ஆகவே டெபிட் அட்டை தொலைந்துபோனால் பதற்றமடையாமல் உடனடியாக அட்டையை பிளாக் செய்துவிடுங்கள். கையோடு புதிய அட்டைக்கும் விண்ணப்பித்துவிடுங்கள். விரைவில் உங்களுக்கு புதிய அட்டை வீட்டுக்கு வந்துவிடும். நிதி சார்ந்த திருட்டு அதிகமாக நிகழும் சூழலில் நாம் மிக கவனமாக இருப்பது மிக அவசியம்!

Related Stories

No stories found.