இழப்பிற்குப் பிறகும் வாழ்க்கை இருக்கிறது!

இணையை இழந்தவர்களுக்காக ஓர் அமைப்பு
மிஷேல் நெஃப் ஹெர்னாண்டஸ்.
மிஷேல் நெஃப் ஹெர்னாண்டஸ்.

இல்லற வாழ்க்கையில் இணைந்து, வருகிற சவால்களைச் சந்தித்து, கணவன் மனைவி இருவரும் வாழ்க்கையை லாவகமாகக் கொண்டு செல்கிறார்கள். திடீரென்று இணையரில் ஒருவர் உயிரிழந்தால், அத்தனை விஷயங்களும் நொடியில் மாறிவிடுகின்றன. இணையை இழந்து வாடுபவர்களின் துயரத்தை இன்னொருவரால் புரிந்துகொள்ளவே இயலாது. அந்த இழப்பிலிருந்து மீண்டு வருவதுபோல் கடினமான விஷயம் உலகில் எதுவும் இல்லை.

இணையரை இழந்து வாடுபவர்களை மீட்டுக் கொண்டு வருவதற்காகவே ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு தான் ’Soaring Spirits’. 14 ஆண்டுகளுக்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பில் தற்போது உலகம் முழுவதும் 40 லட்சம் பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இதன் நிறுவனர் மிஷேல் நெஃப் ஹெர்னாண்டஸ். இவர் இந்த அமைப்பை ஆரம்பிப்பதற்கான காரணம் நெகிழ்ச்சியானது.

மிஷேலும், அவர் கணவர் ஃபிலிப் ஹெர்னாண்டஸும் ஒருவரை இன்னொருவர் புரிந்துகொண்டவர்கள். வாழ்க்கையை மிகவும் ரசித்து வாழ்ந்தவர்கள். இருவரும் மலையேற்றம் செல்வார்கள். பைக் சவாரி செய்வார்கள். ஒரு கோடைகால மாலைப் பொழுது. பைக் சவாரிக்காகத் தனியே வெளியே சென்ற ஃபிலிப், வீடு திரும்பவில்லை. வாகனம் மோதிய விபத்தில் ஃபிலிப் உயிரிழந்ததாக உள்ளூர் மருத்துவமனையிலிருந்து தகவல் வந்தது. 39 வயதில் ஃபிலிப்புக்கு ஏற்பட்ட கொடூர மரணம், 35 வயது மிஷேலை உலுக்கிவிட்டது.

”அதுவரை நான் வாழ்ந்த வாழ்க்கை முற்றிலும் தலைகீழாக மாறிவிட்டது. என் வாழ்க்கையில் ஒவ்வொரு விஷயத்திலும் ஃபிலிப்பின் பங்கு இருந்தது. ஒவ்வொரு நொடியிலும் அவர் இழப்பு என்னை மிகவும் துன்புறுத்திக்கொண்டிருந்தது. ஒருபக்கம், ஃபிலிப் இல்லாத வாழ்க்கையை நினைத்தும், இன்னொரு பக்கம் ‘துணையை இழந்தவர்’ என்ற பதத்தைக் கண்டும் அச்சமாக இருந்தது.

ஃபிலிப் இல்லை என்பதை என் மூளை ஏற்றுக்கொண்டது. ஆனால், இதயம் அதை ஏற்க மறுத்து அடம்பிடித்தது. மீதி வாழ்க்கையை எப்படி வாழ்ந்து முடிக்கப் போகிறேன்? குழந்தைகளை எப்படி வளர்க்கப் போகிறேன்? தனியாக என்னால் சமாளிக்க இயலுமா? திருமண மோதிரத்தை அணியலாமா, கூடாதா? ஃபிலிப்பின் உடைகளை என்ன செய்ய வேண்டும்? இப்படி ஆயிரம் கேள்விகள் எனக்குள் உதித்துக்கொண்டேயிருந்தன.

என் துயரத்தைச் சாதாரணமான ஒருவரால் புரிந்துகொள்ளவே முடியாது என்பதையும், என்னைப் போலவே இணையை இழந்த ஒருவரால்தான் புரிந்துகொள்ள முடியும் என்பதையும் உணர்ந்தேன். இணையை இழந்தவர்களைத் தேடிச் சென்றேன். அவர்கள் தங்கள் துக்கத்தைப் பகிர்ந்துகொண்டார்கள். என் துக்கத்தை முழுமையாகக் கேட்டு, பாரத்தைக் குறைத்தார்கள். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று அவர்கள் தான் எனக்கு வழிகாட்டினார்கள். தனியாக வாழ்க்கையை எதிர்கொள்ளும் தைரியத்தை வழங்கினார்கள். அப்போதுதான் எனக்கு இணையை இழந்தவர்களுக்காக ஒரு அமைப்பை ஏற்படுத்தி, அவர்களைத் துயரத்திலிருந்து மீட்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது” என்கிறார் மிஷேல்.

2008-ம் ஆண்டு தன் எண்ணத்தைச் செயல்படுத்தும் விதமாக Soaring Spirits என்ற அமைப்பை ஆரம்பித்தார் மிஷேல். இது லாபநோக்கமற்ற தன்னார்வ தொண்டு நிறுவனம். நன்கொடைகள் மூலம் இயங்குகிறது. இணையை இழந்தவர்களைத் தேடி, இதில் இணைத்து, அவர்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்குத் தேவையான அனைத்தையும் இந்த அமைப்பு செய்ய ஆரம்பித்தது. நாளடைவில் நிபுணர்களைக் கொண்டு செயல்திட்டங்கள் உருவாக்கப்பட்டன. அமெரிக்காவில் பல இடங்களில் அமைப்பு கிளைவிட்டுப் பரவியது. இணையை இழந்தவர்கள் மாதம் இருமுறை கூடிப் பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டன. ‘நீங்கள் தனியானவர் அல்ல, நாங்கள் இருக்கிறோம்’ என்ற நம்பிக்கையை உறுப்பினர்களுக்கு வெகு விரைவில் ஏற்படுத்துவது இந்த அமைப்பின் தனிச் சிறப்பு.

ஆண்டுகள் செல்லச் செல்ல அமைப்பின் செயல்திட்டங்கள் விரிவடைந்தன. அமெரிக்காவைத் தாண்டியுள்ளவர்களுக்காக, 24 மணி நேரமும் தொடர்புகொள்ளும் விதத்தில் ஆன்லைன் அலுவலகங்கள் ஆரம்பிக்கப்பட்டன. இணையை இழந்த புதியவர்கள், சமூகக் குழுக்கள், இணையை இழந்தவர்களுக்கான கிராமம், இணையை இழந்தவர்களுக்கான பயிற்சி முகாம், இணையை இழந்தவர்களின் குரலை வெளிப்படுத்துவதற்கான வலைப்பூ, இணையை இழந்தவர்களுக்கான பேனா நட்புகள் என இந்த 14 ஆண்டுகளில் மிகப் பெரிய ஆலமரமாக வளர்ந்து நிற்கிறது மிஷேலின் அமைப்பு.

கணவனை இழந்த பெண்கள், மனைவியை இழந்த ஆண்கள், திருநங்கைகள், திருநம்பிகள், மாற்றுப்பாலினத்தவர்கள் என அனைவருக்குமான அமைப்பாக இது செயல்படுகிறது. நாடு, மொழி, இனம் என்ற பாகுபாடு கிடையாது. தற்போது இந்த அமைப்பில் 40 லட்சம் பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

அமைப்பின் அங்கத்தினர்கள்...
அமைப்பின் அங்கத்தினர்கள்...

கோவிட்டுக்குப் பிறகு இந்த அமைப்பின் தேவை பல மடங்காக அதிகரித்திருக்கிறது. தொற்று காரணமாக லட்சக்கணக்கானவர்கள் தங்கள் இணையின் முகத்தைக்கூடப் பார்க்க முடியாத சூழல் உருவானது. வாழ்நாள் முழுவதும் இவர்களுக்கு இந்த வலி இருந்துகொண்டேயிருக்கும். அதனால் தொற்றுக் காலத்தில் இணையை இழந்தவர்களுக்கென்று சிறப்பான செயல்திட்டம் வடிவமைக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.

“இந்த அமைப்பில் உள்ளவர்கள் தொடர்ந்து இதிலிருக்க வேண்டும் என்று அவசியமில்லை. விரும்பினால் தொடரலாம். மறுமணம் செய்துகொள்ளலாம். தனியாக வாழ விரும்பினால் வாழலாம். இவையெல்லாம் தனிப்பட்ட நபர்களின் விருப்பங்கள். அதிலெல்லாம் அமைப்பு தலையிடாது. எங்களின் நோக்கம் மிகவும் எளிமையானது. இணையை இழந்து வாழ்க்கையே முடிந்துவிட்டது என்று நினைப்பவர்களுக்கு, மீண்டும் ஒரு வாழ்க்கையை உருவாக்கிக்கொள்ள உதவி செய்வதுதான். எங்களைத் தேடி நீங்கள் வரவேண்டியதில்லை. நீங்கள் எங்கிருந்தாலும் நாங்கள் உங்களைத் தொடர்புகொள்வோம். நம்பிக்கையளிப்போம். இயல்பான வாழ்க்கைக்குக் கொண்டு வருவோம். நீங்கள் தனி நபர் அல்ல. உங்களுக்காக ஒரு சமூகமே காத்திருக்கிறது. நீங்கள் விரும்பும் வரை, உங்களுக்குத் தனியாக வாழ முடியும் என்ற நம்பிக்கை வரும் வரை எங்களுடன் இணைந்திருக்கலாம். நாங்கள் இழப்புகள் மீது கவனம் செலுத்துவதில்லை. நம்பிக்கையான எதிர்கால வாழ்க்கை மீதே கவனம் செலுத்துகிறோம்” என்கிறார் மிஷேல் ஹெர்னாண்டஸ்.

கடந்த ஆண்டில் சிஎன்என் ஹீரோவாக அங்கீகரிக்கப்பட்டார் மிஷேல் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in