சகதி மனிதர்களின் கதை

தண்ணீர் சாமிகளின் ஆச்சர்ய வாழ்க்கை
ஆழ்துளை கிணறு அமைக்கும் தொழிலாளர்கள்
ஆழ்துளை கிணறு அமைக்கும் தொழிலாளர்கள்படம்: சிவகுமார்

‘’யம்மா…ஓ…யம்மா…ஓ…யம்மா ஓ…’’என வேலையின் சுமையால் வாயில் இருந்துவரும் முணங்கல் அவர்களின் வலியைக் கடத்துகிறது. தமிழகம் முழுவதும் கோடைவெயில் வாட்டிஎடுக்க, இந்நேர சீசன் தொழில்களில் ஒன்று வீடுகள், தோட்டங்களில் போர் போடுவது! என்னதான் மிஷின் போர்கள் வந்துவிட்டாலும் மனிதஉழைப்பையே பிரதானமாகக் கொண்ட ‘கைபோர்’ இன்னும்கூட உயிர்ப்புடன் இருப்பது ஆச்சர்யமானது தான்!

கை போர் பணியில் தொழிலாளர்கள்
கை போர் பணியில் தொழிலாளர்கள்படம்: சிவகுமார்

விவசாயி சேத்துல கால் வைச்சாத்தான் நாமெல்லாம் சோத்துல கைவைக்க முடியும்’ என்னும் பஞ்ச் டயலாக் போர்போடும் தொழிலாளர்களுக்கும் பொருந்தும். நாள்முழுக்க சகதியில் நிற்கும் இவர்கள், வேலை செய்யும் நேரத்தில் மட்டும் 50 முறையேனும் குளிக்கிறார்கள். சுவிட்சைப் போட்டால், மோட்டார் ஓடி திபு, திபுவென தண்ணீர் பாய்கிறது. ஆனால் அதன்பின்னால் இவர்களின் வலிமிகுந்த வாழ்க்கை ரொம்பப் பெரியது.

குமரியில் கைபோர் போடும் பணியில் இருந்த தொழிலாளர்களை சந்தித்தேன். அவர்களைச் சுற்றி சேறும், சகதியுமாக கட்டி நிற்கிறது. கைபோர் போட்டுக் கொண்டிருக்கும்போதே குழாயின் ஊடே, நிலத்தடிநீரும், சகதியுமாக உடல்முழுவதும் தெறிக்கிறது. நான்குபேர் சுற்றி நின்று போர்போட, ஏதோ போரே நடப்பதுபோல் அவர்களின் முணங்கல் சத்தம் ஒலிக்கிறது. அவர்களில் ஒருவரான மதுவிடம் பேசினேன். ‘’எப்பவுமே சகதியில் நிக்குறதால, சிலமண்ணோட வாக்குக்கு கால் நல்லா அரிக்கும். சிலமண்ணு ஒன்னும் செய்யாது.

பொதுவாகவே கோடைகாலத்துல தான் போர் போடுவாங்க. வெயில் ஒருபக்கம் வாட்டி எடுக்கும்போது, உடம்பு முழுசும் சேறா இருந்தா எப்படி இருக்கும்? தீப்பிடிக்கும்போது எப்படி இருக்குமோ அப்படி ஒரு சூடுதான் எங்க உடம்பிலும் அப்போ இருக்கும். அதனால ஒருஅடி போர் போட்டதுமே, ஒருகுளியலைப் போட்டுருவோம். ஒருநாளைக்கு குறைஞ்சது 50 அடிக்கு போர் போடுவோம். அப்படிப் பார்த்தா எப்படியும் 50 முறையாச்சும் குளிப்போம். எங்கஉடம்பும் தண்ணீர்பட்டே பழகிடுச்சு. அதனால, ஜலதோஷம், இருமல்ன்னு எந்த தொந்தரவு எதுவும் இருக்காது. குளிக்காம தொடர்ந்து வேலை செய்யவே முடியாது.

போர் போடும் பணியில்...
போர் போடும் பணியில்...படம்: சிவகுமார்

இன்னொரு விசயம் என்னன்னா, உழைக்கும் தொழிலாளர்களிலேயே இதுதான் ரொம்ப கஷ்டமான வேலை. போர் கம்பியை தூக்கி போர்போட அடிக்கும்போது, ஒவ்வொருத்தர் கையிலும் குறைஞ்சது 25 கிலோ வெயிட் பிடிக்கும். அப்படி ஒருநாள் முழுசுக்கும் நினைச்சுப் பாருங்க. இதனால கொஞ்சநேரம் வேலை செஞ்சாலே நல்லா பசிச்சுடும். அதுக்குன்னு நிறைய சாப்பிட்டுட்டு வந்தா வேலையே செய்யமுடியாது. இதனால இரண்டு, மூணு தடவையா பிரிச்சு பசிக்கும்போது மட்டும் சாப்பிடுவோம்.”என்றார்.

சகதி மனிதர்கள்
சகதி மனிதர்கள்படம்: சிவகுமார்

போர் போட்டுக் கொண்டிருந்த பி.தங்கராஜா, ‘தம்பி எனக்கு இந்த தொழிலுல 40 வருசம் அனுபவம் இருக்கு. முன்னாடியெல்லாம் குமரி மாவட்டத்தோட கிராமங்களில் முப்பது அடியிலேயே நல்லதண்ணீர் வந்துடும். ஆனா இப்போ கிராமங்களில்கூட குறைஞ்சது 100 அடிக்கு மேல போர் போடுறாங்க. அன்னிக்கு பார்த்ததைவிட நீர்மட்டம் ரொம்ப கீழ போயிடுச்சு. எல்லா வேலையும் ஒரு இஷ்டம் இருந்தாத்தான் செய்ய முடியும். ஆனா எங்க வேலையைப் பொறுத்தவரை கோபப்பட்டாத்தான் செய்ய முடியும். ‘தூக்குவே’ன்னு கோபத்தோட கத்திகிட்டே கைபோரை தூக்குவோம்.

சகதியா மேல தெறிக்கும். அதை சகதின்னு நினைக்க மாட்டோம். ’சந்தன அபிஷேகம்’ன்னு நினைச்சுப்போம். அதுமாதிரி போர் அடிக்கும்போது நல்லா மூச்சு வாங்கும். ஒரு கிலோ மீட்டர் தள்ளி புகை போட்டாக் கூட எங்களுக்கு மூக்குல ஏறும். சவாலான வேலை இது. இன்னிக்கு மிஷின் போர்கள் பெருகிடுச்சு. கூடவே இந்த வேலையோட சிரமத்தை தெரிஞ்சுகிட்டு அடுத்த தலைமுறையில் பெருசா யாரும் வரல. முன்னாடி நூறுவீடு இருந்த இடங்களில் இப்போ 500 வீடு ஆகிடுச்சு. வீட்டுக்கு, வீடு போர் போட்டுருக்காங்க. கிராமங்களில் வரும் சந்து,பொந்துகள் கூட காங்கீரீட் தரை ஆகிடுச்சு. மழை பெஞ்சாக்கூட பூமிக்கு கீழ தண்ணீர் போறதுல சிரமம் இருக்கு. இதனால் எல்லாம் நிலத்தடி நீர்மட்டம் கீழ போயிடுச்சு. ஆனா அதை கூட்டதுக்கு மக்கள்கிட்ட எந்த அக்கறை இல்ல. ஆனா அவுங்கவுங்க வீட்ல போர் போடும்போது மட்டும், ஓ தண்ணீ இவ்வளவு கீழ போயிடுச்சான்னு கேட்பாங்க.” என்று சொல்லிக் கொண்டே சேறு படிந்த உடம்போடு சாப்பிட்டு முடித்தவர் மீண்டும் போர் போடச் சென்றார்.

சிறிதுநேரத்தில் மீண்டும் உடல்முழுவதும் சகதியால் நிறைந்துபோக, ஒரு பிரேக் விட்டுவிட்டு குளியல். அதன்பின்னர் கம்பிகளை பிரித்து, ஒரு அடி கூட்டிக்கட்டி மீண்டும் வேலையைத் துவங்குகிறார்கள். மற்ற தொழிலாளர்களைப் போல் வேலைசெய்து கொண்டே நம்மோடு, அவர்களால் பேச இயலவில்லை. மார்பில் பிடிக்கும் கடினப்பணி என்பதால் அடுத்த ஒரு அடிக்கு போர் போட்டதும் குளிக்க வருவார்கள். அப்போது தான் பேச இயலும். அடுத்த ஒருஅடிக்கு அஞ்சுநிமிடமும் ஆகலாம். அரை மணிநேரமும் ஆகலாம். இதோ இந்தசுற்று முடிந்து ரிலாக்ஸ்டாக வந்த சேகரிடம் பேசினேன். ‘’கோடை காலம்தான் எங்களுக்கு சீசன். கோடையில் போர் போடும்போதுதான் சரியான தண்ணீர்மட்டம் தெரியும்.

சேகர்
சேகர் படம்: சிவகுமார்

அதனால கோடை காலத்துல நல்லதொழில் இருக்கும். மற்றகாலங்களில் ரொம்பகுறைவு. அதுலயும் மிஷின்போர் வந்தபின்னாடி கிராமங்களில் தான் எங்களை கூப்பிடுறாங்க. இதனால் போர்வேலை இல்லாத சமயங்களில் வயல்வேலை, வீட்டுக்கு பவுண்டேஷன் போடுகது மாதிரியான வேலைகளுக்கு போவோம். கொத்தனார் வேலைக்கு 100 ரூபாய் சம்பளம் இருக்கும்போது, அதைவிட கஷ்டமான வேலைன்னு போர்போட 200 ரூபாய் சம்பளம் இருந்துச்சு. ஆனா கொத்தனாருக்கும், எங்களுக்கும் இப்போ ஒரே சம்பளம் ஆகிடுச்சு. ஒருவகையில பார்த்தா நாங்களும் வறட்சியில் இருந்து மக்களை மீட்கும் சேவகர்கள் தான்!”என்கிறார்.

போர் போடத்துவங்கும் முன்பு நீரோட்டம் பார்ப்பது, பூஜை செய்து, தேங்காய் உடைத்து பணியை ஆரம்பிப்பது, நல்லதண்ணீர் கிடைத்தவுடன் அதைத் தெய்வமாகவே வணங்குவது என கலாச்சாரத்தோடும் போர் போடும் பணிக்கு நிறையவே தொடர்புகள் இருக்கிறது. வள்ளுவர் சொன்னதைப் போல் ‘நீரின்றி அமையாது உலகு’ அல்லவா?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in