குமரி முத்துவின் அண்ணனுக்கு வீடுகட்டிக் கொடுத்த ஆர்.எஸ்.எஸ்!

ஆளும் திமுக என்ன செய்யப்போகிறது?
புது வீட்டில் மனைவியுடன் நீலகண்டன்...
புது வீட்டில் மனைவியுடன் நீலகண்டன்...

குபீரெனச் சிரிக்கும் குமரிமுத்துவின் வெடிச்சிரிப்பை அத்தனை சீக்கிரம் யாரும் மறந்துவிடமுடியாது. நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாது திமுகவின் நட்சத்திரப் பேச்சாளராகவும் வலம் வந்த அறிவுஜீவி!

குமரிமுத்துவின் உடன்பிறப்பான நீலகண்டன் குமரிமாவட்டம், பைங்குளம் கிராமத்தில் வறுமைச் சூழலில் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இதைபார்த்து இரக்கப்பட்ட அந்தப் பகுதியைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் தோழர்கள் அவருக்கு தங்கள் சொந்த செலவில் சின்னதாய் ஒரு வீடு ஒன்றை அண்மையில் கட்டிக் கொடுத்துள்ளனர்.

நீலகண்டனின் பழைய கூரை வீடு
நீலகண்டனின் பழைய கூரை வீடு

இதுவரை கூரைவீட்டில் வசித்த நீலகண்டனும், அவரது மனைவி சுசீலாவும் இப்போது ஆஸ்பெஸ்டாஸ் கூரை போட்ட கான்கிரீட் வீட்டுக்கு மாறியிருக்கிறார்கள். 75 வயதைக் கடந்த இந்த வயோதிக தம்பதிகளுக்கு போதுமானதாக இருக்கக்கூடிய சின்னஞ்சிறிய வீடு அது. வீட்டுக்குப் பின்னால் ஒரு சமையல் அறை, அதை ஒட்டியே கழிப்பிடம் மற்றும் குளியலறை வசதி என அரை சென்ட் இடத்தில் தங்களால் முடிந்த வசதிகளைச் செய்து கொடுத்துள்ளார்கள்.

புதுமனை புகுந்த உற்சாகத்துடன் நம்மிடம் பேசத் துவங்கினார் நீலகண்டன். “சின்ன வயசுல மர அறுவை வேலை செய்தேன். மெட்ராஸ் வரைக்கும் போய் வேலை பார்த்திருக்கேன். பத்துப் பதினஞ்சு வருசத்துக்கு முந்தியே எனக்கு கண்ணுல கோளாறாகி பார்வை மங்கிருச்சு. அதுக்குப் பின்னால வாழ்க்கையே தலைகீழா மாறிப் போச்சு. என்னோட முதல் மனைவியும், குழந்தையும் சின்ன வயசுலயே இறந்துட்டாங்க. சுசீலா என்னோட ரெண்டாம் தாரம்.

என்கூட பிறந்தது மொத்தம் 13 பேர். அதுல 8 பேர் ஆண். 5 பேர் பெண். எட்டுப் பசங்கள்ல குமரிமுத்துதான் கடைக்குட்டி. இதே ஊருல பத்திரகாளி அம்மன் கோயிலுக்கு பக்கத்துல அரை சென்ட் பூமி எனக்கு இருந்துச்சு. அதுலதான் குடிசைபோட்டு இருந்தேன். மழைக்கு கூரையெல்லாம் கிழிஞ்சு போச்சுது. புதுசா கூரை மாத்த வழியில்லாததால அதுக்குள்ளயே கிடந்தோம்.

இந்தப் பகுதியைச் சேர்ந்த (பாரதிய மஸ்தூர் சங்கத்தின் நிர்வாகி) தேவதாஸ் என்பவர்தான் எங்களோட நிலைமையப் பார்த்து பரிதாபப்பட்டு, ஆர்எஸ்எஸ் தம்பிகளுக்கு தகவல் கொடுத்தார். அவங்க மூலமாத்தான் எங்களுக்கு இந்த வீடு கிடைச்சிருக்கு.

கூரையை மட்டும் மாத்திக்குடுங்கப்பான்னு தான் நாங்க சொன்னோம். ஆனா, அவங்க வீடாவே கட்டிக்குடுத்துட்டாங்க. முதலில் வேலப்பன் என்பவர் தார்பாலின் வாங்கிக் குடுத்து கூரைவீட்டை மூடிவைத்தார். அதுக்கப்புறம், ஆர்எஸ்எஸ் புள்ளைங்க இந்த வீட்டைக் கட்டிக்குடுத்தாங்க’’ என நெகிழ்ந்துபோய் சொன்னார் நீலகண்டன்.

நீலகண்டனுடன் ஆர்எஸ்எஸ் அமைப்பினர்...
நீலகண்டனுடன் ஆர்எஸ்எஸ் அமைப்பினர்...

கோயிலுக்குப் பக்கத்தில் குடிசைவீட்டில் வசித்த நீலகண்டணும், சுசீலாவும் ஆன்மிகத்தில் காட்டிய ஆர்வமும், ஈடுபாடுமே அவர்களை ஆர்எஸ்எஸ் இயக்கத்தினருக்கு அடையாளம் காட்டியது. எனினும் நீலகண்டனின் பூர்விக வீட்டை இடித்துவிட்டு அதே இடத்தில் வீடு கட்டுவதற்கு அங்கே போதிய வசதிகள் இல்லை. இதனாலேயே பைங்குளம் ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் ஊராட்சியின் அனுமதியுடன் அரை சென்ட் நிலத்தைப் பெற்று இந்த வீட்டைக் கட்டிக்கொடுத்திருக்கிறார்கள்.

ஒரே ஒரு மரக்கட்டில், நான்கைந்து பாத்திரங்கள், ஒற்றைப் போர்வை, மண் சட்டிகள், கழிப்பறை, குளியலறைக்கான வாளிகள் - இது மட்டுமே இப்போது இந்தத் தம்பதியின் மொத்த சொத்து. குமரிமுத்துவை திரைத்துறைக்குள் திணித்தவர் நீலகண்டன்தானாம். கடைசியாக தேர்தல் பிரச்சாரத்திற்காக குமரி மாவட்டம் வந்தபோது அண்ணன் நீலகண்டனையும் பார்க்க வந்திருக்கிறார் குமரிமுத்து. “அடுத்த வாரம் வருகிறேன். உன் கஷ்டங்களையெல்லாம் தீர்க்கிறேன்” எனச் சொல்லிவிட்டுப் போனவர் திரும்பி வரவே இல்லை; காலமாகிவிட்டார். இந்தத் தகவலைச் சொல்லும்போதே நீலகண்டனின் கண்கள் குளமாகிறது.

குமரி முத்து
குமரி முத்து

நம்மிடம் அதைப்பற்றியும் பேசிய நீலகண்டன், “மெட்ராஸ்ல சூளைமேடு பகுதியில வேலை செஞ்சப்ப ஊருக்கு அம்மாவுக்கு பணம் அனுப்புவேன். அதிலிருந்த என்னோட அட்ரஸை எடுத்துக்கிட்டு மெட்ராசுக்கு வந்துட்டாரு குமரி முத்து. அந்த சமயத்துல, நாகர்கோவில்காரங்களான ஆணழகன், மின்னல், சத்தியநேசன் என சில பேரு சினிமாவுல சின்னச் சின்ன ரோல் பண்ணிட்டு இருந்தாங்க. அந்த மூணு பேருக்கிட்டயும் என் தம்பி குமரிமுத்துவைப் பத்தி சொல்லி வெச்சிருந்தேன். சத்தியநேசன் தான் குமரி முத்துவை முதன் முதல்ல சத்யா ஸ்டூடியோவுக்கு கூட்டிட்டுப் போனார். அதுக்கப்புறம் தான் தம்பிக்கு சினிமா வாய்ப்புகள் அமைஞ்சுது.

சினிமால பிசியான பின்னாடி ஊருல நல்லது, கெட்டதுனா மட்டும் தான் குமரிமுத்து வருவார். அப்படி வர்றப்ப என்னையும் வந்து பார்ப்பார். கைச்செலவுக்கு ஏதாச்சும் பணம் கொடுப்பார். அதுவும் பெரிய தொகையா இருக்காது. ரெண்டு மூணு நாளைக்கு பொழப்பு செழிப்பா ஓடும். எங்க அம்மாவையும் நானே பாத்துக்கிட்டதால, குமரி முத்து இந்தப் பக்கம் வந்தா எங்க வீட்டுக்கு வராமப் போகமாட்டார். அப்பா இறந்துட்டதால குமரி முத்துவை நான் தான் படிக்க வெச்சேன். ஆனாலும், அவரு நல்லா வந்த காலத்துல எங்கள கைதூக்கி விடணும்னு நினைக்கல. அந்த ஆதங்கம் இன்னமும் இருக்கு” என்றார்.

மனைவி சுசீலாவுடன் நீலகண்டன்...
மனைவி சுசீலாவுடன் நீலகண்டன்...

நிரந்தர முகவரி இல்லாததாலும் வசித்த வீட்டிற்கு கதவு எண் இல்லாததாலும் நீலகண்டனுக்கு குடும்ப அட்டையும் இல்லை. என்றாலும், நீலகண்டன் - சுசீலா தம்பதியின் வயோதிகத்தை கணக்கில் கொண்டு அக்கம் பக்கத்தினர் தாங்கள் வாங்கும் ரேஷன் அரிசியில் 2 கிலோ வீதம் இவர்களுக்குக் கொடுக்கிறார்கள். குடும்ப அட்டை இல்லாததால் முதியோர் பென்ஷனும் இவர்களுக்கு கிட்டியபாடில்லை. கஷ்ட ஜீவனத்தில் இருந்தாலும் உதவிகேட்டு யாரையும் நிர்பந்திக்கவில்லை நீலகண்டன்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த அஜித், “இவர்களுக்கு உதவி செய்ய நாங்கள் முன்வந்த போதும் அதை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இவர்கள் இல்லை. நான்கு ஆண்டுகள் தொடர்ச்சியாக வலியுறுத்திச் சொன்ன பிறகுதான் வீடுகட்டிக்கொள்ள சம்மதித்தார்கள். அதுவும், கூரை வீடே போதும் என்று தான் சொன்னார்கள். நாங்கள் தான் கூரையெல்லாம் கிடைக்கவில்லை என்று சொல்லி இந்த வீட்டைக் கட்டிக் கொடுத்தோம். வறுமையில் வாழ்ந்தாலும் நேர்மையுடன் வாழ நினைக்கும் இவர்களுக்கு வீடு கட்டிக்கொடுத்ததில் எங்களுக்கும், எங்கள் இயக்கத்துக்கும் பெருமகிழ்ச்சிதான். இதேபோல், இவர்களுக்கு முதியோர் பென்ஷன் கிடைக்கவும் அதற்கு ஆதாரமான ரேஷன் அட்டை கிடைக்கவும் அரசு உதவி செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்” என்றார்.

திமுகவின் வெற்றிக்காக ஊரெல்லாம் மைக் பிடித்து முழங்கிய குமரி முத்துவின் அண்ணனுக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பினர் வீடுகட்டிக் கொடுத்திருக்கிறார்கள். ஆளும் அதிகாரத்தில் இருக்கும் திமுக என்ன செய்யப் போகிறது?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in