3 கிராம் தங்கத்தில் வேளாங்கண்ணி பேராலயத்தை உருவாக்கிய பொற்கொல்லர்!

3 கிராம் தங்கத்தில் வேளாங்கண்ணி பேராலயத்தை உருவாக்கிய பொற்கொல்லர்!
முத்துக்குமரன்

நகைக்கடைகளுக்குப் பெயர்போன சிதம்பரம் காசுக்கடைத் தெருவை ஒட்டி, நகைக் கடை வைத்திருக்கிறார் முத்துக்குமரன். பரபரப்பான வியாபாரத்துக்கு இடையிலும் தனது ஆத்ம திருப்திக்காக இவர் செய்துவரும் காரியம் அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கிறது. அதிகபட்சம் 3 கிராம் தங்கத்தில், புகழ்பெற்ற இடங்களையும், நிகழ்வுகளையும் நினைவுபடுத்தும் வகையில் அப்படியே மினியேச்சர்களாகச் செய்து அசத்தி வருகிறார் முத்துக்குமரன்.

வேளாங்கண்ணி பேராலயம்
வேளாங்கண்ணி பேராலயம்

தற்போது கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு பிரம்மாண்டமான வேளாங்கண்ணி பேராலயத்தை அப்படியே மினியேச்சர் மாதிரியாகச் செய்திருக்கிறார். அதற்கு அவர் செலவிட்டிருக்கும் தங்கத்தின் அளவு வெறும் 2 .790 கிராம். அதாவது 3 கிராமுக்கும் குறைவு.

மெக்கா, மெதினா
மெக்கா, மெதினா

இப்படி முத்துக்குமரன் செய்திருப்பது ஒன்றிரண்டல்ல, எண்ணற்றவை செய்திருக்கிறார். தேர்தல் சமயத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி வெறும் 1.420 கிராம் தங்கத்தில் நாடாளுமன்றம், அதில் வாக்குப்பதிவை வலியுறுத்தும் பதாகையுடன் ஒரு பெண் உருவம் ஆகியவற்றை உருவாக்கி அசத்தினார். தூய்மை இந்தியா திட்டம் குறித்த விழிப்புணர்வை வலியுறுத்தும் விதமாக குப்பைத்தொட்டி, ஒரு பெண் கூட்டுவது, கழிப்பறை, சோலார் பேனல் ஆகியவற்றை 1.300 கிராம் தங்கத்தில் உருவாக்கினார்.

தூய்மை இந்தியா
தூய்மை இந்தியா

கடலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த சுரேஷ்குமார் கேட்டுக்கொண்டதால், கற்போம், கற்பிப்போம் இயக்கத்தின் லோகோவை பள்ளிக்கூடம், மாணவர்கள், மருத்துவர், காவலர் உருவங்களை வெறும் 840 மிகி தங்கத்தில் செய்து அசத்தினார் முத்துக்குமரன். அண்மையில், கரோனா விழிப்புணர்வுக்காக மருத்துவர், காவலர், தூய்மைப் பணியாளர் ஆகிய உருவங்களுடன் இந்திய வரைபடத்தையும் சேர்த்து 1.390 கிராமில் செய்திருந்தார்.

உலகக் கோப்பை
உலகக் கோப்பை

இப்படி விழிப்புணர்வுக்காக செய்வது ஒருபக்கம் என்றால், இன்னொரு பக்கம் உலகப் புகழ்பெற்ற இடங்களையும் மினியேச்சராக குறைந்த அளவு தங்கத்தில் உருவாக்குவதை, தனக்குப் பிடித்தமான பொழுதுபோக்காகவே வைத்திருக்கிறார் முத்துக்குமரன். 8 கிராம் தங்கத்தில் தாஜ்மஹால், 2 கிராம் தங்கத்தில் டெல்லி செங்கோட்டை, வெறும் 300 மிகி தங்கத்தில் மெக்கா மெதினா இத்தனையையும் செய்து சாதித்திருக்கிறார்.

4.230 கிராம் தங்கத்தில் சிதம்பரம் நடராஜர் கோயிலின் 4 கோபுரங்கள், நடுவில் பொற்சபை என்று அச்சு, அசலாக வடித்து பொக்கிஷமாக வைத்திருக்கிறார்.

முத்துக்குமரன்
முத்துக்குமரன்

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது உலகக் கோப்பையை 70 மிகி தங்கத்தில் செய்தவர், தமிழக சட்டப்பேரவை, ஜெயலலிதா உருவம் ஆகியவற்றை 3.400 கிராமில் செய்தார்.

தாஜ்மஹால்
தாஜ்மஹால்

’’பொதுவாகத் தங்கத்தில் ஆபரணம்தான் செய்வார்கள். ஆனால் நான்தான் அதைமாற்றி, இப்படி கலைப்பொருட்களாகச் செய்கிறேன்” என்று முன்னுரை தந்துவிட்டு, பேச்சைத் தொடங்கினார் முத்துக்குமரன்.

’’பொற்கொல்லர் வேலை எங்களோட பரம்பரைத் தொழில். நான் 9-ம் வகுப்புவரை தான் படித்தேன். அப்புறம் பள்ளிக்கூடம் போனது போதும், பட்டறைக்கு வாடா என்று அப்பா கூப்பிட்டார். வந்துவிட்டேன். அப்பாவிடம் தான் தொழில் கற்றுக்கொண்டேன். தாலி, செயின், மூக்குத்தி, தோடு, வளையல்னு எல்லோரையும் போல நாமளும் வெறும் நகைத் தொழிலாளியாகவே வாழ்ந்து விடுவோமோ என்று ஒரு கட்டத்தில் தோன்றியது. தினமும் செய்தித்தாள் படிப்பேன். அதில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்ற செய்திகள்தான் அதிகம் வரும். அதைத்தாண்டி ஒரு நல்ல செய்தி வரவேண்டும், அதில் நாம் இடம்பெற வேண்டும் என்று நினைத்தேன். நம்ம தொழிலை வைத்தே எதையாவது செய்து சாதனை படைக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.

டெல்லி செங்கோட்டை
டெல்லி செங்கோட்டை

முதன் முதலில் 2011-ல், வெறும் 90 மிகி தங்கத்தில் தாலி செய்தேன். எனக்கே ஆச்சரியமாக இருந்தது. தாலி என்றால் குறைந்தது 2 கிராமில் செய்வதுதான் வழக்கம். ஆனால், வெறும் 90 மிகி தங்கத்தில் செய்ததை சக தொழிலாளர்களே ஆச்சரியத்துடன் வந்து பார்த்தார்கள். அப்போதே, இதுகுறித்து செய்தித்தாளில் செய்தியும் வெளியானது. அதில் கிடைத்த ஊக்கம், உற்சாகம் அப்படியே தொற்றிக்கொண்டு மேன்மேலும் பல பொருட்களை செய்யத் தூண்டியது” என்றார் முத்துக்குமரன்.

“நகை வேலையே மிகவும் நுணுக்கமானது. அதிலும் குறைந்த அளவு தங்கத்தில் இப்படிப்பட்ட பொருட்களை செய்வது மிகவும் கடினமாயிற்றே, கடை வியாபாரத்தையும் பார்த்துக்கொண்டு இதையும் எப்படி சமாளிக்கிறீர்கள்?” என்று அவரைக் கேட்டபோது,

சட்டப்பேரவை, ஜெயலலிதா
சட்டப்பேரவை, ஜெயலலிதா

“கடந்த ஒன்றரை ஆண்டுகளாகத்தான் ஜுவல்லரி வைத்திருக்கிறேன். அதற்கு முன்பு நகைப் பட்டறையில்தான் இருப்பேன். அங்கு இருக்கும்போது இந்த மாதிரி வேலைகள் செய்ய நேரம் கிடைத்தது. இப்போது கடை வியாபாரத்தை கவனிக்க வேண்டியிருப்பதால், நேரம் குறைவாக இருக்கிறது. இந்த வேளாங்கண்ணி தேவாலயத்தை உருவாக்க மொத்தம் 3 மாதம் ஆகிவிட்டது. காலை 6 மணியிலிருந்து 9 மணி வரையிலும், இரவு 9 மணியிலிருந்து 11 மணி வரைக்கும் தினமும் வேலை பார்த்துத்தான் இதை உருவாக்கினேன்.

சிதம்பரம் நடராஜர் கோயில்
சிதம்பரம் நடராஜர் கோயில்

தங்கத்தில் நான் செய்த கலைப் பொருட்களைப் பார்த்துவிட்டு, புதுவை முதல்வர் ரங்கசாமி உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் வாழ்த்திப் பாராட்டியிருக்கிறார்கள். எங்கு போனாலும் எனக்கு ஒரு அடையாளம் கிடைத்திருக்கிறது. இதெல்லாம் மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. எதிர்காலத்தில் நேரமும், வாய்ப்பும் கிடைத்தால் அயோத்தி ராமர் கோயில், சபரிமலை ஐயப்பன் கோயில், கம்போடியாவில் இருக்கும் சோழர்கால கோயில் போன்ற வரலாற்றுச் சின்னங்களையும், காந்தி, நேரு, காமராஜர் போன்ற தேசத்தலைவர்களையும் வடிக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.

இதுவரை நான் செய்திருப்பவற்றை பலரும் நல்ல விலைக்கு கேட்கிறார்கள். நானும் கடனில்தான் இருக்கிறேன். விற்றால் கடனையெல்லாம் அடைத்துவிடலாம் தான். ஆனால், விற்பதாயில்லை. ஏனென்றால் அவை வெறும் தங்கம் மட்டுமில்லை, என்னுடைய கனவுகள், லட்சியங்கள். அவற்றை ஒருபோதும் விற்கமாட்டேன்” என்று சொல்லிவிட்டு, கடை வியாபாரத்தைக் கவனிக்க ஆரம்பித்தார் முத்துக்குமரன்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in