வீடும் கட்டிக்கொடுத்த சினிமா!

நன்றிப்பெருக்கில் நாட்டுப்புறக் கலைஞர் தங்கராஜ்
வீட்டைத் திறந்துவைக்கும் ஆட்சியர் விஷ்ணு, இயக்குநர் மாரி செல்வராஜ் ...
வீட்டைத் திறந்துவைக்கும் ஆட்சியர் விஷ்ணு, இயக்குநர் மாரி செல்வராஜ் ...

ஒரு திரைப்படம் என்ன செய்துவிடமுடியும் என்னும் கேள்விக்கு, இதையெல்லாம் கூட செய்யும் என காலரைத் தூக்கிவிடும் அளவுக்கு தங்கராஜின் வாழ்க்கையை மாற்றிப் போட்டிருக்கிறது 'பரியேறும் பெருமாள்! '

சாதிய பாகுபாட்டை கலைநுட்பத்தோடு வெளிப்படுத்திய மாரிசெல்வராஜின் ‘பரியேறும் பெருமாள்’ கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி பெரும் கவனம் ஈர்த்தது. இதில் நடித்ததால் புகழ்பெற்ற நாட்டுப்புறக் கலைஞர் தங்கராஜுக்கு இப்போது புதுவீடு ஒன்று கைவசமாகி இருப்பதுதான் பரியேறும் பெருமாள் ஏற்படுத்தி இருக்கும் தாக்கம்.

வீட்டின் முகப்பில் தங்கராஜ்...
வீட்டின் முகப்பில் தங்கராஜ்...

'பரியேறும் பெருமாள்' படத்தில் நாயகன் கதிரின் அப்பாவாக நடித்தவர் தங்கராஜ். நெல்லை மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் தேர்ந்த நாட்டுப்புறக் கலைஞர். கோயில் கொடை விழாக்களில் இவர் பெண் வேடம் கட்டி ஆடுவதை மணிக்கணக்கில் மக்கள் ரசித்துப் பார்ப்பார்கள். ’கணியான் கூத்து’ எனப்படும் இந்தக் கிராமியக்கலையில் தங்கராஜுக்கு இருந்த நிபுணத்துவம் தான் அவரை மாரி செல்வராஜின் கவனத்துக்குக் கொண்டு சென்றது.

பரியேறும் பெருமாள் படத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தும் காட்சிக்கான பாத்திர நாயகன் தங்கராஜ் தான். மகன் கதிர் படிக்கும் கல்லூரியில் தனது வேட்டியை மாணவர்கள் அவிழ்த்துவிடும் காட்சியிலும், அவர் உடைந்து ஓடும் தருணத்திலும் உணர்வுக் குவியலாக மாறிப்போயிருப்பார் தங்கராஜ். இந்தப் படம் வந்த பிறகு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் கலைச்சுடர் விருதுக்கு தங்கராஜ் தேர்வுசெய்யப்பட்டார். அதன்பிறகுதான் தங்கராஜின் வாழ்க்கையும் மாறியது.

நாறும்பூ நாதன்
நாறும்பூ நாதன்

அதுபற்றி நம்மிடம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைச்செயலாளர் நாறும்பூ நாதன் விரிவாகவே பேசினார். “கருப்பையா பாரதியின் நினைவாக கலைச்சுடர் விருதுக்கு தங்கராஜை தேர்வு செய்தோம். விருதுடன் அதற்கு பத்தாயிரம் ரூபாய் பரிசுத்தொகையும் உண்டு. இந்தத் தகவலை தங்கராஜிடம் சொல்லும் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டது. தங்கராஜின் அலைபேசி எண்ணும் யாரிடமும் இல்லை. யாரைக் கேட்டாலும், ‘நாம் போன் செய்தாலும் அவர் எடுக்கமாட்டார். அவருக்காக தேவையென்றால் போன் செய்தால்தான் உண்டு’ எனச் சொன்னார்கள்.

‘பகலில் வெள்ளரிக்காய் வியாபாரத்தில் இருக்கும் தங்கராஜ், இரவில் கூத்துக்குப் போவார். கூத்து இல்லாத நாட்களில் அவரை இரவில் வீட்டில் பார்க்கலாம்’ என்றார்கள். அப்படித்தான் ஒரு நாள் இரவு, நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்குப் போனேன். அவரிடம் விருது கொடுக்கவிருக்கும் செய்தியைச் சொல்லிவிட்டு வீட்டைப் பார்த்தேன்.

அது குடிசைவீடு. மின்சார வசதிகூட கிடையாது. ஒரு மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் அவர் மனைவியோடு இருந்து பேசிக்கொண்டிருந்தார். நாற்பது ஆண்டுகளாக கணியான் கூத்து ஆடியும் வீடு கட்டிக்கொள்ளும் வசதிகூட தங்கராஜுக்கு இல்லை. 'பரியேறும் பெருமாள்' படத்தில் நடித்ததால் பிரபலமானாலும் அவர் வசிக்கும் குடிசை வீட்டுக்குள் வெளிச்சம் இல்லை. ‘62 வயது கடந்துவிட்டேன். இனி வாழ்வில் என்னமாற்றம் நடந்துவிடப் போகிறது’ என வெறுப்பிலேயே பேசினார். அதை எல்லாம் கேட்டுவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டேன். இரவு, நாற்பது ஆண்டுகளாக கிராமியக் கலையை மூச்சாகக் கொண்டிருக்கும் தங்கராஜ் வீடில்லாமல் கஷ்டப்படுவது குறித்து நெல்லை ஆட்சியருக்கு வாட்ஸ் அப்பில் செய்தி அனுப்பினேன்” என்று நிறுத்தினார் நாறும்பூ நாதன்.

ஆட்சியர்  விஷ்ணு
ஆட்சியர் விஷ்ணு

நாறும்பூ நாதன் ஆட்சியருக்கு அனுப்பிய அந்தக் குறுஞ்செய்திதான் தங்கராஜின் வாழ்க்கையில் வசந்தத்தை திருப்பியது. இந்தக் குறிஞ்செய்தி குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு வருவாய்த்துறையினருக்கு உத்தரவிட்டார் ஆட்சியர் விஷ்ணு. அதிகாரிகள் நடத்திய விசாரணையில், எம்.காம்., பட்டதாரியான தங்கராஜின் மகள் அரசிளங்குமரி தனியார் பள்ளி ஒன்றில் மாதம் 3 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் பணி செய்வது தெரியவந்திருக்கிறது. ஆட்சியரின் முயற்சியால் அந்தப் பெண்ணுக்கு உடனடியாக விடிவு பிறந்திருக்கிறது.

இதுபற்றி நம்மிடம் பேசிய நாறும்பூ நாதன், “தங்கராஜின் மகளுக்கு பத்தாயிரம் ரூபாய் சம்பளத்தில் தனது அலுவலகத்திலேயே தற்காலிக பணி ஒதுக்கிக் கொடுத்த ஆட்சியர், மடிக்கணினி உள்ளிட்டவை வாங்கிக்கொள்வதற்காக ஆட்சியர் நிதியிலிருந்து 70 ஆயிரம் ரூபாயையும் அந்தப் பெண்ணுக்கு உடனே வழங்கினார்.

அதுமட்டுமின்றி, எங்கள் கோரிக்கையை ஏற்று குடிசை மாற்றுவாரியத்தில் தங்கராஜுக்கு வீடு ஒதுக்கவும் ஆட்சியர் முன்வந்தார். ஆனால், தனது பூர்விக இடத்தில் வீடுகட்டி வசிக்க வேண்டும் என்பது தங்கராஜின் விருப்பமாக இருந்தது. அவரின் இந்த உணர்வை மதித்த ஆட்சியர், பூர்விக இடத்திலேயே அவர் வீடுகட்டிக்கொள்ள வசதியாக மத்திய அரசின் வீடுகட்டும் திட்டத்தின் கீழ் அவருக்கு 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் ஒதுக்கிக் கொடுத்தார். கூடுதலாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க நண்பர்கள் ஒன்றே கால் லட்ச ரூபாய் நிதிகொடுத்தார்கள்.

இந்த நிதிகளைக் கொண்டு தங்கராஜுக்கு அவரது பூர்விக இடத்திலேயே புத்தம் புது வீட்டை சாத்தியமாக்க முடிந்தது. ஒன்றரை சென்ட் இடத்தில் அனைத்து அடிப்படை வசதிகளும் கொண்ட இந்த வீட்டைக் கட்டி முடிக்க 8 லட்ச ரூபாய் செலவானது. அரசின் நிதி போக எஞ்சிய நிதியைத் திரட்டவும் ஆட்சியரே சமூக ஆர்வலர்களிடம் பரிந்துரைத்தார். மயன் ரமேஷ்ராஜா, முத்தமிழ் பள்ளி நடத்தும் பாபு உள்ளிட்ட சேவை மனிதர்கள் பலரும் ஆட்சியர் வழியாக தங்கராஜுக்கு நிதியுதவி செய்தார்கள். அமெரிக்காவில் இருக்கும் எனது நண்பர்கள் ஐந்து பேர் சேர்ந்து 25 ஆயிரம் கொடுத்தனர். அனைவரும் சேர்ந்து தங்கராஜின் வீட்டுக் கனவை பூர்த்தி செய்திருக்கிறோம்” என்றார்.

ஆட்சியர் விஷ்ணுவும் இயக்குநர் மாரி செல்வராஜும் நேரில் வந்து தங்கராஜின் புதிய வீட்டை திறந்துவைத்திருக்கிறார்கள். அந்த மகிழ்ச்சியின் திளைப்பில் இருந்த தங்கராஜிடம் பேசினோம். ’’என்னை சினிமாவில் அறிமுகப்படுத்திய மாரி செல்வராஜ் என் மனைவியின் மருத்துவச் செலவுக்கும் தொடர்ந்து உதவிவருகிறார். என் மகள் திருமணத்துக்கும் உதவுவதாகச் சொல்லியிருக்கிறார். என்னதான் இரவும், பகலும் உழைத்தாலும் வாய்க்கும், வயிற்றுக்குமே வருமானம் சரியாக போய்விட்டது. விருதுகொடுப்பதற்காக என்னைத் தேடிவந்த நாறும்பூ நாதன், எனக்கு வீடே கிடைக்க வைத்துவிட்டார். இந்த வீட்டைக் கட்டிமுடிக்கும்வரை வாடகைக்கு வேறு வீடு எடுத்துக்கொடுத்து, அவரே வாடகையும் கட்டினார். இந்த வயதில் என் வாழ்க்கையில் இப்படியொரு திருப்பம் நிகழும் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை” என்று உணர்ச்சிவசப்பட்டார் தங்கராஜ்.

“முற்போக்கான திரைப்படங்களை எடுங்கள்” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திரைத்துறையினருக்கு வேண்டுகோள் வைத்திருக்கும் இந்த நேரத்தில், முற்போக்கு திரைப்படம் ஒன்று நாட்டுப்புறக் கலைஞர் ஒருவரின் இல்லத்திலும் உள்ளத்திலும் ஒளி ஏற்ற உந்துதலாய் இருந்திருக்கிறது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in