உறங்கும்போது வெளிச்சம்... உடலுக்கு நல்லதா?

உறங்கும்போது வெளிச்சம்... உடலுக்கு நல்லதா?

ஜன்னலை இழுத்து மூடி, விளக்கை அணைத்து, கண்ணை மூடிப் படுத்தால், தூக்கம் தானாக வரும் என்பதே நல்ல தூக்கத்தைப் பெறுவதற்கான வழிமுறையாகக் காலங்காலமாக அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்தப் பொதுவான அறிவுரைக்கு, இன்றைய நவீன அறிவியலின் ஆராய்ச்சி முடிவுகளும் வலுசேர்த்துள்ளன. இன்று நம்மில் பலருக்கும், ஏதோ ஒரு செயற்கையின் வெளிச்சத்தின் ஒளிர்வினூடே தூங்கும் நிலையே இருக்கிறது. அந்த வெளிச்சம் இரவு விளக்கிலிருந்தோ, தொலைக்காட்சிப் பெட்டியிலிருந்தோ, ஸ்மார்ட் போனிலிருந்தோ அல்லது வெளியிலிருந்து வீட்டினுள் கசியும் தெரு விளக்கிலிருந்தோ வெளிப்படலாம்.

மிதமான ஒளியுடன் ஓர் இரவு தூங்கினாலும்கூட, அதனால் நம்முடைய இதயமும், உடலில் நிகழும் வளர்சிதை மாற்ற நிகழ்வும் பாதகமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதை இன்றைய அறிவியல் வலியுறுத்துகிறது. அதாவது, மிதமான வெளிச்சம், மிகச் சிறிதளவு கண்களின் வழியே மூளையை அடைந்தாலும்கூட, அதனால் நம்முடைய உடலுக்கு மிகப் பெரிய அளவில் கேடுகள் ஏற்படக்கூடும்.

வெளிச்சத்தின் உளவியல் பாதிப்புகள்

செயற்கை வெளிச்சத்தின் பாதிப்புகள் குறித்த ஆய்வை, அமெரிக்காவின் வடமேற்கில் ஜீ எனும் அறிவியலாளர் மேற்கொண்டார். அதில் 20 நபர்கள் கொண்ட ஒரு சிறிய குழுவை ஈடுபடுத்தினார். 100 லக்ஸ் ஒளியலகுக்குக் (மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தைவிட) குறைவான செயற்கை வெளிச்சத்தில் அவர்கள் தூங்கும்போது ஏற்படும் பாதிப்புகளைக் கண்டறிவதே அந்த ஆய்வின் நோக்கம். அந்த வெளிச்சத்தை நம்மால் பார்க்க முடியும். ஆனால், அந்த ஒளியில் நம்மால் எதையும் வாசிக்க முடியாது.

ஆய்வில் பங்கேற்றவர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர். முதல் குழுவிலிருந்த அனைவரும் இருள் மட்டும் நிறைந்த அறையில் இரண்டு இரவுகள் தூங்க வைக்கப்பட்டனர். இரண்டாம் குழுவிலிருந்த அனைவரும் மிதமான வெளிச்சம் ஒளிர்ந்த அறையில் இரண்டு இரவுகள் தூங்க வைக்கப்பட்டனர். அந்த மிதமான வெளிச்சம் அவர்களின் தலைக்கு மேல் இருக்குமாறு அமைக்கப்பட்டு இருந்தது.

ஆய்வின் முடிவுகள்

அந்த இரண்டு நாட்களிலும், ஆராய்ச்சியாளர்கள் ஆய்வில் பங்கேற்ற இரண்டு குழுக்களிடமும் பரிசோதனைகளை நடத்தினர். அவர்களின் மூளை அலைகள் பதிவுசெய்யப்பட்டன. இதயத் துடிப்புகள் கணக்கெடுக்கப்பட்டன. சில மணிநேரங்களுக்கு ஒரு முறை அவர்களிடமிருந்து ரத்தமும் பரிசோதனைக்காகப் பெறப்பட்டது. இரண்டு நாள் காலையிலும், அவர்களுக்கு அதிக அளவு சர்க்கரை கொடுக்கப்பட்டது.

இந்த ஆய்வின் முடிவுகளைத் தற்போது அமெரிக்க அறிவியல் அகாடமி வெளியிட்டுள்ளது. அந்த முடிவுகள், ஆய்வில் பங்கேற்றவர்களிடம் ஏற்படும் மாற்றங்கள் அந்த இரண்டு குழுக்களிலும் எந்த அளவுக்கு வேறுபடுகின்றன என்பதைத் தெளிவாக உணர்த்தும்விதமாக இருக்கின்றன.

இரு இரவுகளையும் இருளில் கழித்தவர்களைப் போல் அல்லாமல், மிதமான வெளிச்சத்தில் இரவு முழுவதும் தூங்கியவர்களின் இதயத் துடிப்பு அதிகரித்து இருந்தது. அவர்களின் உடலில் இன்சுலின் எதிர்ப்பும் அதிகரித்து இருந்தது. அதாவது, உடலில் ரத்த சர்க்கரையைச் சாதாரண வரம்பிற்குள் கொண்டுவருவதில் அவர்களுக்கு அதிகச் சிக்கல் இருந்தது.

சீர்குலையும் வளர்சிதை மாற்றம்

இரவு வெளிச்சம் நம்முடைய உடலின் வளர்சிதை மாற்றத்தைச் சீர்குலைக்கும் பல வழிகளைக் கொண்டிருப்பதாக, அந்த ஆய்வின் முடிவுகள் உணர்த்துகின்றன. இரவு வெளிச்சம் தூக்கத்தின் தரத்தைப் பாதிக்கிறது என்பது உண்மை. இருப்பினும், ஆச்சரியப்படும்விதமாக இந்த ஆய்வில் வெளிச்சத்தில் தூங்கியவர்களைக் கண்காணித்தபோது அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த ஆய்வில் பங்கேற்ற அனைவரும் தாங்கள் நன்றாகத் தூங்கியதுபோல் உணர்ந்ததாகத் தெரிவித்தனர்.

மெலடோனின் உற்பத்தி

ஆராய்ச்சியாளர்கள், அந்த ஆய்வில் பங்கேற்றவர்களின் மெலடோனின் அளவையும் பரிசோதித்தனர். இந்த ஹார்மோன் தான் நம் உடலின் சர்க்காடியன் ஒத்திசைவுக்கு உதவும்; ஆழ்ந்த, தரமான தூக்கத்தையும் ஊக்குவிக்கும். பொதுவாக, மெலடோனின் உற்பத்தி பகலில் மட்டுப்படும். புற்றுநோய், நீரிழிவு உட்படப் பல நோய்களுக்கும், மெலடோனின் உற்பத்தி குறைவுக்கும் இடையில் நேரடித் தொடர்பு உண்டு.

இரவில் ஒளிரும் செயற்கை வெளிச்சம் நம் உடலின் மெலடோனின் சுரப்பைக் குறைக்கும் என்று பல ஆய்வுகள் உறுதிசெய்துள்ளன. ஆனால், இந்த ஆய்வில், ஒளியுடன் தூங்கிய நபர்களின் மெலடோனின் அளவு குறைவாக இருந்ததற்கான ஆதாரம் எதுவும் கண்டறியப்படவில்லை. காரணம், இந்த ஆய்வில் பயன்படுத்தப்பட்ட செயற்கை ஒளியின் வெளிச்சம், மெலடோனின் சுரப்பை மட்டுப்படுத்தும் அளவுக்கு வீரியத்துடன் ஒளிரவில்லை.

தன்னியக்க நரம்பு மண்டலத்தின் செயல்பாடு

ஆய்வில் பயன்படுத்தப்பட்ட மிதமான ஒளி, உடலின் தன்னியக்க நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளைப் பாதிக்கும் திறன் கொண்டதாக இருந்தது என்பதை அந்த ஆய்வு உறுதிசெய்தது. நம்முடைய உடலின் ‘எதிர்கொள் அல்லது விலகிச் செல்’ எனும் எதிர்வினையை இந்தத் தன்னியக்க நரம்பு மண்டலமே தூண்டுகிறது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

உடல் தூக்கத்தில் ஆழ்ந்திருக்கும்போது, நம்முடைய இதயத் துடிப்பும், சுவாச அளவும் குறையும். ஆனால், இந்த ஆய்வில் தூங்கும்போது அதிகரித்த இதயத் துடிப்பு, நம்முடைய தன்னியக்க நரம்பு மண்டலத்தை மிகவும் சுறுசுறுப்பான எச்சரிக்கை நிலைக்கு மாற்ற, சிறிய அளவிலான ஒளியே போதுமானதாக இருந்தது. அதாவது, ஆய்வில் பங்கேற்றவர்கள் தூங்கியபோதும், அவர்களின் மூளையும், இதயமும் அந்தச் சிறிய ஒளியை விழிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தன; உணர்ந்துகொண்டிருந்தன.

தூக்கம் மட்டும் போதாது

இந்த ஆய்வின் மூலம் உறுதி செய்யப்பட்ட வளர்சிதை மாற்றப் பாதிப்பு ஆச்சரியமானது அல்ல. இதற்கு முன்னரே பல ஆய்வுகள் அதை உறுதிசெய்துள்ளன. நம்முடைய உடலின் ‘மாஸ்டர் கடிகாரம்’ மூளையில் உள்ளது என்றாலும், உடலின் அனைத்து உறுப்புகளும், திசுக்களும் தங்களுக்கு என்று தனியே நேரக்கட்டுப்பாட்டுக்கு எனக் கடிகாரங்களைக் கொண்டுள்ளன. இன்சுலினைச் சுரக்கும் கணையத்தில் உள்ள செல்கள் இதற்கு உதாரணம். தூக்கம்-விழிப்பு சுழற்சியில் ஏற்படும் சீர்குலைவு, இன்சுலின் சரியான முறையில் சுரக்கும் கணையத்தின் திறனைப் பாதிக்கும். அது ரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் உடலின் திறனைச் சீர்குலைக்கும்.

சர்க்காடியன் ஒத்திசைவின் சீர்குலைவு, ரத்தத்தில் சர்க்கரை அளவை நம்முடைய உடல் கட்டுப்படுத்துவதைக் கடினமாக்கும் என்பதை இந்த ஆய்வும் உறுதிசெய்துள்ளது. வெறும் இரண்டு இரவுகளை வெளிச்சத்தில் கழித்தவர்களின் நிலை இது. வாழ்நாள் முழுவதும் இத்தகைய வெளிச்சத்தில் தொடர்ந்து தூங்கும் நம்முடைய நிலையை நினைத்துப் பாருங்கள்.

‘வெளிச்சம் இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன, இரவில் படுத்த உடனே தூங்கிவிடுகிறோம், இது போதாதா? இதனால் என்ன பெரிய பாதிப்பு ஏற்படப்போகிறது?’ என்று நீங்கள் நினைக்கலாம். வெறும் தூக்கம் மட்டும் போதாது, வெளிச்சத்தை முற்றிலும் அணைக்க வேண்டும் என்பதையே இந்த ஆய்வு மீண்டும் வலியுறுத்துகிறது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in