இதுக்கு மேல எனக்கு ஆசையில்லை!

சைக்கிளில் பொம்மை விற்கும் சாமானியர் சிங்காரவேலன்
பொம்மைகள்
பொம்மைகள்படம்: கேயெஸ்வி

என்னதான் நவீனமயம் ஆகிவிட்டாலும் தொழில்நுட்பங்கள் பெருத்துவிட்டாலும் பொம்மை, பலூன்கள் விற்பவர்களைக் கண்டால் குழந்தைகளுக்கு தனி கொண்டாட்டம் தான். ஆனால், இப்போதெல்லாம் பொம்மை வியாபாரிகளை அபூர்வத்திலும் அபூர்வமாகத் தான் காண முடிகிறது. எங்காவது பூங்காக்களிலோ, திருவிழாக்களிலோ தான் அவர்கள் நம் கண்ணில் படுகிறார்கள்.

இதை ஒரு சீசன் வியாபாரமாக செய்பவர்கள் சரி. அதையே, இன்னமும் தொழிலாக செய்தால் என்னதான் கிடைக்கும். கோவை சாயிபாபா காலனி அருகில் உள்ள பூங்கா அருகில், தன் பழைய சைக்கிளில் கடைவிரித்திருந்தார் சிங்காரவேலன்.

திண்டுக்கல் சிங்கமடையைச் சேர்ந்த இவர், 25 வருடங்களுக்கு முன்பு இந்த பொம்மை வியாபாரத்தை சைக்கிளில் கட்டிக் கொண்டவர். சைக்கிள் மொத்தமாய் துருவேறி நிற்கும் நிலையிலும் வண்ண வண்ண பலூன்களுடன், விசில், பொம்மைகள் சகிதம் வலம் வருகிறார். இதில் என்னதான் வருமானம் கிடைக்கிறது? கேட்டோம்.

சைக்கிளில் பொம்மைகளுடன் சிங்காரவேலன்
சைக்கிளில் பொம்மைகளுடன் சிங்காரவேலன்படம்: கேயெஸ்வி

‘‘எனக்கு வயசு 54 ஆகுது. ரெண்டாம் வகுப்புதான் படிச்சேன். சின்ன வயசுல கூலி நாழிக்குப் போவேன். கிடைக்கிற காசை வீட்டுக்கு கொண்டு வந்து கொடுப்பேன். அப்ப எங்க அக்கா வீட்டுக்காரர் - அதாவது என் மச்சான், பொம்மை வியாபாரம் செஞ்சிட்டு இருந்தார். அவர் கூட சில பொம்மை வியாபாரிகள் வருவாங்க. அவங்களுக்கெல்லாம் மச்சான்தான் தொழில் சொல்லிக் கொடுத்து ஏரியா வாரியா வியாபாரத்துக்கு அனுப்புவார்.

நானும் கூலி வேலையில்லாத போது மச்சான் கூட போவேன். அப்படிப் போனதுல தான் இந்த பொம்மைகளையே நாமும் சுமப்போம்ன்னு மச்சான்கிட்ட சொல்லி பொம்மை வியாபாரத்துல இறங்கிட்டேன். 25 வருஷத்துக்கு முன்னாடி ஒரு நாளைக்கு நூறு, நூத்தம்பது கிடைக்கும். அக்காகிட்ட கொண்டு போய் கொடுப்பேன். பக்கத்துல எங்கே திருவிழான்னாலும் போயிருவேன். திருவிழான்னா ஆயிரம், ஆயிரத்தி ஐநூறு ரூபா கூட கிடைக்கும். எல்லா நாளும் திருவிழா இருக்காது. மழைக்காலத்துல வெளியே பூங்கா எல்லாம் போக முடியாது. இரும்புக்கடை வேலைக்குப் போவேன். 300, 400 கூலியா கொடுப்பாங்க. அதுவும் அக்காகிட்ட கொண்டு போய்க் கொடுப்பேன்.

சிங்காரவேலன்
சிங்காரவேலன்படம்: கேயெஸ்வி

இப்படியே வாழ்க்கை பழகிருச்சு. இந்தப் பொழப்பை மட்டும் வச்சு என்ன செய்யறதுன்னு கல்யாணமே பண்ணிக்கலை. இந்த ஒத்தை சைக்கிள்தான் என் சொத்து. புறம்போக்கு குடிசையில தான் குடியிருக்கேன். கோயமுத்தூர்ல பார்த்தா இன்னெய்க்கு 20- 25 பொம்மை வியபாரிகள் இருப்பாங்க. அவங்கள்ல பல பேர் குடும்பமாவும் இருக்காங்க. ஆனா, யாருக்குமே பெருசா வியாபாரம் ஏதுமில்லை!’’ என்று சொல்லிக் கொண்டே போனவரிடம்,

“இதை வைத்து நிறைய சம்பாதிக்கணும்... பெருசா பொம்மைக்கடை போடணும், டூவீலர், மொபட் எல்லாம் வாங்கணும்கிற ஆசை எல்லாம் உங்களுக்கு இல்லையா?” என்று கேட்டேன்.

‘‘அதெல்லாம் எதுக்குங்க. பெருசா சம்பாதிச்சு என்ன ஆகப்போவுது? இதுவே போதும்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, சின்னக் குழந்தை ஒன்று தனது பெற்றோருடன் வந்து பலூன் கேட்க, அதனிடம் ஒரு பலூனை எடுத்து ஊதிக் காட்ட களம் இறங்கி விட்டார் சிங்காரவேலன். நாமும் விடைபெற்றோம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in