பட்டாசுக்கு நடுங்கும் பாவப்பட்ட ஜீவன்கள்! யாராவது இதைப்பற்றி கவலைப்பட்டோமா?

பட்டாசுக்கு நடுங்கும் பாவப்பட்ட ஜீவன்கள்!
யாராவது இதைப்பற்றி கவலைப்பட்டோமா?

தீபாவளி நெருங்கிவிட்டது. ‘டமார்’ என்று ஒரு சிலருக்கு காதுகளையும், இன்னும் சில உயிர்களுக்கு உயிரையும் உலுக்கிப் பார்க்கும் வெடிச்சத்தம், அவ்வப்போது நம்மைச் சுற்றிக் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

அங்கொன்றும், இங்கொன்றுமாக அவ்வப்போது கேட்ட வெடிச்சத்தத்தின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு ஒரு சில பறவைகளும், அணில்களும் கட்டிவைத்திருந்த கூடுகளிலிருந்து அவைகளின் குஞ்சுகள் பட்டாசுகளின் சத்த அதிர்வால் அதன் கூட்டிலிருந்து தெறித்து குற்றுயிராகவோ, செத்துமடிந்தோ தரையில் விழுகின்றன. தாய் பறவைகளும், அதன் உறவுகளும் மரண ஓலமிடுகின்றன. ஆனாலும் வெடிச்சத்தம் தொடர்கிறது; அதிகரிக்கிறது.

கரோனா பெருந்தொற்று கட்டுப்பாடுகள் பெருமளவு தளர்த்தப்பட்டு, புத்துணர்ச்சி ஊட்டும் தீபாவளியைக் கொண்டாடும் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

புத்தாடைகளையும், பட்டாசுகளையும் வாங்க கடைவீதிகளில் மக்கள் வெள்ளமெனப் பெருக்கெடுத்து வரிசைகட்டுகின்றனர். இன்னொருபக்கம், நம் பகுதிகளில், வீடுகளில் வசிக்கும் நாய்கள், பூனைகள் மற்றும் பறவைகள் என சகல ஜீவராசிகளும் பாதுகாப்பான பதுங்கு குழிகளைத் தேடி மூச்சிரைக்க ஓடிக்கொண்டிருக்கின்றன.

புத்தாடைகள், பட்டாசுகள், பலகாரங்கள், சிறப்பு உணவுகள், புதியத் திரைப்படங்கள் என்று நமது பண்டிகைக்கால தயாரிப்புகள் எல்லாம் சரி, ஏன் நமது கொண்டாட்டங்கள் நம்மையே நம்பி இருக்கின்ற மற்ற உயிரினங்களுக்கு திண்டாட்டமாக, மரண அழைப்பாக இருக்க வேண்டும்? இதென்ன வகை மனித பேரினவாதம் என்று தெரியவில்லை. அவ்வளவு ஏன், நம் குடும்பத்து முதியவர்கள், குழந்தைகள், உடல்நலம் குன்றியவர்கள் என்று இருக்கும் பலரையும் அச்சுறுத்தும், இன்னலுக்கு உள்ளாக்கும் இந்த வெடிகளின் ஆதிக்கத்தை குறைப்பதில் நமக்கென்ன சிக்கல்?

பொதுவாக எமது ‘நன்றி மறவேல்’, அலுவலகத்துக்குள்ளும் வாசலிலும் தினந்தோறும் உணவருந்த வரும் சமூக நாய்களின் எண்ணிக்கை சராசரியாக ஒரு 60-லிருந்து 70 வரை இருக்கும். ஆனால், தீபாவளி நெருங்க நெருங்க... உணவருந்த வரும் இவர்களது எண்ணிக்கை பெருமளவில் குறைகிறது. அவை உணவருந்தும் நேரமும் மாறுபடுகிறது. அருகில் வெடிச்சத்தம் இல்லாத நேரமாக பார்த்து, அவை தங்களது பாதுகாப்பான மறைவிடத்திலிருந்து மெல்ல தலைநீட்டுகின்றன. இவ்வுயிர்கள் விரும்பி உண்ணும் அசைவ உணவுவகைகள் தீபாவளியன்று போதும் போதுமெனக் கிடைக்கும். ஆனால், அதைச் சாப்பிடவைக்க இவர்களை நாம் வீதி வீதியாகத் தேடினாலும் நம் எண்ணம் ஈடேறாது.

ஒவ்வொரு விடியலிலும் நாமிருக்கிற குடித்தனப் பகுதிகளிலே எஞ்சியிருக்கிற மரங்களிலிருந்து நம்மையெல்லாம் பாடி எழுப்பும் குயில்களும், கரைந்தழைக்கும் காக்கைகளும், மழலை மொழி பேசும் கிளிகளும், துள்ளல் ஒலியெழுப்பும் அணில்களும் தீபாவளி நேரங்களில், பட்டாசு காலங்களில் தற்காலிகமாக துடிதுடித்து எங்கோ ஓடி, ஒளிந்து மறைந்துவிடுகின்றன.

வெடிகள் எழுப்பும் அதிர்வலையில் மரக்கிளைகளில், வீடுகளுக்கிடையேயான சந்து, பொந்துகளில் பறவைகளும், அணில்களும் கட்டிவைத்திருக்கும் கூண்டுகளிலிருந்து அதன் குஞ்சுகள் கீழேவிழுந்து மரணித்துப்போவதும், ஊனமாவதும் தனியான ஒரு தொடர்கதை.

இத்தகைய கொண்டாட்ட சூழ்நிலையில், சரவெடி, பேரியம் உப்பு மற்றும் இதர ரசாயனம் கலந்த பட்டாசுகளுக்குத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுருக்கிறது. ஏற்கெனவே இருந்த பட்டாசுகளுக்கான மொத்தத் தடை என்கிற நிலையைத் தளர்த்தி, குறிப்பிட்ட ஒரு சில ரகங்களுக்கு மட்டும் தடை என்பது பல்லுயிருக்கும், இயற்கைக்கும், மானுட இனத்துக்கும் உகந்த செய்தியல்ல. இந்த வெடி விஷ, மாசு, சத்தங்களின் சிக்கலும் தீமையும் நமது நாட்டில் ஏதோ தீபாவளி காலங்களில் மட்டும் அரங்கேறும் கொடுமைகள் என்று நாம் சுருக்கிவிட முடியாது.

எந்தவொரு சுக, துக்க நிகழ்வுகளின் போதும், ஏன் அரசியல் கட்சியினரின் பதவியேற்பு, பிறந்தநாள் கொண்டாட்டங்கள், அஞ்சலிகள், ஜெயந்திகள் எதற்கெடுத்தாலும் வெடி போடுகிறார்கள். தேர்தலின்போது வேட்புமனு தாக்கலில் ஆரம்பித்து சுய வெற்றிக்கும், எதிரியின் தோல்விக்கும்... என்று அனைத்துக்கும் நமது காதுகளை பிடுங்கியெடுக்கும் இசை என்கிற பெயரிலான ஆக்ரோஷ இரைச்சலோடு, இந்தப் பட்டாசு கலாச்சாரம் தலைவிரித்து ஆடுகிறது. இதில் எந்த அரசியல் கட்சியும், அரசியல் தலைவர்களும் விதிவிலக்கல்ல. ஏன், பொறுப்பான பல அரசு அதிகாரிகளுமே இதே பாணியில்தான் செயல்படுகின்றனர்.

மனிதர்களை விட நாய்களுக்கும், பூனைகளுக்கும் 4 மடங்கு கேட்கும் செவித்திறன் உள்ளதாக கூறப்படுகிறது. அதனால்தான், மனிதர்களுக்கு அறவே கேட்காத நுட்பமான சத்தங்களைக்கூட இவ்வுயிர்கள் கேட்டுணர்ந்து, அதன்படி தங்களது நடவடிக்கைகளை மாற்றி அமைத்திட முடிகிறது. மனிதர்களுக்கு சாதரணமாக தோன்றும் வெடிச்சத்தம், இந்த விலங்குகளுக்கு காதுகளைப் பிளக்கும் பெருவொலியாகி விடுகிறது.

நம்மில் பலருக்கு இதுவரை தெரியாத பேருண்மை என்னவென்றால் நம்மோடு நம் வீடுகளிலும், வீதிகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் வசிக்கும் எத்தனையோ கால்நடைகள், பறவைகள், நாய்கள், பூனைகள் ஒவ்வொரு தீபாவளிக்கும் தங்களது காது ஜவ்வுகள் கிழிந்து செவுடுகளாகியும், இதய அதிர்வுகளைச் சந்தித்து உயிரிழந்தும் போகின்றன.

மனிதர்களுக்கிடையிலான உரையாடல் என்பது ஒரு 60 டெசிபல் ஒலியளவில் நடந்தேறுகிறது. பொதுவாக இந்த டெசிபெல் அளவு 85 என்ற அளவில் அதிகரித்தாலே அது காதுகளில் உள்ள திசுக்களை, ஒலிவாங்கியை சிதைத்து ஒருவரை செவிடாக்கிவிடும். பட்டாசுகள் எழுப்பும் சத்தத்தின் அளவு சராசரியாக 150 டெசிபலுக்கும் மேலாகவே இருக்கிறது. அப்படியென்றால், 80 டெசிபலுக்கு மேலே சத்தம் அதிகரிக்கும்போது உடனடியாக கால்நடைகள், விலங்குகள், பறவைகள் மற்றும் பலவீனமான, நோய்வாய்ப்பட்ட மக்களுக்கு இதயத்துடிப்பு அதிகரித்து, அட்ரினலின் சுருப்பிகள் சீற்றமடைந்து, ரத்த அழுத்தமும்... ஓட்டமும் சீர்கெட்டு, இறுதியாக....செவியின் ஒட்டுமொத்த செயல்பாட்டையும் காலிசெய்துவிடுகிறது. ஒருசில உயிர்களுக்கு பார்வையையும், உயிரையும் கூட பறித்துவிடுகிறது.

கொட்டு, மேளம், பறை மற்றும் செண்டை மேள இசை ஒலிகளோடு பட்டாசு சத்தங்களும் சேர்ந்து மிரட்டும்போது பயந்து, நடுங்கி, ஊளையிட்டுக் கொண்டே மிரட்சியில் ஓடும் சமூக நாய்கள் பல விபத்துக்குள்ளாகி, விபத்துகளை உண்டாக்கி அவையும் பாதிக்கப்பட்டு மக்களையும் காயப்படுத்துகின்றன. இதுபோன்ற விபத்துகளில், பல நேரங்களில் சமூக நாய்கள் செத்தே போனாலும் நாம் அதற்காக கவலைப்படுவதில்லை.

பட்டாசு கொளுத்துவதால் உருவாகும் ஒலி மற்றும் காற்று மாசு எத்தனையோ பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் சுவாசக் கோளாறுகளையும், தற்காலிக அல்லது நிரந்தர பார்வையிழப்பையும் ஏற்படுத்துகிறது என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

பட்டாசுகளை கொளுத்துவதால் வெளிப்படும் சல்பர் டை ஆக்சைட், நைட்ரஜன் மற்றும் பொட்டாசியம் போன்ற வாயுக்கள் விஷமாக வெளிப்பட்டு, அவைகள் மனிதர்களுக்கு விளைவிக்கும் தீங்குகளைவிட பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் பெருத்தீங்கை விளைவிக்கின்றன.

துக்க வீடுகளின் இறுதி ஊர்வலங்களின் போதும், தீபாவளிகளின் போதும் போதை தலைக்கேறிய மனிதர்கள் இஷ்டத்துக்கு ஆட்டம் போடுகிறாகள். இளைஞர்கள் பிளிரும் இசைகேற்றவாறு ஆடும் ஆக்ரோஷத்தோடு வெடிகளை கையில் பிடித்து... பற்றவைத்து வானத்தில் உயரத்தில் தூக்கிப்போடுகிறார்கள். ஆடு, மாடு, நாய், கழுதை, குதிரை என்று சிக்குகின்ற அப்பாவி விலங்குகளின் மேல் பட்டாசுகளை வீசி எறிந்தும், சமயங்களில் அதன் வால்களில் பட்டாசுகளை கட்டி கொளுத்தியும் நடத்தும் கொடிய விளையாட்டுகளுக்கு மானுடம் இன்னும் பெரிய விலைகள் கொடுக்க காத்திருக்கிறது.

சத்தமேயில்லாத ஒளி நிறைந்த பண்டிகையாக தீபாவளியைக் கொண்டாடுவது குற்றமாகிவிடாது என்பதை நாம் அறிந்திடுவோம். இந்த வெடிச்சத்தமும், பட்டாசுகளும் விலங்குகள், பறைவகளுக்கு மட்டும் தீங்கு செய்யவில்லை நமக்கும்தான். நமது இயற்கை மற்றும் சுற்றுப்புறச் சூழலை உள்ளடக்கிய மானுட சமூகத்துக்கும், இந்த பூமியின் எதிர்காலத்துக்கும் சேர்த்து ‘வெடி’ வைத்துக்கொண்டிருக்கிறது இந்தப் பட்டாசுகள். இதை நாம் இனியும் உணரவில்லை என்றால் விலங்குகள், பறவைகள், இயற்கையோடு சேர்ந்து நாமும் கதறும் நாள் தூரத்தில் இல்லை.

கட்டுரையாளர்: ஊடவியலாளர் மற்றும் சமூகநீதி செயற்பாட்டாளர்

Related Stories

No stories found.