இழுவையில் நதிநீர் இணைப்புத் திட்டங்கள்!

இப்போதாவது விடிவு பிறக்குமா?
 மாயனூர் கதவணை
மாயனூர் கதவணை

திநீர் இணைப்பு அப்டேட் என்ன? தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் தினம்தினம் கேட்க வேண்டிய கேள்வி இது. காரணம், தமிழ்நாட்டில் இருபெரும் நதிநீர் இணைப்புத் திட்டங்கள் ஆமை வேகத்தில் நடந்துகொண்டிருக்கின்றன. ஒன்று, காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டம். மற்றொன்று, தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்புத்திட்டம். முதல் திட்டம் மிகப்பிரம்மாண்டமானது, இரண்டாம் திட்டம் சிறிதென்றாலும் அதிகம் பலனளிக்கக் கூடியது.

காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டம்

காவிரியிலும் தாமிரபரணியிலும் 2 அல்லது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அளவுக்கதிகமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சுமார் 250 டிஎம்சி தண்ணீர் அப்படியே கடலில் கலக்கிறது. மேட்டூர் அணையின் மொத்த கொள்ளளவே 93.47 டிஎம்சி தான். வைகையின் பேரணை 6.91 (டிஎம்சி), தாமிரபரணியின் பாபநாசம் (5.5 டிஎம்சி), மணிமுத்தாறு அணை (5.5 டிஎம்சி) ஆகியவற்றையும் சேர்த்தால்கூட மொத்த கொள்ளளவே 111.38 டிஎம்சி தான். ஆக, தமிழ்நாட்டின் பிரதான அணைகளின் மொத்த கொள்ளளவைவிட இரு மடங்குத் தண்ணீர் வீணாக கடலுக்குப் போய்க்கொண்டிருக்கிறது. இந்த ஆண்டைப் போல மழை கூடுதலாகப் பெய்தால், வீணாகும் தண்ணீரின் அளவு மேலும் அதிகரிக்கும்.

காவிரி வெள்ளம் கடலுக்குள் பாய, அருகிலுள்ள புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்கள் காய்ந்து கிடக்கின்றன. இந்த நிலையை மாற்றுவதற்காக கொண்டுவரப்பட்டதே காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டம். மொத்தம் 262 கிலோ மீட்டர் தூரத்துக்கு இணைப்பு கால்வாய் வெட்டினால், இத்திட்டத்தின் மூலம் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களில் நீர்ப்பற்றாக்குறை நீங்குவதுடன், ஒரு லட்சம் ஏக்கர் நிலத்துக்கு தண்ணீரை நிலைப்படுத்தவும் முடியும் என்கிறார்கள் பொறியாளர்கள். எல்லாவற்றுக்கும் மேலாக நிலத்தடி நீர்மட்டமும் உறுதிசெய்யப்படும்.

இன்றைய நிலை...

திட்டத்தை உருவாக்கிய திமுக ஆட்சிக்காலத்திலேயே கரூர் மாவட்டம் மாயனூரில் இதற்கென கதவணை கட்டப்பட்டுவிட்டது என்றாலும், எடப்பாடி பழனிசாமி காலத்தில்தான் இணைப்புக் கால்வாய் வெட்டுவதற்கென சுமார் ரூ.700 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. புதுக்கோட்டை, திருச்சி, கரூர் ஆகிய 3 மாவட்டங்களில் கால்வாய் வெட்ட ரூ.331 கோடியில் ஒப்பந்தம் விடப்பட்டாலும்கூட, கரூரிலும், புதுக்கோட்டையிலும் தலா 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு மட்டுமே கால்வாய் வெட்டப்பட்டிருக்கிறது.

இத்திட்டம் குறித்து நம்மிடம் பேசிய, இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஜி.எஸ்.தனபதி, "திமுக ஆட்சியில் கட்டப்பட்ட மாயனூர் கதவணையை, அடுத்துவந்த முதல்வர் ஜெயலலிதா 2014-ம் ஆண்டே திறந்துவைத்துவிட்டார். கதவணையை கட்டித் திறந்து 8 ஆண்டாகப் போகிறது. ஆனால் இன்னும் கால்வாய் வெட்டப்படவில்லை. மொத்தக் கால்வாய் நீளத்தில், வெறும் 2 சதவீத வேலைகூட முடியவில்லை. இப்படியே போனால், இந்தத் திட்டம் முழுமையடைந்து பயன்பாட்டுக்கு வருவதற்கு இன்னும் 50 ஆண்டுகள் ஆகும்.

ஏற்கெனவே திமுக ஆட்சியில் கட்டப்பட்ட மாயனூர் கதவணையை புனரமைப்பதற்காக என்று சொல்லி, எடப்பாடி ஆட்சிக்காலத்தில் ரூ.185.11 கோடி ஒதுக்கப்பட்டது. திட்டம் தாமதமாக தாமதமாக மதிப்பீடும், இதுபோன்ற பராமரிப்புச் செலவுகளும் எகிறிவிடும். எனவே, திமுக அரசு உடனடியாக சில ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கி, ஒரே நேரத்தில் பணிகளைச் செய்ய வேண்டும்.

ஜி.எஸ்.தனபதி
ஜி.எஸ்.தனபதி

இங்கே காவிரியையும், புதுக்கோட்டை வெள்ளாற்றையும் இணைக்கிற வேலை நடக்கிறபோதே, தெற்கே வைகை ஆற்றையும், குண்டாற்றையும் இணைக்கிற வேலையையும் தொடங்கிவிட வேண்டும். திறந்த கால்வாய் வெட்டும்போது, குறுக்கிடும் சாலைகள், ரயில்வே தண்டவாளங்கள் எல்லாவற்றிலும் பாலம் அமைக்க வேண்டியதிருக்கும் என்பதால், அந்த இடங்களில் மட்டுமாவது ராட்சத குழாய்கள் வழியாகத் தண்ணீரைக் கொண்டுசெல்ல முடியுமா என்றும் பரிசீலிக்க வேண்டும். நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க, ஒவ்வொரு பகுதியிலும் பொதுமக்கள், விவசாயிகள் கருத்தைக்கேட்டு திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்" என்றார்.

கல்லிடைக்குறிச்சி அருகே கட்டப்பட்டுள்ள வெள்ளநீர்க் கால்வாய் மதகு.
கல்லிடைக்குறிச்சி அருகே கட்டப்பட்டுள்ள வெள்ளநீர்க் கால்வாய் மதகு.

தாமிரபரணி - நம்பியாறு இணைப்புத் திட்டம்

தமிழகத்திலேயே உற்பத்தியாகி தமிழகத்திலேயே கடல் சேரும் ஒரே ஜீவநதி தாமிரபரணி. ஆனால், எல்லோரும் நினைப்பதுபோல அது பாய்கிற மாவட்டத்தை எல்லாம் முழுமையாக செழிக்கச் செய்யவில்லை. நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்திலேயே பெரும்பகுதி மண்ணை அது நனைப்பதேயில்லை. குறிப்பாக, நாங்குநேரி வட்டாரம் பாலைவனமாக, தேரி நிலமாகக் கிடக்கிறது. முழுக்க முழுக்க மக்கள் நிலத்தடி நீரையே பயன்படுத்துவதால், அதுவும் வறண்டு, வெற்றிடத்தை நிரப்ப கடல்நீர் உட்புகுந்து கிணற்றுத் தண்ணீராக மாறிய கொடுமையும் இங்கே நடந்திருக்கிறது.

பொதுப்பணித் துறை பொறியாளர் ஸ்டீபன் என்பவரால் வடிவமைக்கப்பட்டு, அக்கால பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகனால் ஏற்கப்பட்ட இந்தத் திட்டம், 2009-ம் ஆண்டில்தான் செயல்வடிவம் பெற்றது. 21.2.2009 அன்று பணிகளைத் தொடங்கிவைத்தார் அன்றைய முதல்வர் மு.கருணாநிதி. தாமிரபரணி ஆற்றின் வழியாக ஆண்டுதோறும் சராசரியாக கடலில் கலக்கும் 14 டிஎம்சி தண்ணீரில் வெறும் 20 சதவீதத்தை (அதாவது 2.76 டிஎம்சி) தண்ணீரை மட்டும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தின் வறண்ட பகுதிகளுக்குத் திருப்புவதே இத்திட்டத்தின் நோக்கம். திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது என்பதால், அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டது. 2012 முதல் 2015 வரையிலான காலகட்டத்தில், ஆண்டுதோறும் சுமார் ரூ.120 கோடி நிதி ஒதுக்கப்படுவதும், பிறகு அது செலவழிக்கப்படாமல் அரசுக்கே திருப்பி அனுப்பப்படுவதுமாகவே ஓடிவிட்டது.

விவசாயிகள் சார்பில் அந்தப் பகுதியின் முன்னாள் எம்எல்ஏவான (இன்றைய சபாநாயகர்) அப்பாவு, தகவல் பெறும் சட்டத்தின்கீழ் தகவல்களைப் பெற்று, அதன் அடிப்படையில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். மக்கள் கருத்துக்கேட்பு கூட்டங்கள் நடத்தி, மத்திய சுற்றுச்சூழல் துறையின் அனுமதி பெறவே தாமதமாகவதாகச் சொன்ன அதிமுக அரசு, பிறகு இத்திட்டத்தைத் துரிதப்படுத்தியது. முதல்கட்டமாக வெள்ளாங்குளி கன்னடியன் கால்வாயில் இருந்து பச்சையாறு வரையிலும், 2-வது கட்டமாக பச்சையாற்றில் இருந்து மூலைக்கரைப்பட்டி வரையிலும், 3-வது கட்டமாக மூலைக்கரைப்பட்டியில் இருந்து காடன்குளம் வரையிலும் கால்வாய் தோண்டப்பட்டது.

நம்பியாறு இணைப்புக் கால்வாய் தோண்டும் பணி.
நம்பியாறு இணைப்புக் கால்வாய் தோண்டும் பணி.

நான்கு வழிச்சாலையில் பாலம்

4-வது கட்டமாக நம்பியாற்றில் இருந்து எம்.எல்.தேரி வரையிலும் கால்வாய் தோண்டுவதற்காக அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரூ.160 கோடி நிதி ஒதுக்கினார். பணிகள் தொடக்க விழாவில் பங்கேற்ற அன்றைய எம்எல்ஏவான இன்பதுரை, இந்தத் திட்டத்துக்கு இதுவரையில் ரூ.631 கோடி செலவிடப்பட்டிருப்பதாகவும், இப்போது மேலும் நிதி ஒதுக்கப்பட்டிருப்பதால் 2021 மார்ச் மாதமே திட்டப்பணிகள் முடிந்துவிடும் என்றும் சொன்னார். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. இந்த ஆண்டு சுமார் 60 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலந்திருக்கிறது.

அதே ராதாபுரம் தொகுதி எம்எல்ஏவாக வென்று சபாநாயகர் ஆன கையோடு, இந்தத் திட்டப்பணிகளை ஆய்வு செய்தார் அப்பாவு எம்எல்ஏ. கூடவே, நெல்லை குமரி நான்கு வழிச்சாலையை கால்வாய்த் தண்ணீர் கடக்க வேண்டும் என்றால், நான்குவழிச் சாலையில் பாலம் அமைக்க வேண்டும் என்பதால் அதற்கான அடிக்கல்லும் நாட்டினார். கூடவே, 2022 மார்ச் மாதத்துக்குள் பணிகள் முடிந்துவிடும் என்றும் சொன்னார். ‘இன்னும் 3 மாதங்களுக்குள் பாலமே கட்ட முடியாது, பிறகெப்படி கால்வாய் கட்ட முடியும்’ என்று கேட்கிறார்கள் விவசாயிகள்.

கால்வாய் தோண்டும் பணியையும் தொடங்கி வைக்கும்  அப்பாவு
கால்வாய் தோண்டும் பணியையும் தொடங்கி வைக்கும் அப்பாவுபடம் : லட்சுமி அருண்

இதுபற்றி சபாநாயகர் அப்பாவுவிடம் கேட்டபோது, "2006 தேர்தலின்போது எனக்காகப் பிரச்சாரம் செய்ய வந்த இன்றைய முதல்வர் தளபதி, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவோம் என்று சொன்னார். அதன்படியே, முதல்வரானதும் என்னையும் அழைத்துக்கொண்டுபோய் முதல்வரிடம் கோரிக்கை வைத்தார். சமீபத்தில் தூத்துக்குடி வெள்ள பாதிப்புகளை பார்வையிட வந்த அவரைச் சந்தித்தேன். பார்த்ததுமே, ‘என்ன... நம்பியாறு இணைப்புத் திட்ட வேலைகள் எப்படி நடக்குது?’ என்றுதான் கேட்டார்.

எனவே, இனிமேல் இந்தத் திட்டம்பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம். நான்கு வழிச்சாலையில் பாலம் கட்டும் வேலைகள் தொடங்கிவிட்டன. கூடவே, சென்னை குமரி ரயில்வே இருப்புப் பாதையிலும் பாலம் கட்ட வேண்டியதிருக்கிறது. நல்லவேளையாக ரயில்வே இருவழிப்பாதைத் திட்டத்தின்கீழ் புதிய பாதை அமைத்தபோதே ஒரு பாலம் கட்டிவிட்டார்கள். இன்னொரு பாலத்துக்கும் நிதி ஒதுக்கிவிட்டார்கள். இப்போது பழைய இருப்புப் பாதையில் பாலம் கட்ட வேண்டும் என்றால், அதில் வருகிற ரயில்களை புதிய பாலத்துக்கு மாற்றிவிடுவதற்காக திருப்பும் வசதியைச் செய்ய வேண்டும் என்றார்கள். அந்தப் பணிகள் முடிந்துவிட்டன.

அப்படி ரயிலை திருப்பலாம் என்று, பெங்களூருவில் உள்ள ரயில்வே சேஃப்டி கமிஷனர் ஒரு அனுமதி கொடுத்தால் மட்டும் போதும். அதற்கான ஏற்பாடுகளை திருவனந்தபுரம் ரயில்வே கோட்ட மேலாளர் மூலம் செய்துவருகிறோம். எப்படியும் ஓரிரு வாரத்துக்குள் அனுமதி கிடைத்துவிடும். கால்வாய் பணியில் 75 சதிவீதம் முடிந்துவிட்டது. இந்த இரு பாலங்களும் விரைவில் முடிந்துவிடும். இந்த ஆண்டு தண்ணீர் வீணானதைப் போல இனிமேல் வீணாகாது. 3,500 கன அடி கொள்ளளவு கொண்ட இந்த கால்வாய் மூலம் தண்ணீரைக் கொண்டுவந்து, நாங்குநேரி, ராதாபுரம், திசையன்விளை, சாத்தான்குளம், உடன்குடி, திருச்செந்தூர் பகுதியில் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறச் செய்துவிடுவோம்" என்றார்.

ஆட்சியாளர்கள் சொல்லிவிட்டுப் போய்விடுவார்கள். விவசாயிகளுடன் சேர்ந்து பொதுமக்களும் இந்தத்திட்டங்களை விடாமல் கண்காணித்தால்தான் பணிகள் நடக்கும். வலிமைக்கு மட்டுமல்ல... நதிநீர் இணைப்புக்கும் அப்டேட் கேட்போம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in