தமிழ் மண்ணின் வீரம் பேசும் தரமான நாட்டு நாய்கள்!

ஆசிரியர் வேலையை உதறிவிட்டு நாய் வளர்க்கும் நாகராஜன்
தமிழ் மண்ணின் வீரம் பேசும் தரமான நாட்டு நாய்கள்!
ராஜபாளையம் நாய்

என்னதான் விதவிதமான வெளிநாட்டு இறக்குமதிகள் வந்தாலும் நமது மண்ணுக்கே உரித்தான ராஜபாளையம், கோம்பை, கன்னி, சிப்பிப்பாறை இன நாய்களுக்கு இருக்கும் மவுசே தனிதான். மன்னர் காலத்தில் இருந்தே மக்களின் வாழ்வியலோடு ஒன்றிவிட்ட இந்த நாய்கள் தமிழகத்தின் தட்பவெப்பத்துக்கும், நமது உணவுப் பழக்கவழக்கத்துக்கும் பழகிப்போனவை. நாட்டு மாடுகள், நாட்டுக் கோழிகள் மீது ஏற்பட்டிருக்கும் ஈர்ப்பைப் போலவே அண்மைக்காலமாக இவ்வகை நாட்டு நாய்களை அதிகளவில் இனவிருத்தி செய்து, அவற்றை அழிவிலிருந்து காக்கும் ஆர்வம் அதிகரித்து வருகிறது.

குமரி மாவட்டம் லீபுரத்தைச் சேர்ந்தவர் ஆசிரியர் எம்.நாகராஜன். நாட்டு நாய் பிரியரான இவர் ஒரு நாளின் பெரும்பகுதியை நாட்டு நாய் வளர்ப்புக்காவே செலவிடுகிறார். குறிப்பாக, புலி, சிறுத்தை போன்ற மிருகங்களையும் எதிர்த்து நிற்கும் கோம்பை ரக நாய்களை பாதுகாப்பதில் அதிக முயற்சி எடுத்து வருகிறார் இவர்.

அதுகுறித்து காமதேனு இணையத்துக்காக நம்மிடம் பேசினார் நாகராஜன். ராணுவம், எல்லைப் பாதுகாப்பு படை, வனத்துறை போன்ற இடங்களில் ஜெர்மன் ஷெப்பர்டு, லேப், டாபர்மேன் போன்ற வெளிநாட்டு நாய் இனங்களை அதிக அளவில் பயன்படுத்தி வந்த போக்கு தற்போது மாறி வருகிறது. பனியானாலும், வெயிலானாலும் கடும் எதிர்ப்பு சக்தியுடன், கட்டளைக்கு கட்டுப்படும் அதீத தைரியம் கொண்ட கோம்பை, ராஜபாளையம், சிப்பிப்பாறை இன நாய்களை, இப்போது ராணுவத்திலும், வனத்துறையிலும் பயிற்சி அளித்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர். இது நல்ல பலனைக் கொடுத்து வருகிறது.

எம்.நாகராஜன்
எம்.நாகராஜன்

மதுரையின் சுற்றுப்புற கிராமங்களில் திருமணம் முடித்து புகுந்த வீட்டுக்குச் செல்லும் போது புதுப் பெண்ணுடன், கன்னி, சிப்பிப்பாறை நாய்களை சீதனமாக கொடுக்கும் வழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது. அந்த நாய்கள் அந்த பெண்ணுக்கு மட்டுமல்ல... அவர் வாழச்செல்லும் குடும்பத்துக்கே பாதுகாவலனாக இருக்கும்.

நீச்சல் பயிற்சி
நீச்சல் பயிற்சி

கோம்பை ரகம் இயல்பாகவே அதீத தைரியம் கொண்ட நாயாகும். தெருக்களில் சுற்றித்திரியும் நாட்டு நாய்களில் சிவப்பு நிறத்திலான கோம்பையின் கலப்பினத்தை நாம் காணமுடியும். கோம்பை ஒரு வனவிலங்குதான். காடுகளில் செந்நாயின் ஒரு இனமாக இருந்தது, பின்னர், மலையோரங்களில் வசிக்கும் மக்களால் பாதுகாப்புக்கு வளர்க்கப்பட்டது.

யானை, புலி, சிங்கம், சிறுத்தை என எந்த வனவிலங்கையும் அச்சப்படாமல் நேருக்குநேர் நின்று எதிர்த்து குரல் எழுப்பும் வல்லமை கொண்டது கோம்பை. எஜமானருக்கு விசுவாசம் காட்டுவதிலும் இதை மிஞ்சமுடியாது. போடி, பொள்ளாச்சி, உதகை, சத்தியமங்கலம் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் வசிப்போர் கோம்பை நாய்களை அதிகமாக வளர்க்கிறார்கள். கர்நாடகா, ஆந்திரா, கேரளாவில் வனத்துறையினரும் தங்கள் பாதுகாப்புக்கு கோம்பை நாய்களையே வளர்க்கின்றனர்.

கோம்பை நாய்
கோம்பை நாய்

உதகை மலைப்பகுதியில் தற்போது புலியால், மக்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் கோம்பைரக நாய்கள் மூலம் மக்கள் வசிப்பிடங்களுக்கு வனவிலங்குகள் வராமல் தடுக்க முடியும். இதைப்போன்றே கம்பீரமாக காட்சியளிக்கும் ராஜபாளையம் இன நாய்களுக்கும் மவுசு அதிகம்.

கோம்பை, ராஜபாளையம் நாய்களை அதிக அளவில் இனவிருத்தி செய்து அந்த நாய் இனங்களைக் காக்கும் வகையில் லீபுரத்தில் தனி தோட்டத்தில் நாய் பண்ணை அமைத்து அவற்றைப் பாதுகாத்து வருகிறேன். இதற்காக, 7 ஆண்டுகளுக்கு முன்பே நான் பார்த்துவந்த பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர் பணியை விட்டுவிட்டேன். எஜமானர்களிடன் உண்மையான பாசம், நன்றி, விசுவாசத்தை இந்த நாட்டுரக நாய்கள் காட்டுகின்றன. குட்டிகளை விற்றுக் கிடைக்கும் வருமானமே பெரிய நாய்களைப் பராமரிக்க போதுமானதாக உள்ளது. கோம்பை, ராஜபாளையம் நாய்க் குட்டிகள் 10 ஆயிரம் முதல் .25 ஆயிரம் ரூபாய் வரை போகும். விலையப் பற்றி கவலைப்படாத மக்கள் அவற்றை ஆர்வத்துடன் வாங்கிச் சென்று வளர்க்கின்றனர். எங்களைப் போன்ற நாய் வளர்ப்பில் நட்டமுள்ளவர்கள் நமது நாட்டு இன நாய்களை இனவிருத்தி செய்து அவற்றை அழிவிலிருந்து காத்து வந்தாலும் மத்திய - மாநில அரசுகள் இந்த விஷயத்தில் உரிய அக்கறை எடுத்துக் கொண்டால் நமது மண்ணின் பெருமை பேசும் இந்த நாய்களை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம்” என்றார் நாகராஜன்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in