நிழற்சாலை

நிழற்சாலை

காகித மேஜைகள்


மேஜைகளைத்

தாண்டாமல்

அடுத்த தலைமுறை

கரையான்களுக்கும்

உணவாகிறது

என்றோ கொடுத்த

புகார் மனு.

- ரகுநாத் வ

பதிலீடு

கூழாங்கற்களைச்

சேகரித்துவிட்டேன்

ஆற்றை மறக்க முடியாமல்

முட்டி மோதும்

தொட்டி மீனுக்கு!

- ஷர்ஜிலா பர்வீன் யாகூப்

உரையாடல்

நீர்க் கம்பிகள் வழியே

பூமியோடு

தொடர்புகொண்டு

வானம் பேசிக்கொள்கிறது

அடைமழை என்கிறீர்கள்

அதை நீங்கள்!


- மகேஷ் சிபி

பசியின் நிறம் சிவப்பு

விட்டபாடில்லை மழை

பெரும்பசியை அடக்கி

பேருந்து நிழற்குடையின்

ஒழுகாத ஓரத்தில்

கைகளை கால்களில் கட்டிக்கொண்டு

வெளியே

எட்டியெட்டிப் பார்க்கும்

ஓவியனின் விழிகளில்

வீதியில் அவன் வரையும்

ஓவியங்களைவிடவும்

அதிக அலைநீளத்தில்

உறைந்திருக்கிறது

ரத்த வண்ணம்!

- காசாவயல் கண்ணன்

பூக்களை நேசிக்கும் மலர்கள்

‘வாஸ்து பூவாம்’ என்றபடி

பரிசளித்தார்

பள்ளி வாயிற்காவலர்.

‘இது பீப்பீ பூ...’ என்றபடி

வாகனத்திலிருந்து நழுவி இறங்கியதும்

ஒன்றை ஏந்திக்கொண்டாள் பாப்புக்குட்டி

அன்றாடம் ஒரு பூ.


வகுப்புவரை எடுத்துச் செல்வாளோ

எங்கு வைப்பாள்

என்ற ஐயங்கள்

அப்பாவுக்கு உண்டு...

புரியுமோ இல்லையோ என்று விட்டுவிடும்

நூறு கேள்விகளின் பட்டியலில்

கிடத்திவிடுவார் அவற்றை.


ஓர் இரவில் தனக்கும் வீட்டுக்குமாகச் சொல்லிக்கொண்டாள்

நாளைக்கி சீக்கிரம் கிளம்பணும்

பீப்பீ பூ எடுக்காம போயிட்டேன்...

பாவம் வெயில்லயே கிடந்துச்சு


அப்பாவின் கேளாக் கேள்விகள்

நாணித் தலைகவிழ்ந்தன

விட்ட பூவும் கிடந்த பூவும் ஒன்றேதானா?

- உமா மோகன்

ஆலமரப் பிள்ளையார் சரிதம்

சொல்வதற்கு ஏதேனும்

ஒரு விஷயம்

இருந்துகொண்டே இருக்கிறது

'ம்' கொட்டி மிக

ஆர்வமாகக் கேட்க வேண்டும்

என்பதில்லை

ஓட்டத்தைத் தடை செய்யாமல்

பொறுமையாய் இருந்தால் போதுமானது

அனுபவம் பகிர உணர்வுகள் கடத்த

அறிவுரையும் குறுக்கீடுமற்ற

எவரேனும் தேவைப்படுகிறார்கள்

அப்படித்தான் அறிமுகமானார்

ஆலமரப் பிள்ளையார்.

- ச.ஆனந்தகுமார்

மந்தையிலிருந்து எதுவும் தப்புவதில்லை

ஒற்றை நெல் மணிக்காய்

சிறகை மறந்தன சோதிடப் பறவைகள்

கரும்பைப் பெற வேண்டிக் காட்டைத் துறந்தன

மாமத யானைகள்

வருடல் தேவையென கூர்ப் பற்கள் ஒழித்தன

வாலாட்டும் ஜீவன்கள்

வைக்கோலுக்கு ஆசைப்பட்டு

நுகத்தடிக்கு வாக்கப்பட்டன கொம்புள்ள மாடுகள்

புழுக்கள் கடிக்கப் போய்

தூண்டிலில் துடிக்கின்றன அவதார மீன்கள்

புத்தனின் சொல்லைத் தனக்காய்ப்

பயன்படுத்திக் கொள்ளும்

பேராசை மனித மந்தையிலிருந்து எதுவும்

தப்புவதில்லை எப்போதும்

- கி.சரஸ்வதி

நிசப்த நிழல்

மிக அருகிலிருந்தும்

ஒரு முறையேனும்

கேட்க முடியவில்லை

நிழல் விழும் சப்தங்களை

சில வேளை

மரங்களில் வசிக்கும்

பறவைகளின் உறக்கம்

கலைந்துவிடக் கூடும்

என்பதனாலோ என்னவோ

ஆதியிலிருந்து

இப்படி நிசப்தமாக

விழுகிறது நிழல்.

- ஜமீல் (இலங்கை)

ஸ்கூல் தேவதை

அவசர அவசரமாய்

வாங்கிவந்த காலணி

பத்தாமல் போனதில்

அழுது அடம்பிடிக்காமல்

‘என் ஃபிரண்டுக்கு கொடுத்துடட்டுமா?’

எனக் கேட்கும் மகளுக்கு இருக்கிறது

தேவதையின் சிறகு!

- மு.முபாரக்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in