
ஒளிந்திருக்கும் கனவு
'நீங்க பாத்து எது கொடுத்தாலும் சரிதான்'
என கண்களிடுங்க
தலைதாழ நிற்கும் வாட்ச்மேனின்
சொல்லில் வலி கடந்ததொரு
நினைவிருக்கிறது
நினைவாயிருந்து கனவாய் அது
மெல்ல மாறிக்கொண்டிருக்கிறது
கனவிலொரு காடிருக்கிறது
காட்டின் பேரில்
வங்கிக் கணக்கிருக்கிறது
கணக்கில் கொஞ்சம் கடனிருக்கிறது
கடனைக் கட்ட உள்ளுக்குள்ளொரு துடிப்பிருக்கிறது
இப்போதைக்கு அது
கட்டிய கைகளுக்குள்
மறைந்திருக்கிறது.
-ந.சிவநேசன்
முடிவிலா விளையாட்டு
மாலை முதல்
அலைகளும் அம்முக்குட்டியும்
ஒருவருக்கொருவர்
விடாமல் துரத்தி
விளையாடிக்கொண்டிருந்தார்கள்...
ஒவ்வொருமுறையும் வென்றுவிட்டதாய்
துள்ளி கைதட்டி சிரித்தபோது
விட்டுக்கொடுத்த கடல்
வேடிக்கை பார்த்தது...
அவள் கிளம்பி
அவ்வளவு நேரம் கடந்த பின்னும்
சலிக்காமல் அலைகள்
அவளை ஏமாற்றத்துடன்
தேடிக்கொண்டே இருக்கின்றன
கட்டிய மணல் வீட்டின் பக்கத்தில்.
- ச.ஆனந்தகுமார்
சகாயம்
கவலை வேண்டாம்
பார்வையாளரே!
ஆற்றலுடன்
கல்லெறியும் அந்த இளைஞனுக்கு
தேவையான
சக்தியைக் கொடுத்திருக்கின்றன
அம்மரம் கையளித்திருந்த
முந்தைய
மாங்காய்கள்.
- சாமி கிரிஷ்
உயிர்
மின்தராசை
உயிரோடே
வைத்திருக்கிறது
துள்ளும் மீனின்
எடை!
- ரகுநாத் வ
பயன்பாடு
விற்கும் வரை பூக்களையும்
விலையில்லா பொழுதுகளில்
பசியையும் சுமக்கிறது
ஈரத்துண்டு.
- ஷர்ஜிலா பர்வீன் யாகூப்
முகம்
சாலையோரக் கிழவிக்கு சங்கடம்
பள்ளிக்கூடச் சிறுவனுக்குப் பதற்றம்
அலுவலகனுக்கு ஆத்திரம்
ஊர் சுற்றிக்கு உல்லாசம்
ஜன்னலோரப் பயணிக்கு சல்லாபம்
தினக்கூலிக்கு வலி
காதலர்களுக்கு கவிதை
கவிஞர்களுக்குக் கடவுள்
கீரைக்காரத் தாத்தாவுக்கு முணுமுணுப்பு
வேண்டுவோருக்கு வேண்டுதல்
வேண்டாதோருக்கு சர்ப்ப தீண்டுதல்
திடும்மென வந்துவிட்ட
காலை நேர மழைக்கு
ஒவ்வொரு துளியிலும் ஒவ்வொரு முகம்
- கவிஜி
சாதகம்
அவனுக்கு ஜாதகத்தில்
சிறைவாசமிருந்தும்
அந்தச் சீட்டை
எடுத்துத் தரவில்லை.
சிறைவாசத்தின்
வலியறிந்த கிளி.
- பாரியன்பன் நாகராஜன்
மனம்
பிரகாசமான நிலவு
நிரம்பி வழியும்
நட்சத்திர நள்ளிரவு
அழகாகவேயிருந்தது...
யாரோ ஒரு குழந்தை பசிக்கு
அழும் வரை!
-மு.முபாரக்