நிழற்சாலை

நிழற்சாலை

தாத்தாவின் கைப்பேசி


பேத்தியின் பிறந்தநாள்

நிகழ்வைக் கைப்பேசியில்

சிலாகிக்கிறார்.


வீடியோ காலில்

தெரியும் குட்டிப்பற்களுக்காக

புன்னகைக்கிறது

பொக்கை வாய்


அவளுக்குப் பதிலனுப்ப

தப்பும் தவறுமாய்

டைப்பாகிறது குறுஞ்செய்தி.


ஊருக்கு வந்த பேத்தியைக்

கையோடு

சேர்த்தணைத்துக் கொள்கிறது

தாத்தாவின்

நடுங்கும் கைப்பேசி!


- ரகுநாத் வ

அர்ப்பணம்

மேகத்திலிருந்து விழுந்தாலும்

சூரியனைத்தான் வரைகிறது

ஒரு சொட்டு மழைத்துளி

- ஷர்ஜிலா பர்வீன் யாகூப்

பழுப்பேறிய காலம்

ஆல்பத்தில் உறைந்திருக்கும்
உறவினர் பலரை
அதன் பிறகாய் நான் பார்க்கவேயில்லை
சிலர் மரணத்திற்கு
போக வாய்க்கவில்லை.

சில நண்பர்கள் இல்லாது ஆகிவிட்டார்கள்
சில நண்பர்கள் இறந்துவிட்டார்கள்.

ஆனாலும் என்னருகில்
இப்போதும் சினேகமாய்

அப்படியே அங்கேயே நிற்கிறார்கள்.

துரோகம் செய்த நண்பனொருவன்
கைகளை என் தோள்மீது போட்டிருந்ததை
இப்போது எவ்வளவு முயன்றும் என்னால்
நீக்கவே இயலவில்லை.
ஆயினும் சிரிக்கிறான்
அப்படியே சிரிக்கிறான்.


காலத்தைப் பதிவுசெய்து

வைத்திருப்பதும்
நிகழ்காலம் போலவேதான் இருக்கிறது
பேரானந்தமாகவும்
பெரும்பாரமாகவும்.

-சுரேஷ்சூர்யா

தொலைவில் உறங்கும் அலைபேசி

அலுவலகத்தில்

மறந்து விட்டுவிட்டு வந்த

அலைபேசியிலிருந்து

அனுமான

அழைப்புகளும்

குறுஞ்செய்திகளும்

இரவு முழுக்க

உறக்கத்தின் மீது

கற்களை வீசின.

கையறு நிலையில்

மனம் பதைக்க

விடியல் தாமதிக்க

இயல்பு குலைந்தது.

மறுதினம் சென்று

அலைபேசியை எடுத்து

உயிர்ப்பித்ததும்

புன்னகைத்தது

இரவு முழுக்க

உறங்கிய நிம்மதி

தொடுதிரையில் ஒளிர!

- வீ.விஷ்ணுகுமார்

முன்னுரிமை

மழையில்

நனைந்து கிடக்கின்றன

கொள்முதல் நிலையங்களில்

நெல்மூட்டைகள்

தார்ப்பாய் மூடி பயணிக்கிறது

டாஸ்மாக் சரக்கு வாகனம்!

-நேசன் மகதி

முற்றுப்பெறாக் கதைகள்


இரவு நேரங்களில்

கதைகள்

சொல்லிக்கொண்டேயிருப்பாள்...

முதியோர் இல்லத்தில்

விட்டுவந்த பிறகு

கதையாகிப்போன பாட்டி!

- மு.முபாரக்

நீர்மம்

ரோஜா இதழிலிருந்து

கீழே விழுந்ததும்

நிறமிழக்கிறது

மழைத்துளி!

- மகேஷ் சிபி

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in