நிழற்சாலை

நிழற்சாலை

பயணிக்கும் பாடல்


குரலை உயர்த்தி உயர்த்திப் பாடி

யாசகம் பெற்று

இறங்கினான்

இரு கண்களும்

தெரியாத அவன்


பாடலைச்

சுமந்துகொண்டு

ஊர் ஊராய்

செல்கிறது ரயில்.


- காமராஜ்

அஞ்சலி

இலையொன்று உதிர

உடனே

மலரொன்றை உதிர்த்து

மரியாதை செலுத்துகிறது

மரம்!


- சாமி கிரிஷ்

தந்தை மெழுகுகள்


தித்திக்கும்

இனிப்புகளை

ஈட்டவியலாமல்

தவிக்கும் தந்தை

மெழுகுகளின்

மன பலூன்களே

உடைபடும் கண்ணீர் பரிசாகின்றன

செல்ல மகளின்

அகவை நாளில்!


- ரகுநாத் வ

மழலை மலர்


கத்திப்பாராவைக் கடந்து

பாரிமுனை நோக்கிச்செல்லும்

சாலை நடுவில்

மெட்ரோ ரயில் பில்லர் 87-ல்

தூளியில் கவிழ்ந்து படுத்து

கொள்ளைச் சிரிப்பில்

முகத்தைக் காட்டியது

குழந்தை.

திடுமென

தடதடக்கும் ரயில் சத்தத்தில்

தூளி அசைவதைப் போலவே

ஒரு பிரம்மை

இனி உரசாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்

என் ஆட்டோவை

வேறு வாகனத்தின் மீது.

- அரவிந்தன்

காதல் மதில்


குட்டிச்சுவர் என

கிடக்கும் என் காதலில்

சற்று நேரம்

அமர்ந்துவிட்டுப் போ

பெயர்ந்து விழும்

சுண்ணாம்பு கற்களில்

முத்துகள் கிடைக்கலாம்

கத்தும் பல்லியின் குரலில்

கலர் காலம் மினுங்கலாம்.


- கவிஜி

இழப்பின் கனம்

முடிவிலித் தேடலென்பதை

ஊர்ஜிதப்படுத்துகிறது அறிவு

மறுதலிக்கும் மனசு

உன்னைத் தேடுதலின் பொருட்டு

முட்டாளாக்கிக் கொள்கிறது

தன்னை

இன்னும் அகலாத

உன் இருப்பின் வாசனைதான்

இந்தப் பொழுதின் மீது

ஏற்றி வைக்கிறது

ஒரு கனத்தை!

- மகேஷ் சிபி

தேடல்

குழந்தையின்

சாயலிருக்கிறது

வயதான பிறகு மகளைத்

தேடும்

அம்மாவுக்கு!

- மு.முபாரக்

பன்மை பௌர்ணமி

தெருவிளக்குகளின்

அருகில் வாழும்

மரங்களுக்கு

அமாவாசையிலும்

நிலாக்காலம்!

- நேசன் மகதி

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in