நிழற்சாலை

நிழற்சாலை

விழிப்புநிலை

ஏடிஎம்மின்

அறை முழுக்க

சோர்விலிருக்க

விழித்துக்கிடக்கும்

காவலாளிக்கு

இரவுமுழுக்க

உறங்கும் காகிதங்களின்

மதிப்பு சுழியமாகிறது!

- ரகுநாத் வ

கனவு

கண்கள் விரிந்து கைகள் ஆட்டி

கொஞ்சமாய் யோசித்து தினமும்

வந்த கனவை ஒரு

கதை போல் விவரிப்பாள்

அம்முக்குட்டி.

மெதுவாய்த்தான் கவனித்தேன்...

அவள் கனவுகளில்

ஒரு நாள்கூட

வந்ததேயில்லை

பள்ளி!

- ச.ஆனந்தகுமார்

இனிப்பாறுதல்

ஆழ்ந்த சிந்தனையொன்றுக்குத்

தெளிவூட்டியிருந்திருக்கலாம்...

அழகிய கவிதையொன்றுக்கு

பிள்ளையார் சுழியிட்டிருந்திருக்கலாம்...

தீராத வன்மம் ஒன்றுக்கு

மன்னிப்பைத் தர

பரிந்துரைத்திருக்கலாம்...

அவிழாத முடிச்சொன்றுக்கு

விடையொன்றை கண்டுபிடித்துத்

தந்திருக்கலாம்...

சோகம் சூழ்ந்த மனதொன்றுக்கு

மெல்லிய சூடு நனைத்து

ஒத்தடமுமளித்திருந்திருக்கலாம்...

அதை அவ்வளவு எளிதாக

கூறிவிடாதீர்கள் வெறும்

தேநீரென்று!


- கெளந்தி மு

வெவ்வேறு நிற பலூன்கள்

வசதிபடைத்த குழந்தைகள்

வசிக்கும் வீடுகளில்

மகிழ்ச்சி ஆரவாரமும்

குழந்தைகள் வசிக்கும்

குடிசைகளில்

அழுகைச் சத்தமும்

தவறாமல் கேட்கின்றன

பலூன் விற்பவன்

கடந்து செல்லும் கணங்களில்!


- மு.முபாரக்

துளிர்க்கும் பாவனை


பட்ட மரத்துக்குப்

பலவித வண்ணங்களில்

படபடக்கும் இலைகளைப்

பரிசளிக்கிறது

கிளையில் அமரும்

வண்ணத்துப்பூச்சி!

- கி.சரஸ்வதி

குறையும் விசாலம்

வாடகைவாசிக்காக

காத்திருக்கும்

காலி வீடு

பரந்து பெரிதாக

தெரிகிறது

அந்த வீட்டின்

உரிமையாளர்

மனதைப் போல...

குடியேறிய பிறகே

ஏதேதோ நிரம்பி

குறுக்குகிறது

இரண்டையும்!

- வீ.விஷ்ணுகுமார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in