நிழற்சாலை

நிழற்சாலை
Updated on
1 min read

அஞ்சலிக் குறிப்புகள்

அந்த வீட்டில்
தேநீர் சுவை
இன்று
வேறு மாதிரியாய் இருக்கிறது

சாவின் மலர்கள்
நெடி கமழ்வதைப்போல்

இருந்த வாழ்வை
இருக்கும் வாழ்வுகள் பேசிப் பேசித் தீர்க்கின்றன
சொற்கள்தான்
சுவடுகளற்று சற்றைக்கெல்லாம்
காணாமல் போகின்றன

ஒரு துயர் தருணத்தில்
மனமலைகிறது
காலிக்கோப்பையினுள்
காற்றலைவதைப்போல

மரணம் துடைத்தெறிந்த

வெண்மைக் காகிதம்
மெல்ல மெல்ல
எழுதிக்கொள்கிறது
தன் மீதாக... புதுகுறிப்புகளை


எல்லா அறிவிப்புப் பதாகைகளிலும்
புன்னகைத்தபடிதான் இருக்கிறது
அந்த முன்னாள் மனிதரின் முகம்.

- சுரேஷ் சூர்யா

இரண்டெழுத்து

ஒட்டிய வயிறுகளில் அமர்ந்து

அமிலச் சுரப்பைத் தூண்டிவிடுகிறது

பிஞ்சுக் கரங்களைக் கொடுந் துன்பத்திடம்

கையேந்த வைக்கிறது

தள்ளாமையிலும் வண்டியிழுக்கும்

கடமையைப் பரிசளிக்கிறது

குடும்பம் நீங்கிக் கொடும்பாலையில்

பணியேற்க அனுப்புகிறது

துளிக் கயிற்றில் உயிர் முடிச்சை

அவிழச் செய்கிறது

பிறப்பு இறப்பெனும் முனைகளுடைய

பெரும்பாலத்தினுடான

பயணத்தில் சுமக்க முடியாத

கனத்தை அளித்துவிடுகிறது

இந்த இரண்டெழுத்துச் சொல்லின்

பொருளறிய

மெளனத்தின் இரைச்சல்

கேட்கப் பழக வேண்டும் நீங்கள்...

- கி. சரஸ்வதி

பார்வை

வாழ்ந்து முதிர்ந்த மீனுக்கு

கடல்

எத்தனை பெரிய மீன்தொட்டி

புதிதாய் பிறந்த மீன்குஞ்சுக்கு

மீன்தொட்டி

எத்தனை பெரிய கடல்.

-ந.சிவநேசன்

மானுடமும் பூக்கும்


மாவாட்டி கை வலிக்கிறது

இட்லி சுட்டு முகம் வியர்க்கிறது

கசகசப்பினிடையே

காசு வாங்கி

கல்லாவுக்குள் போடுவது சரிதான்

நிமிர்ந்து பார்

டிப் டாப் மனிதனில் இருந்து

காக்கிச் சட்டை காவலாளி வரை

அவதி அவதியாய்

கையிலேந்திய வயிற்றை

நிறைப்பதை

கை வலித்தாலும் பரவாயில்லை

என வியர்த்த முகத்தில்

மானுடமும் பூக்கும்

எடு அடுத்த அடைசலை!

- கவிஜி

சுமை

அந்தப் பழக்கூடைக் கிழவியிடம்

விடாப்பிடியாய்

பேரம்பேசி

பத்து ரூபாய் குறைத்து

வாங்கிச்செல்லும் நான்

இப்போதெல்லாம்

சொல்லும் விலைக்கு

சத்தமில்லாமல்

வாங்கிச்செல்கிறேன்

சர்க்கரைக்கான மருந்தை!

-கோவை.நா.கி.பிரசாத்

அதிர்ஷ்டம்

இரண்டடி சதுரத்தொட்டிக்குள்

முடிந்துபோகிறது...

மனிதர்கள் அதிர்ஷ்டமாய்

நினைக்கும்

வாஸ்து மீனின் வாழ்க்கை!


- மு.முபாரக்

இடமற்ற மனங்கள்


அனிச்சையாய் சிலர் கண் மூடிக்கொண்டார்கள்.

இன்னும் சிலர் அவசரமாய்

காதுகளுக்கு இன்னிசை மாட்டினார்கள்

நெடுந்தூரப் பேருந்து பயணம்...

குழந்தை ஏந்தி நிற்பவளைத் தவிர்க்க

நிமிரவே இல்லை

குனிந்த தலைகள்

கடைசியாய் இடம் கொடுத்த ஒருவர்

சில மணி நேரம் கழித்து

இறங்குகையில் கேட்ட கால்களின் மரச்சத்தம்

என்னைத் தூங்க விடவில்லை

வெகுநாட்கள்.


- ச.ஆனந்தகுமார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in