
மெளனக் கவிதை
மழையில் நனைவது
பிடிக்கும்
வானவில்லைப் பிடிக்கும்
சுற்றி வரும்
வண்ணத்துப்பூச்சியைப் பிடிக்கும்
அதிகாலையில் புல்லின் மீது
அமர்ந்திருக்கும்
பனித்துளியைப் பிடிக்குமென
எழுதிய கவிதையை
கைப்பைக்குள் ஒளித்து வைத்திருக்கிறாள்...
கணவனுக்குப் பிடிக்காதென!
-மு.முபாரக்
நீரலை நினைவுகள்
முன்பு இதே கரையில்
அமர்ந்துதான்
உனக்கான காத்திருத்தலில்
கல்லெறிந்து
குளத்தின் நிசப்தம்
கலைத்துக்கொண்டிருந்தேன்
இப்போதும்
அதையேதான் செய்கிறேன்
ஆனால் இம்முறை
கற்களுக்குப் பதில் என் கையில்
உன் நினைவுகள்.
- மகேஷ் சிபி
தீர்ப்புகள்
ஒரேயொரு
‘ஸாரி’யில்
பரஸ்பரம்
புன்னகைக்கக்
கற்றிருக்கும்
குழந்தைகள்தான்
அடமாய்த்
தெரிகின்றனர்
மாதக்கணக்கில்
பேசிக்கொள்ளாத
அப்பா அம்மாவுக்கு!
- ரகுநாத் வ
பியானோ பறவை
மலை உச்சியிலிருந்து
விழுந்தவன்
சிறகுகளோடு
தரை இறங்கியது போல்
திசை மாறி
அறைக்குள் நுழைந்து
பியானோவின் கட்டைகள் மீது
தடுமாறி நடக்கத் தொடங்கிய பறவை
தன்னையே அறியாமல்
பரிசளிக்கிறது
ஒரு
நல்லிசையை!
- ப்ரணா
அமைதி
தவத்திலிருக்கும்
புத்தனுக்குக்
காது முளைத்த பின்
உளியின் ஓசையைக்
குறைக்கிறான்
சிற்பி.
-ந.சிவநேசன்
புத்தாக்கம்
பறந்ததிலும்
கூடுகள் தந்த அலுப்பிலுமாக
சற்று நேரம்
காலாற நடக்கின்றன பறவைகள்
குழந்தையின் துரத்துதலில்
தத்தித் தத்தி ஓடுகின்றன
குழந்தையாகிய பறவைகள்
கொஞ்ச நேரம்
பறவையாகி
பறந்து பார்க்கிறது குழந்தை.
- சாமி கிரிஷ்
புறப்பாடு
அரக்கப் பரக்க
வேலைக்குக் கிளம்புகிறாள்
அம்மா
பொம்மையைத்
தேற்றிக்கொண்டிருக்கிறது
குழந்தை.
- காசாவயல் கண்ணன்
மறத்தல்
நீ முதலில் அனுப்பிய
குறுஞ்செய்தி
நமது முதல் அலைபேசிப் பேச்சு
சேர்ந்து சிரித்த இனிப்புத் தருணங்கள்
பேசாமலிருந்த முள் நொடிகள்
அனுப்பிக்கொண்ட வாழ்த்துகள்
புன்னகைப் புகைப்படம்
அழுகைச் சண்டை
அத்தனையும் நன்றாக
நினைவில் இருக்கிறது
அன்றைய ஊடலில்
அவசரமாக அழிக்கப்பட்ட
உன் அலைபேசி எண்ணைத் தவிர!
- கி.சரஸ்வதி