நிழற்சாலை

நிழற்சாலை

நம்பிக்கை


கொஞ்சம் நீர் நிரப்பிய

கோணிப் பைக்குள்

திணிக்கப்பட்டு

சற்றொப்ப

நேரத்துக்கெல்லாம்

குழம்புச் சட்டியில்

கொதிக்கப்போகும் முன்னும்

மிச்ச வாழ்க்கையை

நீந்திக் கடக்க

எத்தனிக்கிறது

மூக்குத் துவாரத்தில்

ஊசி இறங்கிய வலியோடு

தூண்டிலில் மாட்டிய

மீனொன்று.

- காசாவயல் கண்ணன்

விதி

நரம்புகள் புடைக்க

வண்டியிழுக்கும்

முதியவரின்

ஆயுள் ரேகையும்

உழைப்பின் ரேகையும்

ஒரே நீளம்.

- கி.சரஸ்வதி

விளையாட்டு

கதவினை

திறப்பதும்

சாத்துவதுமான

விளையாட்டை

விளையாடிக்கொண்டிருந்தது


யாருமற்ற

வீட்டில்

குழந்தையாக

மாறிய காற்று!

- காமராஜ்

நடுநிசித் தனிமை

அமானுஷ்ய நாவால்

உரியப்பட்டுக்கொண்டே இருக்கிறேன்

சக்கை உடலொன்றில்

போர்வை போர்த்தி படர்கிறது பின்னிரவு

நிறமுடைத்து நுழைந்துவிட்ட

புது நாயின் குரலை

குதப்பிக் கொண்டிருக்கிறது தெரு

நரம்பற்ற பிண்டத்தை

உருட்டிப்பார்த்து ஊர் எழுகையில்

பிம்பத்தில் அசையவில்லை கண்ணாடி

சத்தியமாக நான் இல்லை என்று

திரும்பத் திரும்ப கூறுகிறேன்

லைல்இ... ன்நா எனப் பின்னிருந்து

முன் வருகிறது

உரித்துக்கொண்டே வரும் நாக்கு

விழித்துக்கொள்கிறேன்

நன்றாகத்தான் இருக்கிறது

கனவுக்குள் விழித்துக்கொள்வது!

- கவிஜி

பாகுபாடு

வீதியெங்கும்

உணவிற்காக அலைகிறது

வயிறொட்டிய குட்டி நாய்

ஒவ்வொரு

வீட்டிலிருந்தும்

குரைத்துத் துரத்துகின்றன

உண்டு கொழுத்த 'டாமிக்கள்!'


- ரகுநாத் வ

அறைகளாகும் வீடுகள்

காலையில்

பூஜையறை

மதியம் வரை

சமையலறை

பிறகு

உணவு உண்ணும் அறை

யாரேனும் வந்தால்

வரவேற்பறை

பகல் முடிந்ததும்

படுக்கையறை என

உருமாறிக்கொண்டே இருக்கின்றன

உங்களுடையதும்

என்னுடையதுமான

ஒற்றையறை வீடுகள்!


- வீ.விஷ்ணுகுமார்

தோழமை

மழைநாளில்

அடைக்கலமான

வண்ணத்துப்பூச்சி

மழை நின்ற பிறகும்

வெளியேற மறுக்கிறது...

குழந்தைகள்

நிரம்பியிருக்கும்

வீட்டிலிருந்து.

- மு.முபாரக்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in