நிழற்சாலை

நிழற்சாலை

பிரிவினை

கூடி வளர்ந்த நாட்கள் மறைய
வாழ்வைத் தேடி
ஆளுக்கொரு திசையாய்
சொந்தங்கள் பிரிய
இனி பராமரிக்க முடியாது எனக் கைவிடப்பட்டு
பூட்டியே கிடக்கும்
வீட்டின்
வாசல் முன்
விற்பதற்காக ஒன்றுகூடிய
உறவினர்களைப் பார்த்து
“சொத்தை விக்கிறதுல எல்லாருக்கும் சம்மதம்தானேப்பா"
ஊர்ப் பெரியவர் உரக்கக் கேட்க
“இல்லை” என ஈனஸ்வரத்தில்
முணுமுணுக்கின்றன
எதையும் மறக்க இயலாத
வீட்டின் சுவர்கள்!

- ப்ரணா

***

வாழ்வின் பச்சையம்

சுடுநீர்வீச்சு உவந்தளிக்கப்பட்ட
தேநீர்க் கடைகளில் காத்திருக்கும்
குட்டி நாய்களின்
வாலாட்டலில் இன்னமும்
துளிர்த்தபடியே இருக்கிறது
மனிதத்தின் மீதான
பெருநம்பிக்கை.

-கி.சரஸ்வதி

***

மூன்று துண்டு இரவுகள்

நீண்டு கிடந்த அடர் பெரும் இரவொன்றை
நடுங்கும் தன் கைகளில் சுமந்துகொண்டிருந்தார்
காலக் கரையான்களிடத்தில்
தன் இளமையைப்
பறிகொடுத்திருந்த
அந்த இரவு நேரக் காவலாளி…
நேரம் சவலைப்பிள்ளையாய் நகர
கைகளில் சற்றே கனம்கூடத் தொடங்குகிறது
வேறு வழியின்றி கனக்கும் இரவை உடைத்து
மூன்று துண்டுகளாக்கி விற்பனை செய்கிறார்
முதல் துண்டை
ரத்ததானம் செய்யச் சொல்லி
அடம்பிடித்த கொசுக்களிடத்தில் போணியாக்கிவிட்டு
இரண்டாவது துண்டை
தன்னோடு பணிபுரியும் சக காவலாளியிடமும்
மூன்றாவது துண்டு இரவை
மவுனம் கவ்வியிருந்த அவ்வீதி வழியே
மிதிவண்டியில் தேநீர் விற்றுச் செல்பவரிடமும்
விற்பனை செய்து முடித்தபோது
விடிந்திருந்தது பொழுது…
இப்பொழுது இரவை விற்ற பணத்தில்
தனது குடும்பத்திற்காக ஒரு பகலை
வாங்கிச் சுமக்கலானார்
வயதான அந்த இரவுநேரக் காவலாளி.

-வெ.தமிழ்க்கனல்

***

மவுனத்தின் சப்தம்

எப்போது இயல்பு நிலைக்குத் திரும்பும்
இத்தேசம்?
யாருக்கும் தெரியாது...
அடிமையென வாழும் வாழ்க்கையில்
உயிருக்கு உத்தரவாதம் இல்லை
யாரோ ஒருவர் நீட்டிய
உதவிக்கரம் பற்றி
மொழி அறியாத ஒரு நாட்டின்
அகதிகள் முகாமில் தனது மனைவி
மகள்களோடு அடைக்கலமாகிறான்
ஒவ்வொரு நாளையும் யுகமென
நகர்த்தி ஆங்காங்கே நடக்கும்
கூட்டங்களில் அரசு ஆதரவு தர
கோஷங்களை எழுப்புகிறான்
தொலைக்காட்சிகளிலும்
செய்தித்தாள்களிலும்
சமூக வலைதளங்களிலும்
நல்லதோர் விடியலைத்
தேடித்தேடிக் களைத்த அவனிடம்
“நம்ம வீட்டுக்கு எப்பப்பா
போகப்போறோம்?” என கேட்கும்
மகளின் கேள்விக்குப் பதிலாய்
அவன் உரைக்கும் மவுனத்தின் சப்தம்
இப்பொழுது உங்களுக்கும்
கேட்கக்கூடும்...

- காமராஜ்

***

உதவிக்கான காத்திருப்பு

சாணை பிடித்த கத்தியின் பதத்தோடு
வந்துவிழும் சொற்களை
புனல் கழுவி முன்னேறும்
துடுப்பின் லாவகத்தோடு
தாண்டுகிறேன்...
பாதையெங்கும்
முட்கள் தூவிடும்
பார்வைக்குப்
பதிலாய்
புன்னகையைப்
பரிசளிக்கிறேன்...
குப்பை கிளறி
தானியம் கொத்தும்
குடுமிக்கோழியின் அலகாகும் நியூரான்களின்மேல்
எங்கிருந்தோ
வந்த செங்குளவி
முள்பாய்ச்சுகிறது...
கடிபட்ட தடத்தில்
நினைவுச் சுண்ணம்
பூசி நிமிர்கையில்
வேரறுந்த மரமாய்
குடைசாயும் நேசத்தை
உயர்த்திப் பிடிக்க
நீயும்தான்
ஒருகரம்
கொடுத்துவிட்டுப்
போயேன்.

- இனியவன் காளிதாஸ்

***

கவனிப்பு

சமையலை முடிக்க காய்களை
விரைந்து நறுக்கித்தருகிறாய்
பார்த்துப் பார்த்து
இல்லாத நிறப் புடவையாய் வாங்கிப்
பரிசளிக்கிறாய்
என் மேடைப் பேச்சுக்களுக்கு
முதல் விசிறியாக ஊக்குவிக்கிறாய்
பெண்ணியம் பேசி
நானிடும் முகநூல் பதிவுகளை
சிலாகிப்புடன் பகிர்ந்துகொள்கிறாய்
சாதாரண தலைவலிக்கும்
மருத்துவரிடம் பிடிவாதமாகக்
கூட்டிச் செல்கிறாய்
கேட்கும் முன்பே ஸ்கூட்டிக்குப்
பெட்ரோல் நிரப்பிவிடுகிறாய்
என் தேவைகளைப் பத்திரமாக
உன் சட்டைப் பையிலிட்டு
சுற்றும் நீ
என் ஏடிஎம் அட்டையின் கடவுச்சொல்லைக்
காத்துக்கொள்கிறாய்
நானறியாமல்...

-ந.சிவநேசன்

***

பயமறியட்டும் இளங்கன்றுகள்

எப்போதாவது நிகழ்ந்தால் விபத்து
எப்போதுமே நிகழ்ந்தால் ஆபத்து.
வாழ்வில்
முந்த வேண்டியிருக்கையில்
வளைவுகளில்
முந்தலாமா?
வேகமெடுத்தால்
பந்தயத்தை ஜெயிக்கலாம்
நிதானித்தால் மட்டுமே
பயணத்தைத் தொடரலாம்
அதிகாலை விபத்தில்
ஐந்து பேர் பலியென
பெட்டிச்செய்தியோடு
விட்டுப்போகவா பிறந்தோம்?
இனியாவது
இளங்கன்றுகள்
பயமறிய வேண்டும்
சாலைகளில்.

- காசாவயல் கண்ணன்

***

வலி

தூண்டிலில்
சிக்கிய பின்பே
அந்த மீன்
அறிந்திருக்கும்…
துள்ளத் துடிக்க
முள்ளில்
செருகப்பட்டிருந்த
புழுவின் வலி!

-க.விஜயபாஸ்கர்

***

விளைநிலமொன்றின் ஊழிக் காலம்

புதிதாய் நுழைந்த
சொகுசுக் காரை
கண்கொட்டாமல் பார்த்து
வியப்பை மாறி மாறிப்
பகிர்ந்துகொண்டன
அங்கிருந்த
அத்தனைத் தாவரங்களும்...
மிதமாய் குலுங்கிவந்த
காரின் கண்ணாடியில்
கொடிகளின் பூக்கள்
முகம் பார்த்து நாணின.
இறங்கியவர்கள்
வண்ண பாட்டில்களில் பருகிய
குளிர்பானத்தின்
வசீகர நிறம் கண்டு
சப்புக்கொட்டிக்கொண்டன
நெடிதுயர்ந்த மரங்கள்.
இதுவரை பழக்கப்பட்டிராத
நறுமணப் பூச்சுகளின் வாசனையில்
சற்றே மயங்கின…
அவர்களில் ஒருவர் வைத்திருந்த
வட்ட வடிவ அளவை நாடாச்சுருள்
தமக்கான
பாசக்கயிறு என்று
அவை அறிந்துகொள்ளக்கூடும்
தாமதமாயினும்...

- வீ.விஷ்ணுகுமார்

***

தளர்வு

வேலை நிமித்தம்
வெளிநாடு போகிறான்.
வழியனுப்புகிறாள் மனைவி...
“இரண்டு வருடத்தில் வந்துவிடுங்கள்!”
“மூன்று வருடமாவது ஆகும்”
“விடுமுறை கிடைக்கும்போதெல்லாம்
வந்துவிடுங்கள்”
“கிடைத்தால் கண்டிப்பாக வருவேன்!”
விமானத்துடன் பிரிவும் கிளம்புகிறது.
அவள் வீட்டிலும்
இவன் அயல் மண்ணிலும்
குழந்தைகள் பள்ளியிலும்
ஆசுவாசமாக அமர்ந்திருக்க
பிரிவு கவலை சோகம்
அத்தனையும் மீறி அவர்களிடையே
இறுக்கம் தளர்ந்து சிரிக்கிறது
மெல்லிய விடுதலை ஒன்று!

- கி.ரவிக்குமார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in