நிழற்சாலை

நிழற்சாலை

களவுபோகும் வழித்தடங்கள்

யானை வழித்தடத்தினூடே
வளைந்து செல்கிறது
நீள் அரவ கருஞ்சாலை…
தொடர்பறுந்த வழித்தடத்தை
பிளிறல் பிசின் கொண்டு
ஒட்ட முயல்கிறது
வழியிழந்த யானையொன்று...
காட்டுப் புத்தகத்தை
மனிதக் கரையான்
மெல்ல அழிக்க
மனிதன் காட்டுக்கும்
யானை நாட்டுக்கும்
கட்டாயக் குடியேற்றம்
சிற்றெறும்போ
பெருங்களிறோ
பெரமோன்களை அழித்து
தடுமாறுவதை ரசிக்கிறது
பேராசை வதைக் கும்பல்!

- பா.சிவகுமார்

***

விதைக்குள் உறங்கும் இசை

புல்லாங்குழல் செய்ய
மூங்கில்
நாகஸ்வரத்திற்கு
ஆச்சா மரம்
கிடாருக்கு
தளிர் மரம்
கிளாரினெட் செய்ய
நூக்க மரம்
பியனோ செய்ய
பனை மற்றும்
மஹோகனி மரம்
பிடில் வயலின் செய்ய
கள்ளி
வீணை தவில் மிருதங்கம் செய்ய
பலா மரம்
ஆக
விதைக்குள் உறங்குவது
விருட்சம் மட்டுமல்ல
உயிரை அசைத்து
உணர்வைப் பிசையும்
இசையும்தான்!

- தஞ்சை ப்ரணா

***

தாய்மை

விடுமுறைக்கு
வீட்டுக்கு வந்துவிட்டுப் புறப்படுகையில்
உளுந்து மிளகாய் பூண்டு
பாசம் சேர்த்து அம்மியில் அரைத்த
முறுக்கு அதிரசம்
வத்தல் வடகம்
மோர் மிளகாய் என
டப்பாக்களில் அடைத்துத் தருவாள் அம்மா
‘இதெல்லாம் எப்படிம்மா தூக்கிட்டுப் போறது?’
போலிக் கோபத்துடன் வாங்கிவந்து
எல்லாம் தின்று தீர்த்த பிறகும்
டப்பாக்களைத் திறந்துப் பார்க்கையில்
நீக்கமற நிறைந்திருக்கிறது
அம்மாவின் பேரன்பு!

- சசிந்திரன்

***

உயிரின் உஷ்ணம்

தொடர் புகைபிடித்து
நுரையீரல் புற்றால்
இறந்து
தகன மேடையில்
எரிந்துகொண்டிருந்தவனின்
உதடும்
நுரையீரலும் மட்டும்
உணராது இருக்கலாம்
தீயின் சூட்டை!

- வீ.விஷ்ணுகுமார்

***

வானவில்லுக்கு நிறங்கள் ஒன்பது

இந்த வரியை
இப்படி எழுதியிருக்கலாம் என்கிறீர்கள்
இந்தக் கவிதையை
இப்படி முடித்திருக்கலாம் என்கிறீர்கள்
எல்லாவற்றிற்கும் இப்படி என்ற
ஒரு அளவீடு வைத்திருக்கிறீர்கள்
எவ்வளவு நாள்தான்
புத்தரை போதி மரத்துக்குக் கீழ் அமர வைப்பீர்கள்
எவ்வளவு நாள்தான்
நிலவைக் கிணற்றில் ஒளித்து வைப்பீர்கள்
மிகவும் சலிப்பாய் இருக்கிறது!
இனியாவது எழுதுங்கள்
வானவில்லுக்கு ஒன்பது நிறமென்று!

- விவெ

***

எழுதப்படாத இலக்கியம்

ஏதோ ஒன்றை எழுத எத்தணித்து
ரகசியத்திற்கே ரகசியமாய்
ஒரு வெள்ளைத் தாளையும்
பேனாவையும்
கையிலேந்துகிறாள் அந்த இல்லத்தரசி…
எழுதும் முன்
அவளது நினைவின் நாளிதழில்
பிரசுரமாகிறது
வீட்டு வேலை ஞாபகம்…
தினமும் உழைப்பின் முடிவில்லா
அவலக் காப்பியத்தில்
ரசிக்கப்படாத உவமையாகிறாள்…
அவள் ஏங்கும் ஓய்வினை
அனுபவித்துக்கொண்டிருக்கிறது
எழுதப்படாத
அவளது கவிதை!

-செ.நாகநந்தினி

***

சிறகசைக்கும் இதயம்

புயல் ஓய்ந்த காலைப்பொழுதில்
ஒழுகும் குடிசைக்குள்ளிருந்து
எட்டிப்பார்த்து
சாலையில் முறிந்துகிடந்த
மரக்கிளைகளுக்குள்
சிக்கித் தவித்த குருவியை
கைகளிலேந்தி பறக்கவிட்ட
சிறுமியும்
சேர்ந்தே பறந்தாள்
அன்பின் சிறகசைத்து!

- காசாவயல் கண்ணன்

***

நகரும் வானம்

பறவைகள் மீதான காதலில்
ஒரு வனம் ஒன்றை
உருவாக்கி
தாகம் தீர்க்க அருவி ஒன்றை
வரைந்து முடிக்கிறேன்...
பலத்த காற்றொன்றில்
இழுத்து செல்லப்பட்ட ஓவியத்தை
வேதனையோடு பார்த்துக்கொண்டிருக்கின்றன...
அகதியாக்கப்பட்ட பறவைகள்!

- மு.முபாரக்

***

அன்பின் ஆரூடம்

“நல்ல காலம் பிறக்குது...
நல்ல காலம் பிறக்குது...” என
நடு இரவில்
நல்வாக்குச் சொல்லிய
குடுகுடுப்பைக்காரன்
காலையில் தன்
சிறு வயது மகனுடன் வந்து
யாசகம் வேண்டி கையேந்தி நிற்க
அன்னமிட்டவாறே
அம்மா சொன்னாள்
“உனக்கும் நல்ல காலம் பிறக்கும்
பையனைப் படிக்க வை!”

- கிணத்துக்கடவு ரவி

***

உருவ போலி

பின்னால் வந்த
நிழலின் பரிதவிப்பு
புலப்படாத பொழுதுகளில்
செல்ஃபியின் மோகத்தில்
தலை கால் புரியாமல்
திரிகிறேன்.
ஏற்ற புற்றில்
சொருக எத்தணிக்கும்
பாம்பாய் கைப்பேசியின் ஓட்டைக்குள்
தலைபுகுத்திப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
செவ்வகக் கடலில் சிக்கிய
தலைமீனைப் பிடித்தது கேமிரா தூண்டில்.
களிப்பை க்ளிக்க
பெருவிரல் பயணமாகும்பொழுது
போலியினைப்
பார்த்துக் கைப்பேசியின் கண்ணாடியில்
பின்னிருந்து கெக்கலிக்கிறது
அசல் முகநிழல்!

-ரகுநாத்.வ

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in