நிழற்சாலை

நிழற்சாலை

பெண்

 “அட, பையன் நல்லா விசில் அடிக்கிறானே!”
 “பொம்பளப் புள்ளைக்கி விசில் என்ன வேண்டியிருக்கு விசில்?”
 “ஆம்பளயா, லட்சணமா நிமிந்து நில்லு”.
 “என்னடி, அடக்க ஒடுக்கம் இல்லாம நிமிந்து நிக்கிற?”
 “கெடுத்தவனுக்கே கட்டி வைங்க, திருத்திப்புடுவா”
 “பொம்பளயப் பாக்காத கெடுத்துப்புடுவா”
 “டேய், நீ கம்ப்யூட்டர் கிளாஸ்க்குப் போ”
 “ஏண்டி, தையல் கிளாஸ்க்குப் போகலயா?”
 “தம்பி சாப்பிட வாப்பா”
 “தம்பிக்குத் தட்டை எடுத்து வைடி”
 “அண்ணன் தூங்கறான், சத்தம் போடாதே”
 “விடிஞ்சும் பொம்பளப் புள்ளைக்கி என்ன தூக்கம்?”
இப்படியாகத்தான் வெட்டி ஒட்டப்படுகிறது
பெண்ணின் மரபணு.

-கி.சரஸ்வதி

***

கூடைக்காரி

கூவிக்கூவி
அவள் குரல் மாறிவிட்டது
என்ன விற்கிறாள் என்றே
தெரியாதபடி
அந்தக் கிழவியின் குரல்
குழறியும் தடித்துமிருக்கிறது.
மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில்
பக்கெட் பாப்கார்ன்
ஆர்டர் செய்யும்போது
யோசிக்காத நீங்கள்
நட்சத்திர உணவு விடுதிகளில்
புத்தம் புது சலவைத் தாள்களை உருவி
டிப்ஸ் வழங்கிப்
பெருமிதம் கொள்ளும் நீங்கள்
அந்தப் பிசிறடித்த
தொண்டைக்காரியிடம் மட்டும்தான்
பேரம் பேசுகிறீர்கள்.
அவள் தோல் சுருங்கிய கைகளால்
எடை போட்டு முடித்த
மறுகணமே
இன்னுமொரு பழம்
கொசுறு கேட்கிறீர்கள்
சும்மாட்டுத் துணியால்
முக வியர்வையைத் துடைத்தபடி
பொக்கை வாயில்
கனிந்த சிரிப்புடன்
மீதமிருக்கும் பழங்களையும்
கவிழ்த்துக் கொட்டுகிறாள்.
உங்களது நைந்த துணிப்பை
இன்னுமா நிறையவில்லை?

- எஸ்.பிருந்தா இளங்கோவன்

***

செங்கற்களாலான தெய்வம்

ஆசையாய் கட்டிய வீடு
வாசல்வரை வந்து
திரும்பிச் செல்கிறேன்
வாடகை வாங்கிவிட்டு
வந்தவர் போனவர்
எல்லாம் சொன்னார்கள்
ராசியான வீடு என்று
கடன் பட்ட எனக்கு மட்டும்
கண்ணில் பட்டது
காக்கும் கடவுளாக.

- பாண்டிய ராஜ்

***

வெளிச்சத்தை விழுங்கும் இருள்

பற்ற வைத்த தீக்குச்சிக்கு
எந்தப் பதற்றமும் இல்லை
நின்று எரிந்து தணிகிறது
பாவம்
கருகியது
கந்தகத்தை விழுங்கிய
தளிர்களும்
அவர்கள் வாழ்வின் பக்கங்களும்தான்!

- தஞ்சைத்தரணியன், முத்துப்பேட்டை 

***

டீச்சர் 

அறியாதது
படிக்கும்போது
என்னையும் அவனையும் இணைத்து
ஏராளமாகக் கதைகள்.
நானும் அவனும் மட்டும்தான்
நம்பவில்லை எதையும்.
“இந்த நட்பு எங்கே போய் முடியும்னு
தெரியும்” என்ற மேத்ஸ் டீச்சருக்கேனும்
தெரிவிக்க வேண்டும்
கணவனோடு நானும்
மனைவியோடு அவனும்
இணைந்திருக்கும் படம்தான்
எங்கள் நால்வருக்குமே
ப்ரொஃபைல் படம் என்பதை.

- வல்லம் தாஜுபால்

***

பசி

வேறு வழியில்லை
சாக்கடையோரம்தான்
அந்தத் தள்ளுவண்டி
போண்டா, வடை, சமோசா
பஜ்ஜி எல்லாமும்
மூன்றுவகை சட்னியுடன்...
வேறிடம் இல்லையா என்றால்
அன்வரும் முக்காடிட்ட அவனது
மனைவியும் இரண்டு ஆண்
பிள்ளைகளும் சொல்கிறார்கள்
“பழகிவிட்டதுண்ணா!”
பசியை உணர்ந்து ருசிக்கையில்
சிரமமின்றி
செரிமானமாகிறது
சாக்கடையை மறக்கச் செய்யும்
மாலை உணவின் ருசி.

- ஹரணி

***

காணாமல்போகும் சாயல்கள்

நாற்பது வருடங்கள்
பின்னோக்கி
துள்ளல் நடையுடன்
என் கைபிடித்து
பள்ளிக்குச் சென்ற
என் மகனைத்தான்
நான் தேடுகிறேன்
இன்றைய தினம்
என் கை பற்றி
முதியோர் இல்லத்திற்கு
இழுத்துச் செல்லும்
அவனிடம்.

- கிணத்துக்கடவு ரவி

***

இயல்பு

வெட்டிய மரத்திலிருந்து
விழுந்த
இலைச்சருகின்
நிழலில்
ஒரு நூறு எறும்புக்கூட்டம்
வசிக்கிறதெனில்
வீடு கட்ட கூறுபோட்ட
உன்னையும் என்னையும்
மன்னிக்கத்தான் செய்கிறது
இந்த மரம்.

-ந.சிவநேசன்

***

வேகம்

என் வேகத்துக்கு
ஈடு தர முடியாமல்
ஒதுங்கி வழி விட்டவனும்
என்னை முந்திக்கொண்டு
வேகமெடுத்துச் சென்றவனும்
நானும்
அருகருகே நிற்கிறோம்
சிகப்பு சமிக்ஞைக்குக்
கட்டுப்பட்டு.
அர்த்தமற்ற
வேகத்தின் அர்த்தம்
கரைந்து தீர்ந்துகொண்டிருக்கிறது
நொடிக்கு ஓர் எண்ணாக!

- வீ.விஷ்ணுகுமார்

***

முதிர்வு

இதய மாற்று
சிகிச்சையினை
வெற்றிகரமாக
நிகழ்த்தியதாக
மருத்துவமனையிலிருந்து
திரும்பிய
மகள் கூறுகிறாள்.
நின்று போன கடிகாரத்திற்கு
பேட்டரி மாற்ற
இயலாமல் நடுங்குகின்றன
என் வயோதிகக் கரங்கள்.

- ரகுநாத் வ

***

அன்பின் ஈரம்

அனைவரும்
தூங்கிய பிறகு
தாமதமாக வரும் அப்பா
குழந்தைக்குத் தரும்
பேரன்பின் சிறு முத்தம்
ஈரமாக்கிவிடுகிறது
அந்த இரவை!

- கி.ரவிக்குமார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in