நிழற்சாலை

நிழற்சாலை

மீந்துவிட்ட ரோஜா நிற பஞ்சுமிட்டாய்கள்

படர்ந்த மணல் கூட்டம்
நைந்த கால்சட்டை
பாதங்கள் மீதேறி உதிர்கிறது
அவன் நடப்பது
சமுத்திரம் நோக்கிய பால்வெளியில்
அங்கு இப்போது யாருமேயில்லை
மழை வரவிருக்கும் முகாந்திரத்தைத் தவிர
பகலின் நெடுந்தூரம்
பயணிக்கும் பாதங்கள்
பின்புறம் வெடிப்புகள்வழி
இலேசாய் கசிகிறது
அந்நாளின் பெரும்பசி
துயரப்பேரருவியாக
சிக்னல் மிளிரும்
ஒவ்வொரு நிறமும்
பஞ்சுமிட்டாயாகத்தான் தெரிந்திருக்கும்
அந்தக் காரினுள் தனியாய்
பயணிக்கும் குழந்தைக்கு
அச்சிறு பிள்ளைக்கும் இவனுக்குமூடே
சிந்தியோடிய சிறு நேசத்தை
ஒருவேளை சாலை மரத்துக் கிளைமீதமர்ந்த
காகம் மட்டுமே கவனித்திருக்கக்கூடும்
நெகிழிப்பை ஒவ்வொன்றிலும் ஏதோவோர்
குழந்தை மனதை அடைத்து நடக்கும்
இவனுக்கு
இந்தக் கடலுமில்லை
அந்த வானுமில்லை
இப்பெருநகர் வாசிகள் யார் மீதும்
இவனுக்கு எப்புகாருமில்லை...

-சுரேஷ் சூர்யா

***

அழகு

கல்லெறிந்து விளையாடும்
குழந்தை வேண்டிக்கொள்கிறது
வலிக்கக் கூடாதென்று...
வலியை மறந்து வட்ட வட்டமாய்
சிரிக்கிறது குளம்!

- விவெ

***
அடையாளம்

‘கண்ணன் மாமா இறந்துவிட்டான்'
என்றேன் செல்வியிடம்.
‘யார் அவர்?' என்கிறாள்.
ஒவ்வொரு மரணத்தின்போதும்
இப்படித்தான்...
முத்து அண்ணன் இறந்தபோது
‘ஐஸ்க்ரீம் வாங்கித் தருவாரே...
அவர்' என்றேன்.
மணி பெரியப்பா இறந்தபோது
‘புத்தகம் பரிசளிப்பாரே
அவர்' என்றேன்.
பூரணி சித்தி இறந்தபோது
‘பூவும் பொம்மையும்
வாங்கி வருவாரே
அவர்' என்றேன்.
இப்போதோ
‘எப்போதும் வெறுங்கையோடு
வருவாரே அவர்' எனக் கூற மனமின்றி
வேறு அடையாளம்
நினைவில் தேடுகிறேன்
நண்பன் கண்ணனுக்காக...

- வல்லம் தாஜுபால்

***

மதிப்பு

சாலையோரம்
வெட்கச் சிரிப்பொன்றை
உதிர்த்தபடி
கடந்து செல்லும்
யுவதி முகத்தில்
புராதன மஞ்சள்
பூசிவிட்டு நகரும்
வாகன முகப்பு விளக்கின்
ஒப்பனை ஊதியத்தை
மதிப்பிடக் கிடைக்கவில்லை
எண்கள்.

-ந.சிவநேசன் 

***

டிஜிட்டல் காமம்

ஒற்றையாடை அணிந்த
வெட்டவெளிக் குளத்துக்
குளியல்களில் எப்போதும்
கண்டதில்லை காமக் கண்கள்
நன்கு அடைக்கப்பட்ட
நான்கு சுவர்களுக்குள்
சிவப்பாய்ச் சிந்திக்கின்றன
ரகசியக் கேமராக்கள்.

- கி.சரஸ்வதி

***

பீமா ராவ்களின் தெருக்கள்

புத்தகத்தை எடுக்கும்போதெல்லாம்
செருமும் குரல்வளைகளின்
ஈரப்பசையில்
கிழிந்த புத்தகங்களை
ஒட்டுகிறான் பீமாராவ்
வானத்திற்கு வண்ணமடிப்பவனை
சாயங்கள் என்ன செய்துவிடும்
திறக்காத அறையை
சுற்றிச்சுற்றித் தட்டிக்கொண்டிக்கும்
பிஞ்சு விரல்கள் கேட்கிறது
அப்பா….
நான் படிக்க நினைத்தது
அவ்வளவு பெரிய தவறா
பெண்பிள்ளைகளாய்
பிறந்துவிட்ட பீமா ராவ்களின்
தெருக்கள் உங்களுடையன.

- அ.நிர்மலா ஆனந்தி

***

இறக்கை 

முளைத்த நோட்டு
இயற்கை காட்சி
வரையலாம்
என்ற ஆசையில்
வந்த மகளை
அம்மா அதட்டி
வீட்டுப் பாடம் எழுதச் சொல்ல
நோட்டு வெள்ளைத்தாள்
விரிந்த வானமாக
எழுத்துகள் எல்லாம்
நீல வண்ணப் பறவையாகி
பறக்கின்றன.

- கு.வைரச்சந்திரன்

***

மாதக்கடைசி

பற்பசையைப்
பிதுக்கியதில்
வழிந்தது வறுமை!

- கோவை நா.கி.பிரசாத்

***

ஆயுள்

இன்று பிரதோஷம்
நாளை வாங்கலாமென
தள்ளிப்போடப்பட்ட
ஒரு முடிவில்
ஒரு நாள் கூடுதலாக வாழ
இடம் கிடைத்திருக்கிறது
கறிக்கோழிக் கடைவாழ்
பிராய்லர் பிரஜைக்கு!

- திருமயம் பெ.பாண்டியன்

***

உங்கள் கற்பனை வளத்துக்குக் களம் அமைக்கும் பகுதி இது.நீங்களும் இங்கே கவிபாட வேண்டுமா... உடனே, உங்கள் கவிதைகளை kavithai@kamadenu.in என்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தட்டிவிடுங்கள். கூடவே, ‘எனது இந்தக் கவிதை இதுவரை வேறெங்கும் பிரசுரமாகவில்லை’ என்ற உறுதிமொழியையும் இணைத்து அனுப்ப வேண்டும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in