நிழற்சாலை

நிழற்சாலை

திறந்துகிடக்கும் உலகு...
உறங்கும் யாசகனின்
தலைக்குச் சற்று மேலிருக்கும்
நசுங்கிய அரைவட்டப் பாத்திரம்
மங்கிய இருளில் வளரும்
நிலாபோல காணத் தருகிறது.
ஐம்பது பைசா நாணயம்
சற்றுத் தள்ளிக் கிடக்கிறது
இட்டுப்போக முனைந்தவரின் பெயர் 
கடவுளாக இருக்கக்கூடும்.
சப்பிக்கொண்டிருக்கும் தோய்ந்த மார்பினை
மறைத்துக்கொண்டிருக்கும் பிள்ளையின் தலையை
அவ்வப்போது பார்த்துத் திரும்புகிறது
குட்டிகள் ஈன்ற நாய்.
பாலினம் பிறழ்ந்த மனுஷியிடம்
பேருந்து நிறுத்த மங்கல் வெளிச்சத்தில்
மாணவனொருவன் பேரம் பேசுகிறான்.
படுத்துறங்கும் சாலை வழியாக
வேகமாகக் கடந்துபோன
அவசர ஊர்தியின் அபாய ஒலிக்கு
அதே சுருதியில் கொட்டாவி விட்டுக்கொண்டே
‘ஆண்டவா' எனப் பிரார்த்திக்கிறான்
தொழுநோயாளனொருவன்.
பன்னாட்டு நிறுவன கட்டிட வாயிலில்
உறங்கவந்த யாரோ ஒரு மனிதரை
இரவுக் காப்பாளன்
லத்தி கம்பினால் வெகுநேரமாக
மிரட்டித் துரத்த முயல்கிறான்.
யாருமற்று இறந்த சர்ப்பம்போல்
இப்போது கிடக்கிறது இச்சாலை.
இந்தச் சாலையில்தான்
இன்று காலை மரணம் நிகழ்ந்தது,
இன்று மாலையில்தான் பாதைக்காக
அவ்வளவு இரைச்சல்கள் நிகழ்ந்தன,
அந்த இருள் மவுன இரவாக
மனிதர்கள் யாவரின்மீதும்
படர்ந்து கடக்கிறது.
- சுரேஷ் சூர்யா

காத்திருப்பின் முதல் புள்ளி
இன்னதென ஆராய்ந்து
தேடிக் கண்டடையும்படிக்கான
புரியாத புதிராய்ச் சிந்தை துளைக்கும்
வினாவொன்றை
நாசிக்குள் நுழையும்
உயிர்க்காற்றின் லாவகத்தில்
கையளித்துத் தொலைதூரம் நகர்ந்துவிட்டாய்.
பதிலறியா துயரப் பாதையில்
கடும் சிரமங்களுக்கு ஊடான
பயணத்தின் பின் வாய்த்ததுதான்
வெட்கக் குறுநகையோடு நான்
கரங்களில் ஏந்தி நிற்கும் உனதன்பு.
- பாப்பனப்பட்டு வ.முருகன்

அறியாக் கலை
இறங்கிச் சாய்ந்த கிளை
ஒருக்களித்து நின்று கதையடிக்கத்
தோதான மைதான வேம்புக்கும்
எங்கள் குழுவில் இடமிருந்தது.
உதிர்ந்த குரும்பைகளைக்
கல்லாங்காய் கணக்காய்
தூக்கிப்போட்டுப் பிடித்தபடி
பேசும் கதைகளை
கொல்லைத் தென்னை நான்குமறியும்.
வேலிப் பூவரசு விரித்த நிழலிடை
வெயிலில் காயும்
உடைத்த புளி, வடகமெலாம்.
சாலைப் புளியமர நிழலில்
சைக்கிள் கிடக்க
வாய்க்கால் குளியலுக்கு
வந்திறங்கும் வாண்டுக்கூட்டம்.
ஒவ்வொரு மரமும் காட்டி
ஒவ்வொரு கதை சொன்னேன் மகளே
ஆனாலும் குரோட்டன் இலை நறுக்கிய
குட்டிப் பலகணியின் குடைநிழலில் நின்றபடி
ஒவ்வொரு மரவாசம்
உணர்த்தத்தான் முடியவில்லை!
- உமா மோகன்

விழியில் கசியும் மை
புல்லாங்குழல் விற்று
வீடு திரும்புபவனின்
மடியில் மௌனமாய்
காற்றைத் தொலைத்த
பணத்தின் இசைக்குறிப்பு.
மகரந்தம் தொட்டு
முத்தமிட்டுத் திரும்பும்
பட்டாம் பூச்சியின்
படபடக்கும் விழிகளில்
கவிதைக் குறிப்பு.
நகையின் வட்டி முகிழ்த்து
அசலும் மூழ்கிப்போன
ஏல ஒப்புகைச் சீட்டில்
விரலச்சு பதிக்கும்போது
விழி கசியும்
மை தொட்டு ஒப்பமிடும்
கண்ணீரை உலர்த்திச்
சிரிக்கும் காற்றுக்கு
ஒருபோதும் தெரிவதில்லை
அது அப்பனின் வயலை
விற்றுப்போட்ட நகையின்
கடைசிக் கையிருப்பென்று!
- இன்ஃபோ அம்பிகா

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in