கோடையின் தீவிரம் குறையவில்லை, எச்சரிக்கை மக்களே!

கோடையின் தீவிரம் குறையவில்லை, எச்சரிக்கை மக்களே!

அக்னி நட்சத்திரம் முடிந்துவிட்டது என்று ஒரு வாரத்துக்கு முன்னதாகவே செய்திகள் வந்துவிட்டன. ஆனால் அந்தச் செய்தியை அக்னி நட்சத்திரம் வாசித்திருக்க வாய்ப்பில்லை அல்லவா! தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களிலும் சென்னை உள்பட தமிழ்நாட்டிலேயே சில நகரங்களிலும் வெப்பம் வாட்டியெடுக்கத்தான் செய்கிறது. 100 டிகிரியை வெயில் தாண்டுவது குறைந்தபட்சம் நான்கு அல்லது ஐந்து நகரங்களில் அன்றாடம் பதிவாகிறது. அங்குமிங்கும் கோடை மழை பெய்வதால் ஓரளவுக்குக் கோடை முடிந்துவிட்ட பிரமையும் தோன்றுகிறது. பள்ளிக்கூடங்கள் கோடை விடுமுறைக்குப் பிறகு திறக்கப்படுகின்றன. இந்த நிலையில் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

வற்றிய தண்ணீர்ப் பந்தல்கள்!

பொதுவாக கோடைக்காலம் வந்தால் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், ஆன்மிக அமைப்புகள், அரசியல் கட்சிகள் தண்ணீர்ப் பந்தல்கள் திறப்பது வழக்கம். இந்த ஆண்டும் அவ்வாறே தண்ணீர்ப் பந்தல்கள் திறக்கப்பட்டன. கட்சித் தலைவருடைய படம், கொடி ஆகியவற்றை மக்கள் முன்னால் காட்சியாக்கி பானைகளை வைத்து குளிர் நீரை நிரப்பினார்கள். முதல் நாளன்று விலையில்லாமல் குளிர் பானங்களைக் கூட பல ஊர்களில் வழங்கினார்கள். பிறகு படிப்படியாக அங்கே உபசரிப்புகள் குறைந்துவிட்டன. பல இடங்களில், உடைந்த பானைகளும் கலைந்த பிரிமணைகளுமே தண்ணீர்ப் பந்தல் திறக்கப்பட்டதற்கு சாட்சிகளாக இருக்கின்றன. இனி மக்களுக்குத் தண்ணீர் உபசரிப்பு அவ்வளவாகத் தேவைப்படாது என்று அரசியல் வட்டாரங்கள் முடிவு செய்துவிட்டன போலும். டாஸ்மாக் கடைகள்தான் காலை 11 மணிக்கே சேவையைத் தொடங்கிவிடுகின்றனவே!

கோடைக்காலம் என்ற பருவம் முடிந்தாலும், புவி வெப்பமடைவதன் காரணமாக இயற்கையில் சில மாறுதல்கள் ஏற்பட்டுவருவதை நாம்தான் உணர வேண்டும். சில நாட்களில் மேகமூட்டம்போல வானிலை இருந்தாலும் வெப்பம் தகிக்கிறது. வறட்சியான வானிலை, உடலில் உள்ள நீர்ச்சத்தை கண்ணுக்குத் தெரியாமல் உறிஞ்சி எடுக்கிறது. கடந்த ஐம்பது ஆண்டுகளில் உலகம் முழுவதுமே அனல் காற்றுக்குப் பலியானவர்கள் எண்ணிக்கை பதினேழாயிரத்துக்கும் மேல்.

எது அனல்காற்று?

வெப்ப அலை அல்லது அனல் காற்று என்பதற்கு வானிலைத் துறை வட்டாரம் ஓர் இலக்கணம் வைத்திருக்கிறது. சமவெளிப்பகுதியில் 40 டிகிரி செல்சியஸுக்கும் மேல், கடலோரப் பகுதிகளில் 37 டிகிரி செல்சியஸுக்கும் மேல் மலைவாசஸ்தலங்களில் 35 டிகிரி செல்சியஸுக்கும் மேல் வெப்பம் பதிவானால் அங்கே அனல் வீசியதாகக் கருதப்படுகிறது. அனல் காற்று உடலில் உள்ள நீர்ச்சத்தை உறிஞ்சுவதால் தலைச் சுற்றல், வாந்தி, தலைவலி, நீர்வறட்சி, உடலில் வெப்பக் கொப்புளங்கள் தோன்றுவது நடைபெறும். வெயிலில் நடந்துபோய் திடீரென சுருண்டு விழுவது அனல் காற்றால்தான் என்பதைப் பலரும் உணர்வதில்லை. வயதானதாலோ, நீரிழிவு – உயர் ரத்த அழுத்தத்தாலோ, இரவு முழுவதும் தூங்காமல் இருந்ததாலோ, பசியாலோ, தாகத்தாலோ விழுந்துவிட்டதாகவே நினைக்கின்றனர்.

என்ன செய்ய வேண்டும்?

வெயில் நேரத்தில் வீட்டைவிட்டு வெளியேறாதீர்கள், குளிர்ச்சியான இடங்களிலேயே அல்லது வீட்டிலேயே தங்கியிருங்கள் என்று சொல்வது எளிது. அறுபது, எழுபது வயதைக் கடந்தவர்கள்கூட குடும்பச் சூழ்நிலை காரணமாக வெளியில் வேலைக்குச் சென்றாக வேண்டிய கட்டாயத்துக்கு ஆட்படுகிறார்கள். வேலை செய்வதற்காக மட்டுமல்லாமல் அரசு அலுவலகங்கள், வங்கிகள், இன்சூரன்ஸ் அலுவலகங்கள். இ-சேவை மையங்கள், மருத்துவமனைகள், நியாயவிலைக் கடைகள் போன்றவற்றுக்கும் வெயில் நேரத்தில்தான் செல்லும்படியாக அவற்றின் அலுவலக நேரம் பெரும்பாலும் காலை 10 மணிக்குத் தொடங்குகிறது.

கோடைக் காலங்களில் அலுவலக நேரங்களைக் காலை 8 மணி முதல் 12 மணி வரை மாலை 3 மணி முதல் 5 மணி வரையில் மாற்றலாம். 12 மணி முதல் 3 மணி வரையில் அலுவலகத்தில் இருக்கும் நேரமும் வேலை நேரத்தில் கூடிவிடும் என்பதால் அரசு ஊழியர்கள் விரும்பமாட்டார்கள். மக்களுடனான சந்திப்பு நேரத்தையாவது காலை 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே என்று அரசு அறிவிக்கலாம்.

பத்திரப்பதிவு அலுவலகங்கள், வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள், வணிகவரித் துறை போன்ற வருவாய் ஈட்டும் அலுவலகங்களில் பணி நேரத்தையே மாலை 3 மணி தொடங்கி இரவு 9 மணி வரையில் வைத்துக்கொள்ளலாம். இதனால் நடுப்பகலில் வெயிலில் அலைய வேண்டிய நேரம் சொத்துகளை வாங்குகிறவர், விற்கிறவர், முகவர், பத்திரம் எழுதுகிறவர் அல்லது மின்னச்சு செய்கிறவர் போன்றவர்களுக்கு ஏற்படாது. இப்படி துறைவாரியாக வெயிலுக்கு ஏற்றபடி வேலை நேரத்தை மாற்றிக்கொண்டால் பலருடைய உடல்நிலை மோசமடையாமல் காப்பாற்றலாம். போக்குவரத்து வசதிகளையும் வெயிலுக்கேற்ப, நேரத்தை மாற்றியமைக்கலாம். கடும் வெயிலில் உயிரிழப்பு மட்டுமல்ல பக்கவாதம் போன்றவையும் ஏற்படும்.

வெந்நீர் அவசியம்

வெயில் காலங்களில் குடிக்க வேண்டும் என்ற உணர்வு இல்லாவிட்டாலும்கூட போதிய அளவு தண்ணீரைக் குடித்து உடலில் நீர்ச்சத்தை சேமிப்பதை வழக்கமாகக் கொள்ள வேண்டும். சுக்குத்தூள் கலந்த வெந்நீரைக் குடிப்பது இன்னமும் நல்லது. வெந்நீர் விரும்பாதவர்கள் சுத்தமான பானையில் தண்ணீரை நிரப்பி அதில் சற்று வெட்டிவேர் இட்டு சுவையான அந்த நீரைக் குடிக்கலாம்.

தாகம் எடுப்பவர்கள்கூட - வேலையை முடித்துவிட்டுக் குடிக்கலாம், எழுந்திருக்கும்போது குடிக்கலாம், யாராவது அருகில் வந்து எடுத்துத் தந்தால் குடிக்கலாம் என்று பலரும் ஒத்திப்போடுவது உண்டு. தண்ணீர் அருந்துவதில் மற்றவர்களுக்காகவோ வேறு காரணங்களுக்காகவோ ஒத்திப்போடுவது மிகவும் ஆபத்தை ஏற்படுத்தும். உடலுக்கு உணவு, காற்று எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் தண்ணீர். ஜலதோஷம், காய்ச்சல் உள்ளவர்கள்கூட வெந்நீரைப் போதிய அளவு குடிப்பது நீர்ச்சத்தை அதிகரிப்பதுடன் மலச்சிக்கலையும் தவிர்க்க உதவும்.

பருக வேண்டிய பானங்கள்

வீட்டில் வசதியிருந்தால் பழச்சாறுகளைத் தயாரித்து அருந்தலாம். வெல்லம் இருந்தால் பானகம் தயாரித்துப் பருகலாம். பழைய சோறு இருக்கும் வீடுகளில் ‘நீச்சித்தண்ணி’ என்று வட மாவட்டங்களில் அழைக்கப்படும் சோறு ஊறிய அந்த அமுதத்தையே சிறிதளவு உப்பு சேர்த்து சுவையாகக் குடிக்கலாம். இதை நீராகாரம் என்றும் அழைப்பார்கள். இது நீர்ச்சத்தைக் காப்பதுடன் உடலுக்கு ஊட்டச்சத்தையும் அளிக்கும். கூழ் குடிக்கும் நல்ல வழக்கம் உள்ளவர்கள் கூழைத் தயாரித்து வைத்திருந்து குடிக்கலாம். காபி, டீ போன்ற சூடான பானங்கள் குடிக்கும்போது தாகத்தைப் போக்கியதைப்போலத் தெரிந்தாலும் நா வறட்சியையே சில நிமிடங்களுக்கெல்லாம் ஏற்படுத்திவிடும். யாராவது வாங்கித் தந்தால் அதையும் குடியுங்கள், தவறில்லை.

இளநீர், நுங்கு, எலுமிச்சம்பழச் சாறு, வெள்ளரிப் பிஞ்சு போன்றவையும் நீர்ச்சத்துக் குறைவைக் குறைக்கும். இளநீரும் எலுமிச்சையும் கோடை வந்தாலே விலை அதிகமாகிவிடும். நுங்கு எல்லா ஊர்களிலும் கிடைப்பதில்லை. எனவே நீர்மோர், பானகம், கூழ்தான் மலிவான சொந்தத் தயாரிப்புக்கு உகந்தவை.

ஆடைகளில் கவனம்

வெயிலில் சென்று வேலை பார்த்துத்தான் தீர வேண்டும் என்ற நிலையில் உள்ளவர்கள் பருத்தி ஆடைகளை அணியுங்கள், இடையை இறுக்கிப் பிடிக்கும் ஆடைகள், காற்றுபுகாத நைலான் உள்ளாடைகள் வேண்டாம். தலைக்கு முண்டாசு அல்லது முக்காடு போடும் அளவுக்குத் துணியைக் கையில் வைத்துக்கொள்ளுங்கள். சுத்தமான குடிநீர் குறைந்தபட்சம் அரை லிட்டராவது கைவசம் பாட்டிலில் எடுத்துச் செல்லுங்கள். வெட்ட வெளியாக இருந்தாலும் வெயில் உச்சமாக இருக்கும்போது நிழலான இடங்களில் ஒதுங்கி சிறிது ஓய்வெடுங்கள். தலை கிறுகிறுவென்று சுற்றுவது போலத் தெரிந்தால், வேலையை முடித்துவிட்டு பிறகு போய் உட்காரலாம் என்று ஒத்திப்போடாமல் உடனடியாக நிழலுக்கு ஒதுங்குங்கள்.

மேஸ்திரிகள் கவனத்துக்கு…

அரசு வேலையானாலும் தனியார் வேலையானாலும் மேஸ்திரிகள் இந்த அனல் பருவத்தில் தொழிலாளத் தோழர்களின் உடல் நலனையும் அனுசரித்து நடங்கள். நடுப்பகலுக்கு சற்று முன்னதாகவே வேலையிலிருந்து விடுவியுங்கள் நடுப்பகல் கழிந்து வெயில் குறைந்த பிறகு மீண்டும் வேலையில் இறக்குங்கள். உங்களுக்கு வேலை முடியவேண்டும் என்ற முனைப்பு இருந்தாலும் தொழிலாளர்களின் நலனுக்கு முன்னுரிமை தாருங்கள். கட்டிட வேலை செய்கிறவர்கள் காலை 6 அல்லது 7 மணிக்கெல்லாம் வேலைக்குப் போய்விட்டு மாலையில் சீக்கிரம் வீடு திரும்புங்கள். ‘சைட்டுக்கு’ புறப்படும் நேரமே காலை 9 மணிக்குப் பிறகு தான் என்றால் கடும் வெயிலில்தான் வேலை செய்ய நேரும். இதை இந்தப் பருவத்தில் மாற்றிக்கொள்ளுங்கள்.

ஜிம்மர்கள் எச்சரிக்கை

உடல் பருமனைக் குறைக்க நடப்பவர்கள், ஓடுகிறவர்கள், உடலை ஸ்லிம்மாக வைத்துக் கொள்ள நினைப்பவர்கள் இந்தக் கோடைக் காலத்தில் உங்களுடைய பயிற்சி நேரங்களையும் தீவிரங்களையும் குறையுங்கள். வெப்பமே உங்கள் உடலில் உள்ள கொழுப்புகளையும் தேவையற்ற நீரையும் கரைத்து வெளியே கொண்டுவரும். நார்ச்சத்துள்ள மிதமான உணவு, நிறைய நீர் என்று மாற்றிக்கொண்டாலே உடல் மெலியும். மசாலா உணவுகள், செரிமானத்துக்கு சிரமமான கொழுப்புகள் ஆகியவற்றைத் தவிருங்கள். இரண்டு வேளையும் குளிர்நீரில் குளியுங்கள். அது வியர்வைத் துவாரத்தை அடைத்திருக்கும் உப்பையும் செத்த திசுக்களையும் வெளியேற்றி உடலில் அரிப்பு, நமைச்சல் ஏற்படாமல் தடுக்கும். உடல் சூட்டையும் தணிக்கும். இல்லை ஒர்க்-அவுட் இல்லாமல் முடியாது என்றால் அதிகாலை அல்லது பொழுது சாய்ந்த பிறகு மேற்கொள்ளுங்கள்.

வீட்டைவிட்டு வெயிலில் போய்த்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டால் தலைக்குத் தொப்பி – வெள்ளை நிறமாக இருப்பது நல்லது - அணியுங்கள். கண்களுக்கு கறுப்புக் கண்ணாடி அவசியம். உடலில் சூரிய ஒளிபடும் முகம், கழுத்து, முழங்கைகள் போன்றவற்றின் மீது ஏதாவது கிரீம் அல்லது அரைத்த சந்தனம் போன்றவற்றைத் தடவுங்கள்.

அறச்செயல்களைச் செய்ய நினைப்பவர்கள் உங்கள் ஊரில் பேருந்துக்காக மக்கள் காத்திருக்கும் இடங்களில் நிழல்கூரை இல்லாவிட்டால் தென்னை ஓலையால் நல்ல கூரை அமைத்துக் கொடுங்கள். வீட்டு வாசலில் குடிநீர் பானைகளை வையுங்கள். அல்லது குடிநீருக்கு இங்கே அணுகவும் என்று போர்டு வைத்து வீட்டு வாசலில் வந்து கேட்பவர்களுக்குக் கொடுங்கள். கால்நடைகள் உள்ளிட்ட வாயில்லா ஜீவன்கள் அருந்த சிமென்ட் தொட்டிகளை வாங்கி வீட்டு வாசலில் நீருற்றி வையுங்கள். வீட்டு காம்பவுண்டு சுவர்களிலும் பால்கனிகளிலும் மொட்டை மாடிகளிலும் காக்கை, குருவி போன்ற சிறு பறவைகள் நீர் அருந்த மண்ணால் செய்யப்பட்ட ‘மடக்கு’ என்றழைக்கப்படும் வாயகன்ற மட்பாண்டம் வாங்கி அதில் நீரை நிரப்புங்கள். குருவிகள் நீரைக் குடிப்பதுடன் அதில் குளித்து உடல் சூட்டையும் தணித்துக் கொள்ளும். தரும சிந்தனை அதிகம் உள்ளவர்கள் அருகிலேயே நெல் கதிர் கற்றைகள், சோளம், கோதுமை உள்ளிட்ட தானியங்களைத் தூவுங்கள்.

கோடை வெயிலில் சுருண்டு விழுபவர்களை முதலில் நிழலான இடத்துக்கு எடுத்துச் சென்று படுக்கை வையுங்கள். உடலில் உள்ள ஆடைகளைத் தளர்த்தி காற்று படச் செய்யுங்கள். அருந்துவதற்கு நீர், குளுக்கோஸ் கலந்த நீர் போன்றவற்றைத் தாருங்கள். முதலுதவி செய்யக்கூடியவர்களிடம் உதவி கேளுங்கள். மயங்கி விழுந்தவர்கள் அனைவரையுமே ‘சரக்கடித்துவிட்டு நிம்மதியாக ஓய்வெடுப்பவர்கள்’ என்று முடிவுகட்டி விலகிவிடாதீர்கள். வெயில்காலம் முடியும் வரை நம்முடைய கருணைதான் அவர்களைக் காக்கும் மழை மேகம் என்பதை மறந்துவிடாதீர்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in