குதிரையில் வந்து மக்கள் குறை கேட்கும் மனு!

மலையாள தேசத்தில் ஓர் மக்கள் நாயகன்
குதிரை மிக்கியுடன் மனு
குதிரை மிக்கியுடன் மனு

அந்தக் காலத்தில், ராஜாக்கள் குதிரையில் நகர்வலம் வந்து குடிமக்களின் குறைகளை அறிவது போல் தனது வார்டில் குதிரையில் வலம் வந்து பொதுமக்களின் குறைகளைச் செவிமடுக்கிறார் கவுன்சிலர் மனு. இவர் சொல்வதைக் கிளிப்பிள்ளை போல் தட்டாமல் கேட்கிறது அந்தக் குதிரை. அதன் குளம்படிச் சத்தம் கேட்டாலே, கவுன்சிலர் வருகிறார் என்று கச்சிதமாய் புரிந்துகொள்கிறார்கள் மக்கள். அந்தளவுக்கு மனுவும், அவரது குதிரையும் அந்த மக்களுக்கு பரிச்சயம்!

குதிரையில் வலம் வரும் மனு...
குதிரையில் வலம் வரும் மனு...

கேரளத்தின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் இருக்கிறது களஞ்யூர் பஞ்சாயத்து. இங்குள்ள குளத்துமண் என்னும் பகுதியில் 6-வது வார்டு உறுப்பினராக இருக்கிறார் மனு. இவர் தான் மக்கள் குறைகளைக் கேட்க குதிரையில் பவனி வரும் மக்கள் பிரதிநிதி. இது பற்றி கேள்விப்பட்டதுமே மனுவை தொடர்புகொண்டோம்.

“சிறு வயதிலேயே நான் பிரமிப்பாக பார்த்த ஒரு விஷயம் குதிரை. நான் மட்டுமல்ல பலரும் அப்படித்தான். நாம் இளம் பிராயத்தில் இருக்கும் போது, ‘ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தாராம்... அவர் குதிரையில் வந்தாராம்’ என்று தானே நமக்கு கதைகளைச் சொல்லி இருக்கிறார்கள். அப்படித்தான் எனக்கு குதிரை மீது ஓரு ஈர்ப்பு. சுற்றுலாத்தலங்களுக்குப் போனால்கூட குதிரை சவாரி செய்வதுதான் எனக்குப் பிடித்தமான விஷயமாக இருக்கும். அந்த சமயங்களில் எல்லாம், நாமும் ஒரு நாள் சொந்தமாக ஒரு குதிரையை வாங்க வேண்டும் என நினைத்துக் கொள்வேன். ஆனால் அதற்கான தேவையும், நேரமும் அமையாமலே இருந்தது.

இந்த நிலையில், எங்கள் பஞ்சாயத்தில் உள்ளாட்சித் தேர்தல் வந்தது. நானும் வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்டேன். என் மீது நம்பிக்கை வைத்து மக்கள் என்னை 100 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிக்கவைத்தார்கள். அவர்களின் நம்பிக்கையை பொய்யாக்கிவிடக் கூடாது என தீர்மானித்துக் கொண்டேன். அதற்காகவே 'மிக்கி' என்ற இந்த குதிரையை 3 வருடங்களுக்கு முன்பு வாங்கினேன். அதிலிருந்து தினமும் காலையும், மாலையும் இந்தக் குதிரையில் ஏறி எனது வார்டைச் சுற்றி வருவேன். அந்த வகையில், என்னைப் போல மிக்கியும் எனது வார்டு மக்களுக்கு நன்றாகவே பரிச்சயமாகிவிட்டது. இதனால் வார்டு மக்களின் குறைகளை எளிதில் அறிந்துகொள்ள முடிவதுடன் குதிரை வாங்கி சவாரி செய்ய வேண்டும் என்ற சிறுவயது கனவும் கைகூடிவிட்டது” என்று குதிரையில் இருந்தபடியே குதூகலித்துச் சொன்னார் மனு.

கிருமிநாசினி தெளிக்கும் மனு...
கிருமிநாசினி தெளிக்கும் மனு...

தனது வார்டு மக்கள் தன்னிடம் எந்தக் குறை சொன்னாலும் உடனே அதை தீர்த்துவைக்கிறார் மனு. அதற்காக சம்பந்தப்பட்டவர்கள் வரவேண்டும் என காத்திருப்பது இல்லை. அடிப்படையில் மனு ஒரு எலெக்ட்ரீசியன் என்பதால் தெருவிளக்கு எரியவில்லை என்று யாராவது சொன்னால்கூட இவரே வரிந்துகட்டிக்கொண்டு மின் கம்பத்தில் ஏறிவிடுகிறார். கரோனா பரவல் அதிகமாக இருந்த நேரத்தில் தனது முதுகில் மருந்துத் தெளிப்பானை மாட்டிக் கொண்டு கிருமிநாசினி தெளிக்கவும் இவர் தயங்கவில்லை.

தனது செல்லக் குதிரையை வருடிவிட்டுக் கொண்டே இதுகுறித்தும் பேசினார் மனு. ”ஊராட்சி கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக எனக்கு மாதம் தோறும் 8 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியம் வரும். அந்தப் பணத்தை அப்படியே என் வார்டு மக்களுக்கே செலவு செய்துவிடுவேன். எனது வார்டுக்கு தெருவிளக்கு தேவை என்றால் நானே வாங்கிக் மாட்டிவிடுவேன். கரோனா நேரத்தில் ஏதோ என்னால் முடிந்தளவுக்கு நான்கு பிள்ளைகளுக்கு ஆன்லைன் கிளாஸ் படிக்க செல்போன்கள் வாங்கிக் கொடுத்தேன்” என்கிறார் மனு.

வார்டுக்குள் மின்சார சீரமைப்பில் மனு
வார்டுக்குள் மின்சார சீரமைப்பில் மனு

மக்களால் நான்... மக்களுக்காகவே நான் என ஜெயலலிதா ஸ்டைலில் சொல்லும் மனு, “அடுத்த தேர்தலில் நிற்க மாட்டேன்” என்கிறார். “அதிகாரம் என்பது ஒருவருக்கே உரியது அல்ல. அனைவருக்கும் அது பரவலாக்கம் செய்யப்பட வேண்டும். ஒருமுறை ஒரு பதவியில் வென்றுவிட்டால் அது நமக்கே உரிய நாற்காலி அல்ல. அடுத்த முறை மற்றவர்களுக்கு வழிவிட்டு நாம் ஒதுங்கிக்கொள்ள வேண்டும். அதனால் தான் அடுத்த தேர்தலில் நிற்க மாட்டேன் என்று சொல்கிறேன்” என்கிறார் மனு.

தொடர்ந்து நம்மிடம் பேசிய மனு, “அரசியல் ரீதியாக நான் பாஜகவில் இருக்கிறேன். நரேந்திர மோடி எனக்குப் பிடித்த அரசியல் தலைவர். காலையும், மாலையும் வார்டு பணிகளைக் கவனித்துவிட்டு இடைப்பட்ட நேரத்தில் எலெக்ட்ரீசியன் வேலைக்குப் போய்விடுவேன். எனக்கு அதில் கிடைக்கும் வருமானமே போதுமானதாக இருக்கிறது.

சிறு வயதிலேயே அப்பா காட்டுவேலைக்குச் சென்றுதான் என்னையும், என் தம்பியையும் வளர்த்தார் என் அம்மா. அதனால் என்னால் பள்ளிப் படிப்பைக்கூட தாண்டமுடியவில்லை. பல இரவுகள் சாப்பிடாமலேயே நாங்கள் தூங்கியிருக்கிறோம். அதனால் எளியமக்களின் வலியும், வேதனையும் எனக்குத் தெரியும். அதனால் தான் குதிரையில் ராஜாவைப் போல் வந்தாலும் நான் வார்டுமக்களின் வேலைக்காரனாக இருக்கிறேன்.

மிக்கி
மிக்கி

மிக்கியும் நானும் சேர்ந்தே பயணிக்கத் தொடங்கி முழுதாக ஒருவருடம் ஆகிவிட்டது. பாலக்காடு பகுதியில் உள்ள ஒருவரிடம் இருந்து மிக்கியை வாங்கினேன். கொட்டாரக்கரையில் போய் ஒருவாரம் நானும் மிக்கியும் பயிற்சி எடுத்துக்கொண்டோம். வார்டுக்குள் தினமும் இரண்டு வேளை டூவீலரில் சுற்றி வந்தால் குறைந்தது 100 ரூபாய்க்காவது பெட்ரோல் போடவேண்டி இருக்கும். குதிரைக்கு ஒருநாள் பராமரிப்புச் செலவாக 150 ரூபாய் வரும். பின்னே, டூவீலர் என் மேல் பாசம் வைக்காது. குதிரை என் மீது உயிரையே வைத்துள்ளதே” என விழிகள் விரிக்கிறார்.

கவுன்சிலர் தேர்தலில் நிற்கும் போதே காரும், வண்டியுமாய் படோடோபம் காட்டுபவர்கள் மலிந்துவிட்ட இந்தக் காலத்தில், இந்த மலையாள தேசத்து மனு சற்றே வித்தியாசமானவர் தான்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in