நாற்பது ரூபாய்க்கு நாளெல்லாம் சாப்பாடு!

எம்ஜிஆர் பக்தரின் தன்னலமற்ற தரமான சேவை!
எம்ஜிஆர் உணவகம்
எம்ஜிஆர் உணவகம்

“மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்... அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்” என்று ‘தெய்வத்தாய்’ படத்தில் வெளிப்படையாக ’கடமை’யைப் பற்றியும் உள்ளுக்குள் திமுகவை மறைத்தும் எம்ஜிஆர் (அப்போது எம்ஜிஆர் திமுகவில் இருந்தார்) பாடுவார். ஆனால் அவரது அபிமானிகளுக்கு கடமை எல்லாம் ரெண்டாம்பட்சம் தான். எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்துத்தான் அவர்களுக்கு மூச்சு. மறைந்து 35 ஆண்டுகள் நெருங்கினாலும்கூட இன்றும் அபிமானிகளின் மனதில் அவருக்கான இடம் அப்படியே தான் இருக்கிறது. அப்படியான அபிமானிகளில் ஒருவர் தான் கணேஷ் பாண்டியன்.

சாத்தான்குளத்தில் சொந்தமாக உணவகம் வைத்திருக்கும் கணேஷ் பாண்டியன், தனது உணவகத்தில் வயோதிகர்களுக்கு 40 ரூபாயில் மூன்று வேளை உணவு கொடுக்கிறார். இந்தக் காலத்தில் இப்படியும் ஒரு மனிதரா எனக் கேள்விப்பட்டு காமதேனுவுக்காக அவரைச் சந்தித்தோம்.

கடை வாசலில் இருக்கும் பதாகை
கடை வாசலில் இருக்கும் பதாகை

அந்த உணவகத்தின் வாசலிலேயே ஃப்ளெக்‌ஸ் போர்டில் இருக்கும் எம்ஜிஆர் நம்மை கைகூப்பி சிரித்தபடி வரவேற்கிறார். கடை வாசலில் இருக்கும் இன்னொரு பதாகையில், ‘வசதிவாய்ப்புள்ள, உழைக்கும் திடம் உள்ள சாமானியர்களுக்கு மூன்றுநேர உணவு 130 ரூபாய்’ எனவும், ‘வயோதிகர்களுக்கு மூன்றுவேளை உணவு நாற்பது ரூபாய்’ எனவும்’ பளிச்சிடுகின்றன வாசகங்கள் கண் அறுவை சிகிச்சை செய்திருந்ததால் கறுப்புக் கண்ணாடி அணிந்து கடையில் உட்கார்ந்திருந்த கணேஷ் பாண்டியன் நம்மிடம் உற்சாகமாகப் பேசத் தொடங்கினார்.

”சிறு வயதில் இருந்தே நான் எம்ஜிஆர் ரசிகன். இந்த சுற்றுவட்டாரத்துல எம்ஜிஆர் படம் எங்கே ரிலீஸானாலும் சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பிவிடுவேன். அவர் கட்சி ஆரம்பித்தபோதும் கைக்காசை செலவு செய்து அவருக்காக வேலைசெய்தவர்களில் நானும் ஒருவன். அப்போது அதிமுகவிலும் இருந்தேன். அரசியலில் நல்ல உள்ளம் படைத்த மனிதர் என்றால் அது எம்ஜிஆர் மட்டும்தான். அவரது மறைவுக்குப் பின்பு அரசியல் தொடர்புகளையே முற்றாக அறுத்துக்கொண்டேன். அரசியல் இயக்கத்தில் இருப்பதைவிட எம்ஜிஆர் பக்தன் என்று சொல்வதே என் மனதுக்கு நிறைவைத் தருகிறது.

எனக்கு மூன்று பிள்ளைகளுக்கும் திருமணம் முடித்துவிட்டேன். இரு மகன்கள் சென்னையில் வேலைசெய்கிறார்கள். வீட்டில் நானும், என் மனைவியும்தான் இருக்கிறோம். இது எங்களது சொந்தக்கடைதான். அதனால் வாடகைக் கொடுக்கவேண்டிய அவசியமும் இல்லை. எங்கள் இருவரின் வயிற்றை நிறைக்கும் அளவுக்கு வருமானம் கிடைத்தாலே போதும்.

எம்ஜிஆர் மறைந்துவிட்டாலும் அவரது வழியில் நம்மால் முடிந்த அளவுக்கு வறியவர்களுக்கு உதவ வேண்டும் என எனக்குள் சின்னதாய் ஒரு பொறி. அப்படி வந்ததுதான் முதியோர்களுக்கு தினசரி 40 ரூபாயில் மூன்றுவேளை உணவு வழங்கும் யோசனை” என்றார் கணேஷ் பாண்டியன்.

தன் உணவகத்தில் கணேஷ் பாண்டியன்
தன் உணவகத்தில் கணேஷ் பாண்டியன்

கணேஷ் பாண்டியனுக்கு 67 வயதாகிறது. அதனால் சீனியர் சிட்டிசன்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அவர் ஆழமாகவே உள்வாங்கி இருக்கிறார். அதனால் அந்த வயதுக்காரர்களை நோக்கி தனது கரிசனப் பார்வையைத் திருப்பி இருக்கிறார்.

முதியவர்களுக்கான நாற்பது ரூபாய் பேக்கேஜில் காலையில் 3 இட்லி, மதியம் சாப்பாடு, சாம்பார், ரசம், முட்டை, மாலையில் புரதச்சத்து நிறைந்த சுண்டல், இரவு 3 இட்லி அல்லது சப்பாத்தி ஆகியவை வழங்கப்படுகிறது. யாராவது, “பசிக்கிறது இன்னொரு இட்லி தாரேளா?” என்று கேட்டால் கூடுதல் காசு ஏதும் வாங்காமலேயே அவர்கள் கேட்டதைக் கொடுக்கிறார் கணேஷ் பாண்டியன்.

ஒரு வடையையும், ஆப்பத்தையும் எடுத்து வந்து நமக்கு சாப்பிடக் கொடுத்துவிட்டு தொடர்ந்து நம்மிடம் பேசிய கணேஷ் பாண்டியன், “நான் எம்ஜிஆர் ரசிகன் மட்டும் அல்ல. மூன்று பிள்ளைகளுக்கு பொறுப்புள்ள ஒரு தந்தையும்கூட. ஆரம்பத்தில் இந்த உணவகத்தை குடும்ப வருமானத்துக்காகத்தான் நடத்தினேன். இதை வைத்துத்தான் குழந்தைகளைப் படிக்க வைத்து, நல்ல நிலைக்குக் கொண்டு வந்தேன். இப்போது எனக்கு சம்பாத்தியம் முக்கியமில்லை. சம்பாதிக்கும் போதே அதை மக்கள் சேவைக்கு வாரி வழங்கியவர் எம்ஜிஆர். அவரின் ரசிகனான நானும் அவர் வழியில் இப்போது நடக்க ஆரம்பித்திருக்கிறேன்.

கடைக்கு வருபவர்களுக்கு மாத்திரமல்ல... சாத்தான்குளம் அரசு மருத்துவமனையின் உள்நோயாளிகளுக்கும் தினமும் நான் தான் மூன்றுவேளையும் சாப்பாடு கொடுக்கிறேன். அவர்களுக்கும் 40 ரூபாய் தான் கட்டணம். அவர்களுக்கு மட்டும் சாப்பாட்டோடு சேர்த்து 200 மிலி பால், ஒரு முட்டை, 50 கிராம் சுண்டல் இவையும் கொடுப்பேன். இதில், பால், முட்டை, சுண்டல் செலவுக்கே 20 ரூபாய் போய்விடும். மீதி 20 ரூபாய்க்கு மூன்று வேளை உணவு கொடுப்பதாகத்தான் புரிந்துகொள்ள வேண்டும். என்னைப் பொறுத்தவரை அதை வியாபாரமாக பார்க்கவில்லை. முழுக்க முழுக்க சேவையாகவே நினைக்கிறேன்” என புன்னகைக்கிறார்.

உணவகத்தில் வாடிக்கையாளர்கள்
உணவகத்தில் வாடிக்கையாளர்கள்

கடைக்கு வந்து சாப்பிட முடியாத வயோதிகர்களுக்கு தனது கடை ஊழியர்கள் மூலம் வீட்டுக்கே உணவை சப்ளை செய்கிறார் கணேஷ் பாண்டியன். கரோனா தொடக்கத்தில் பலரும் வேலையை இழந்து, ஊதிய வெட்டுக்கு உள்ளாகி, சொந்த ஊர்களுக்குத் திரும்பினர். அப்படியான காலத்தில் தான் இந்த 40 ரூபாய் உணவுத் திட்டத்தைத் தொடங்கி இருக்கிறார் கணேஷ் பாண்டியன். கடை வாட்ச் மேன்கள், ஏடிஎம் காவலாளிகள் என பலருக்கும் இவரின் சேவை அப்போது பசியாற்றியது.

“பாவப்பட்ட மக்களுக்கு எம்ஜிஆர் இறுதி மூச்சு வரை இன்முகம் காட்டினார். அந்தளவுக்கு இல்லாவிட்டாலும் ஏதோ என்னால் ஆன இந்த சிறு சேவையைச் செய்கிறேன். கடந்த 15 ஆண்டுகளாக எங்கள் குடும்பத்தினர் தான் சுயேச்சையாக போட்டியிட்டு பேரூராட்சி கவுன்சிலர்களாக வென்று வருகிறோம். அதனால், யார் ஏழை, யார் வசதியானவர் என்பதெல்லாம் எங்களுக்குத் தெரியும். 40 ரூபாய் திட்டம் ஏழைகளுக்கு மட்டும் தான்” என்று சொன்ன கணேஷ் பாண்டியனிடம் “எம்ஜிஆரை நேரில் பார்த்திருக்கிறீர்களா?” என்று கேட்டோம்.

“ஏழெட்டு முறை பார்த்திருக்கிறேன்” என்று விழிகள் விரிய சொன்ன கணேஷ் பாண்டியன், ”எம்ஜிஆர் படத்திலேயே எனக்கு ரொம்பவும் பிடித்தது ‘நாடோடி மன்னன்’. கடையில் டிவி வைத்து, சிடியில் எப்போதுமே அவர் படம் ஓடிக்கொண்டிருக்கும்.

நூற்றுக்கும் அதிகமான எம்ஜிஆர் படங்களின் சிடிக்கள் வைத்திருக்கிறேன். எம்ஜிஆர் பாடல்களை ஒன்றுவிடாமல் சிடியில் பதிந்து வைத்திருக்கிறேன். எம்ஜிஆர் பெயரில் இப்படியொரு உணவகம் நடத்துவதைப் பார்த்துவிட்டு பலரும் நன்கொடை கொடுக்க முன்வருகிறார்கள். ஆனால் நான் ஏற்றுக்கொள்வதில்லை. காரணம், நன்கொடை வாங்கத் தொடங்கிவிட்டால் வாங்கும் பணத்திற்கு பதில்சொல்ல வேண்டிய பொறுப்பாளியும் ஆகிவிடுகிறோம். இது என் தலைவர், என் மனம்கவர் நாயகன் அமரர் எம்ஜிஆர் பெயரில் நான் செய்யும் என்னால் ஆன சேவை. அதை எனது வருமானத்தில் மட்டுமே கடைசிவரை செய்ய நினைக்கிறேன்” என்று முடித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in