ஈழத் தமிழர்கள் மட்டுல்ல... சிங்களர்களே வந்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும்!

மத்திய - மாநில அரசுகளுக்கு மனிதநேய வேண்டுகோள்
கைக்குழந்தையுடன் கஜேந்திரன் குடும்பம்
கைக்குழந்தையுடன் கஜேந்திரன் குடும்பம்

பேரினவாத அரசியல், உள்நாட்டுப் போர், மதவாதம் என்று அடுத்தடுத்து சீரழிந்த இலங்கை இப்போது மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கிறது. அது எந்தளவுக்கு குடிமக்களைப் பாதித்திருக்கிறது என்பதற்கு கஜேந்திரனின் கதை ஓர் உதாரணம்.

அகதிகள் வருகை

2006-ல் இறுதிக்கட்ட போரின்போது உயிர் பிழைப்பதற்காக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து அகதியாக வந்தவர்தான் கஜேந்திரன். அகதிகளுக்குத் தமிழகம் வழங்குகிற வேலைகளில் ஒன்றான பெயின்டர் வேலைசெய்து கொண்டிருந்தவரால், தனது காதலி மேரி கிளாராவை மறக்க முடியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக காசு சேர்த்து, 2021-ல் உயிரைப் பணயம் வைத்து இலங்கை சென்றார் கஜேந்திரன். அங்கே போய் மேரி கிளாரைவைத் திருமணம்செய்து வாழ்க்கையைத் தொடங்கினார். இனி எல்லாம் சுகமே என்றிருந்த நேரத்தில், மோசமான பொருளாதார நெருக்கடியில் வீழ்ந்தது நாடு.

இதற்கிடையே குழந்தையும் பிறந்துவிட, அதற்குப் பால் பவுடர் வாங்கக்கூட காசில்லாமல் தவித்தார் கஜேந்திரன். வேலையும் கிடைக்கவில்லை, வேலை கிடைத்தாலும் சம்பளம் போதவில்லை என்கிற சூழலில், பட்டினிச் சாவுக்குப் பயந்து காதல் மனைவியையும், கைக்குழந்தையையும் அழைத்துக்கொண்டு மீண்டும் இந்தியாவுக்கே வரத் திட்டமிட்டார் அவர். சாதாரண மீன்பிடிப் படகில், உயிர்காக்கும் மிதவைகூட இல்லாமல் உயிரைப் பணயம் வைத்து வந்தவர்களை, இதுதான் தனுஷ்கோடி என்று சொல்லி 4-வது மணல் திட்டில் இறக்கிவிட்டுவிட்டுப் போய்விட்டார் படகோட்டி.

கிட்டத்தட்ட 9 மணி நேரம் பசியோடு, கடல் அலைகளுக்கு நடுவே அந்த மணல் திட்டில் அவர்கள் உயிர் பயத்தோடு இருந்திருக்கிறார்கள். இந்திய கடலோர காவல்படையினர் மீட்கும் வரையில் சொட்டுத்தண்ணீர் குடிக்காமல் அவர்கள் இருந்தது கூட பெரிய விஷயமல்ல, அந்தக் குழந்தையும் இருந்திருக்கிறது. “தாய்நாடு எங்களைக் கைவிடாது என்ற நம்பிக்கையில்தான் வந்தோம்” என்றது அந்த காதல் ஜோடி.

இவர்கள் வந்த அதே படகில், கணவனை இழந்த தமிழ்ப் பெண் தியோரியும் தன் இரு குழந்தைகளுடன் அகதியாக வந்திருக்கிறார். கணவன்மார்கள் அரசாங்க வேலைபார்க்கிற குடும்பத்திலேயே தரித்திரம் தலைவிரித்தாடுகிறது. நானோ கணவனை இழந்தவள். அங்கே எப்படி வாழ முடியும்? என்பதே கடல் தாண்டியதற்கு அவர் சொன்ன காரணம்.

சிறையா? முகாமா? - திகைப்பில் தியோரி குடும்பம்
சிறையா? முகாமா? - திகைப்பில் தியோரி குடும்பம்

திணறும் தமிழக அரசு

இலங்கையில் இருந்து இப்போது அகதிகள் வருவார்கள் என்பதை தமிழக அரசு சற்றும் எதிர்பார்க்கவில்லை என்பதை அடுத்தடுத்த நிகழ்வுகள் காட்டின. இந்த 6 பேரையும் அகதி முகாம்களுக்கு அனுப்பாமல், பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் கைது செய்து ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள் போலீஸார். நீதிமன்றமோ கஜேந்திரனை புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டதுடன், அவரது மனைவி கிளாரியை, கைக்குழந்தையுடன் புழல் பெண்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டது. அதேபோல, தியோரியையும் அவரது 4 வயது மகன் மோசஸையும் புழல் பெண்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்ட நீதிமன்றம், அவரது 9 வயது மகளை மட்டும் அரச்சலூர் அகதிகள் முகாமில் இருக்கும் பாட்டியிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவைக் கேட்டு அவர்கள் கதறி அழுதேவிட்டார்கள்.

போலீஸாருக்கே கொஞ்சம் அதிர்ச்சிதான். இருந்தாலும் நீதிமன்ற உத்தரவை மீற முடியாதே என்று அவர்களை புழல் சிறைக்கே கொண்டுசென்றுவிட்டார்கள். இதற்கிடையில், இந்தப் பிரச்சினை முதல்வர் அலுவலக கவனத்துக்குக் கொண்டுசெல்லப்பட, சட்டப்பேரவை நடைபெறும் நேரத்தில் இது பிரச்சினையாகிவிடும் என்று அவர்களை சிறையில் அடைக்காமல் ராமேஸ்வரத்துக்கே திருப்பி அனுப்ப உத்தரவிடப்பட்டது. ஆனாலும், நீதிமன்ற உத்தரவை மீற முடியாது என்பதால், அவர்களுக்கு ஜாமீன் பெறுவதற்கான சட்ட ஏற்பாடுகள் தொடங்கின. அதற்குள்ளாக அடுத்த படகில் மேலும் 10 பேர் அகதிகளாக வந்திறங்க, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் நேரடியாக மண்டபம் முகாமில் தற்காலிகமாக தங்கவைத்தார்கள் போலீஸார்.

2012-ம் ஆண்டு வரையில் போர்க்காலம் என்பதால் அங்கிருந்து வந்தவர்களை அகதிகளாக ஏற்றுக்கொண்டது இந்தியா. அதன் பிறகு வருபவர்களுக்கு அந்தச் சலுகை கிடையாது என்று மத்திய அரசு முடிவெடுத்ததால், வருபவர்களை எல்லாம் பாஸ்போர்ட் சட்டம் மற்றும் அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைதல் போன்ற சட்டப்பிரிவுகளின் கீழ் கைது செய்து சிறையில் அடைப்பதையே போலீஸார் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இந்தப் பிரச்சினை பற்றி சட்டப்பேரவையில் பேசிய முதல்வர், இதுகுறித்து மத்திய அரசிடம் பேசி நல்ல தீர்வு காணப்படும் என்று உறுதியளித்திருக்கிறார் என்பது ஆறுதலான விஷயம்.

இன்னும் வருவார்கள்...

"போர்க்காலத்தைவிடவா இப்போது இலங்கை வாழத்தகுதியற்றதாகிவிட்டது?" என்று இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப் பத்திரிகையாளர் மயூரதனிடம் கேட்டபோது, "ஆமாம். தமிழர்களை அழித்தொழிப்பதன் மூலம் சிங்களர்களை மகிழ்ச்சிப்படுத்தி, வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்றுதான் கடந்த 10 ஆண்டுகளாக இங்கே அரசியல் இருக்கிறது. அதன் விளைவுதான் இன்றைய பொருளாதார நெருக்கடி. இங்குள்ள விலைவாசி பிரச்சினை பற்றியும், உணவு எரிபொருள் தட்டுப்பாடு பிரச்சினை பற்றியும் நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இருந்தாலும் ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன். கொழும்பு அருகே குழந்தை குட்டிகளுடன் பசியில் வாடிய சிங்களர் ஒருவர், பட்டினியில் இருந்து பிள்ளைகளைக் காப்பாற்றுவதற்காக பக்கத்து காணியில் இருந்து ஒரு பலாப்பழத்தைப் பறித்திருக்கிறார். காணிக்காரர் இவரை கத்தியால் குத்தியே கொன்றுவிட்டார். கிராமத்திலேயே இந்த நிலை என்றால், நகரத்தில் ஒரு ரொட்டித்துண்டுக்காக கொலை நடக்கிற சூழல் வெகுதொலைவில் இல்லை. பெட்ரோல் வாங்குவதற்கு வரிசையில் காத்திருந்தபோது ஏற்பட்ட தகராறில் இருவர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். வரிசையில் நின்றே மயங்கிவிழுந்து மூவர் இறந்திருக்கிறார்கள்.

இங்கே பட்டினியால் சாவதைவிட தமிழ்நாட்டிற்குப் போனால் அகதி அந்தஸ்திலாவது வாழலாமே என்றுதான் அந்த 16 பேரும் தமிழ்நாட்டிற்கு வந்திருப்பார்கள். ஆனால், அவர்களை இன்னும் தமிழ்நாடு அரசு அகதிகளாக ஏற்றுக்கொண்டதாக தெரியவில்லை. அப்படி ஏற்றுக்கொண்டால் இன்னும் நிறைய பேர் அங்கே வருவார்கள்.

தமிழர்களாவது கடந்த 20 ஆண்டுகளாகவே பல்வேறு நெருக்கடிகளைக் கடந்துவந்தவர்கள். ஆனால், சிங்களர்களால் இந்த பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கவே முடியவில்லை. 6 மாதத்துக்கு முன்பே இங்கு வாழ முடியாமல் நிறைய சிங்கள இளைஞர்கள், இத்தாலி, வளைகுடா நாடுகள், சிங்கப்பூர், மலேசியா என்று சொற்ப ஊதிய வேலைக்காகப் போய்விட்டார்கள். இதே நிலை தொடர்ந்தால், தமிழர்களைப் போலவே சிங்களர்களும் இந்தியாவுக்கு அகதியாக வரக்கூடும்" என்றார் அவர்.

போலந்து போல அணுக வேண்டும்...

இலங்கை அகதிகளை நாம் கையாள்கிற முறை சரியா என்று மதுரையைச் சேர்ந்த தன்னார்வலர் வி.மாறனிடம் கேட்டபோது, "ரஷ்ய தாக்குதல் காரணமாக உக்ரைனில் இருந்து வெளியேறிய மக்களுக்காக எல்லையை அப்படியே திறந்துவிட்டுவிட்டது அண்டை நாடான போலந்து. அதேபோல ரொமேனியா, மால்டோவா, ஹங்கேரி போன்ற நாடுகளும் அம்மக்களை அகதிகளாக ஏற்றுக்கொண்டது. இலங்கையில் இப்போது ஏற்பட்டிருக்கிற பொருளாதார நெருக்கடி போருக்கு ஒப்பானது. எனவே, இலங்கையில் இருந்து வருகிற மக்களை அவர்கள் ஈழத் தமிழர்களாக இருந்தாலும் சரி, சிங்களர்களாக இருந்தாலும் சரி அண்டை நாடு என்ற அடிப்படையில் தமிழ்நாடு ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்களை பாஸ்போர்ட் சட்டத்தின் அடிப்படையில் அணுகக்கூடாது. முகாம்களில் கொண்டுபோய் அடைப்பதும் சரியான நடைமுறையல்ல. அகதி அந்தஸ்து கொடுப்பதுடன், அகதிகளுக்கான சலுகைகளையும் வழங்க வேண்டும்" என்றார்.

"தமிழ்நாடு அரசே இப்போது நிதி நெருக்கடியில் இருக்கிறது. ஆயிரக்கணக்கில் அகதிகள் வந்தால் அவர்களைச் சமாளிக்க முடியுமா?" என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர்ராஜனிடம் கேட்டபோது, "இலங்கை அரசுக்கு உதவியாக இந்திய அரசு 7,500 கோடி ரூபாய் நிதி உதவி செய்திருக்கிறது. அந்தப் பணத்தில் ஒரு பகுதியை தமிழ்நாடு அரசுக்குக் கொடுத்தால், பிரச்சினையை எளிதாகச் சமாளிக்க முடியும். நாங்கள் இலங்கையை ஒட்டியுள்ள எல்லைப்புற மாநிலம். அந்த நிதியில் ஒரு பங்கை எங்களிடம் கொடுங்கள். நாங்கள் அம்மக்களைக் காப்பாற்றுகிறோம் என்று தமிழக அரசும் நிதியைக் கேட்டுப்பெற வேண்டும். திபெத் அகதிகளை இந்திய அரசு நடத்தும் விதத்துக்கும், இலங்கை அகதிகளை நடத்தும் விதத்துக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. இனியாவது அத்தகைய பாகுபாட்டைக் கைவிட்டு, அந்த மக்களை சுயமரியாதையுடன் நடத்த வேண்டும்" என்றார்.

"ஏற்கெனவே ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்து, அகதிகளாக வெளியேறியதால் அவர்களது காணிகளும், குடிமனைகளும் கோரப்படாத சொத்தாக சிங்களர்களின் ஆக்கிரமிப்பில் இருக்கிறது. ஓட்டு எண்ணிக்கையே ஜனநாயகத்தில் முக்கியமாகக் கருதப்படும் சூழலில், மேலும் மேலும் தமிழர்கள் வெளியேறுவது அவர்களது குரல் மேலும் பலவீனமடையவே உதவும் என்பதால், முடிந்தளவு ஈழத்தமிழர்கள் இலங்கையிலேயே வாழ்வதற்கான ஏற்பாடுகளை இந்திய, தமிழக அரசுகள் செய்ய வேண்டும்" என்கிற குரலும் ஈழத்தமிழர்கள் மத்தியில் இருக்கிறது.

எப்படியோ, இந்தியா கருணைகாட்டப் போகிறதா, கஞ்சத்தனமாக இருக்கப் போகிறதா என்பதை உலகமே பார்க்கப் போகிறது. இந்த விவகாரத்தில் அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை களில் தான் நம்முடைய கவுரவமும் அடங்கி இருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in