மனதையும் நிரப்பும் மலைநிரப்பு!

கேரளத்தில் ஆச்சரியமூட்டும் ஒரு மளிகைக் கடை
அந்த மளிகைக் கடை ...
அந்த மளிகைக் கடை ...

இரவு கடையை மூடிவிட்டு வீட்டுக்குச் செல்லும்போது, சரியாக பூட்டியிருக்கிறோமா என ஒன்றுக்கு இரண்டு தடவை பூட்டை இழுத்துப் பார்ப்பவர்கள் தான் அநேகம். அப்படியே பூட்டுப் போட்டு பூட்டினாலும் இரவுக் காவலுக்கு செக்யூரிட்டியை நிறுத்தும் இந்தக் காலத்தில், கேரளத்தில், யார் வேண்டுமானாலும் திறந்து அவர்களே பொருட்களை எடுத்துச் செல்லும் விதமாக ஒரு மளிகைக் கடையை பொதுவுடமைச் சித்தாந்தத்துடன் திறந்து வைத்திருக்கிறார்கள்!

இந்தக் கடையில் பணியாளர்கள் கிடையாது. கண்காணிப்பு கேமராக்களும்தான்! மக்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை அவர்களே எடுத்துக்கொண்டு அதற்குரிய விலையை அங்கு வைக்கப்பட்டிருக்கும் டப்பாவில் போட்டுவிட வேண்டும். இந்தக் காலத்தில் இப்படியும் ஒரு கடையா? வாருங்கள்... அந்தக் கடைப்பக்கம் கொஞ்சம் போய்வரலாம்.

விலைப்பட்டியல்
விலைப்பட்டியல்

எர்ணாகுளத்தில் இருந்து 28 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது எடைக்காட்டுவயல். இங்குள்ள ஒரு மலையின் மேல் இருக்கிறது மலைநிரப்பு என்னும் குக்கிராமம். இங்கு மொத்தமே 30 குடும்பங்கள் தான் வசிக்கின்றன. ஆனாலும் அவர்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கான பொருட்களை வாங்குவதற்கு, ஒவ்வொரு முறையும் மலையைவிட்டு 4 கிலோ மீட்டர் தூரம் கீழே இறங்கிவர வேண்டும்.

இப்படியான சூழலில்தான் இங்குள்ள ‘ஃப்ரெண்ட்ஸ் கிளப்’ நண்பர்கள், ‘ஃப்ரெண்ட்ஸ் சுயம் சகாய சங்கம்’ என்னும் அமைப்பைத் தொடங்கி அதன்மூலம் இந்த மளிகைக்கடையை நடத்தி வருகிறார்கள். மொத்தம் 13 பேர் சேர்ந்து நிர்வகிக்கும் இந்தக் கடையின் பின்னணியில், பல ஆச்சரியங்கள் அணிவகுக்கின்றன.

ஃப்ரெண்ட்ஸ் கிளப் அங்கத்தினர்கள்...
ஃப்ரெண்ட்ஸ் கிளப் அங்கத்தினர்கள்...

அதுபற்றி நம்மிடம் ஆர்வமாய் பேசி்ய ஃப்ரெண்ட்ஸ் கிளப்பின் தலைவர் அருண்ராஜன், “இந்த கிளப்பின் மூலம் ஊரில் பல நல்ல பணிகளை செய்துவருகிறோம். பிரமாதமாய் விளையாடும் கால்பந்து அணியும் எங்களுக்கு இருக்கிறது. எங்கள் அணியில் இருக்கும் ஆர்தரா கிருஷ்ணன்குட்டி இப்போது கேரள மாநில மகளிர் அணிக்காக விளையாடி வந்தார்.

கரோனா காலம் தான் எங்களை இந்தக் கடையைத் திறக்க யோசிக்க வைத்தது. கரோனா காலத்தில் சமவெளிக்குச் சென்று பொருட்களை வாங்கித் திரும்புவது, மிகவும் சவாலான விஷயமாக இருந்தது. அப்போதுதான் நாங்கள் கூடிப்பேசி இந்தக் கடையைத் திறக்க தீர்மானித்தோம்.

இந்தக் கடையை நிர்வகிக்கும் நாங்கள் 13 பேருமே வேறு பணிகளில் இருப்பவர்கள் என்பதால், கடையில் யாரும் நிரந்தரமாக இருக்க முடியாது. அப்போதுதான் பணியாளரே இல்லாத ஒரு கடை திறக்கும் எண்ணம் வந்தது. நாங்களே எங்களுக்குள் பணிகளைப் பிரித்துக்கொண்டு, டவுனுக்குச் செல்லும்போது மொத்தமாகப் பொருட்களை வாங்கிக்கொண்டு வந்து வைத்துவிடுவோம். இந்தப் பணிக்காக முதல்கட்டமாக கிளப் அங்கத்தினர்கள் ஒவ்வொருவரும் தலா மூவாயிரம் ரூபாய் போட்டோம். மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்தக் கடையை லாபநோக்கமே இல்லாமல் நடத்துகிறோம். கடையில் பணியாளர் யாருமே இருக்கமாட்டார்கள். மக்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு அருகிலுள்ள டப்பாவில் அதற்கான பணத்தைப் போட்டுவிடுவார்கள். எடுத்த பொருளையும் அதற்காக தாங்கள் போட்ட பணம் எவ்வளவு என்பதையும் அருகிலுள்ள நோட்டில் எழுதிவிட்டுச் செல்ல வேண்டும்” என்றார்.

கடையின் முகப்புத் தோற்றம்
கடையின் முகப்புத் தோற்றம்

பணம் இல்லையென்றாலும்கூட பொருட்களை எடுத்துக்கொள்ளலாம். அதுபற்றிய குறிப்பை டைரியில் எழுதிவைத்துவிட்டுப் பணம் கிடைத்ததும், டப்பாவில் கொண்டுவந்து போட்டுவிட வேண்டும்.

தொடர்ந்து நம்மிடம் பேசிய அருண்ராஜன், “இந்தக்கடையின் சாவியை கடைக்கு அருகில் இருக்கும் ஆறு வீடுகளில் கொடுத்திருக்கிறோம். இரவு கடையைப் பூட்டிய பின்பும்கூட அத்தியாவசிய தேவை என்றால், கடையைத் திறந்து மக்களே பொருட்களை எடுத்துக்கொள்ளமுடியும். கடையில் எலெக்ட்ரானிக் தராசும் வைத்துள்ளோம். அதில் அவர்களே எடை போட்டுப் பார்த்து பொருட்களை எடுத்துச் செல்வார்கள். எங்கள் ஊருக்குப் பரிச்சயம் இல்லாதவர்கள் யாரும் வந்தால்கூட அருகிலுள்ளவர்கள் கடையில் எப்படிப் பொருள்களை வாங்குவது என வழிகாட்டி விடுவார்கள். ஒருவேளை, தாங்கள் வாங்க வந்த பொருள் இந்தக் கடையில் இல்லாவிட்டால் அதையும் நோட்டில் எழுதிவைத்துச் சென்றால் போதும். மறுநாள் அந்தப் பொருள் கடையில் இருக்கும். கடை தொடங்கி 2 வருடங்கள் ஆகப் போகிறது. ஒருநாள்கூட விற்ற பொருளுக்கும் பணம் கையிருப்புக்கும் வித்தியாசமே வந்ததில்லை” என்றார்.

மலர்கள் சாகுபடி
மலர்கள் சாகுபடி

கரோனா காலத்தில் சரியான வேலை வாய்ப்புகள் அமையாததால், ‌இங்கு சிலருக்கு பணக் கஷ்டம் இருந்தது. அந்த சமயத்தில் மிகவும் நலிவடைந்த நிலையில் இருந்த மக்கள், பணம் ஏதும் தராமலேயே இந்தக் கடையில் பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டார்களாம். நிலைமை கொஞ்சம் இயல்புக்கு வந்ததும், அந்தப் பொருட்களுக்கான பணத்தை நாணயத்துடன் கொண்டு வந்து கொடுத்திருக்கிறார்கள் அந்த மக்கள்.

நாற்பதாண்டுகள் பழமையான ஃப்ரெண்ட்ஸ் கிளப்புக்கு சொந்தமான இடத்தில்தான், இந்தக்கடை செயல்படுகிறது. அதனால் கடை வாடகை இல்லை. மின் கட்டணம், பெட்ரோல் செலவுகளுக்காக மட்டுமே சின்னதாய் ஒரு மார்ஜின் வைத்து பொருட்களை விற்கிறார்கள்.

இந்தக் கடைக்கான நிதி ஆதாரத்தைச் சமாளிக்கும் சூட்சுமம் குறித்து நம்மிடம் பேசிய கிளப் உறுப்பினர் அணில்குமார், “ஓணம் பண்டிகைக்காக சீட்டு நடத்துகிறோம். அதனால் கையில் எப்போதும் பண வரவு இருக்கும். அது கடைக்கான பொருளாதாரத்தைத் தாங்கிப் பிடிக்கிறது. அடுத்ததாக சொந்தமாக இடம் வாங்கி இந்தக் கடையை இன்னும் கொஞ்சம் விரிவுபடுத்த தீர்மானித்திருக்கிறோம். இன்னொரு முயற்சியாக, ஊரில் தரிசாகக் கிடந்த 6 சென்ட் நிலத்தில் சோதனை முயற்சியாக கிரேந்திப்பூ சாகுபடி செய்தோம். அது நல்ல மகசூலைக் கொடுத்திருக்கிறது. இந்த ஆண்டு அதை ஒரு ஏக்கருக்கு விரிவுபடுத்த இருக்கிறோம்” என்றார்.

கடையில் பொருட்களை வாங்கிவிட்டு நோட்டில் எழுதும் காட்சி
கடையில் பொருட்களை வாங்கிவிட்டு நோட்டில் எழுதும் காட்சி

கடந்த ஆண்டு இந்தக் கிராமத்தில் 21 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. அப்போது இந்தக் கிராமமே மூடப்பட்டது. அப்போதும் கூட உள்ளூர் மக்களின் அத்தியாவசிய தேவைகளை இந்தக் கடையே பூர்த்தி செய்தது.

கிளப் என்ற பெயரில் வெட்டி அரட்டை பேசி வீண் வம்பை வளர்ப்பவர்கள் அதிகமாக இருக்கும் இந்தக் காலத்தில், தங்கள் கிராமத்துக்காக இப்படியொரு சிந்தனைக்குச் செயல்வடிவம் கொடுத்திருக்கும் மலைநிரப்பு கிராமத்து நண்பர்கள், உண்மையிலேயே மெச்சத் தகுந்தவர்கள் தான்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in