விண்வெளியில் உடலுறவு சாத்தியமா?

குரங்குகளை தேனிலவுக்கு ஏவும் சீனா
விண்வெளியில் உடலுறவு சாத்தியமா?

விண்வெளியில் பல நாடுகளின் ஆய்வுகள் பல்வேறு விதமாக நடைபெற்று வருகின்றன. அவையனைத்தின் நோக்கமும் எதிர்காலத்தில் மனிதன் அங்கே வாழ இயலுமா என்பதிலேயே நிலைகொள்கின்றன. இதன் பொருட்டே நடப்பில் அங்கே ஏதேனும் உயிரினங்கள் வாழ்கின்றனவா என்பதில் தொடங்கி இயற்கை வளங்களை ஆராய்வது வரை தொடர்ந்து வருகின்றன.

இந்த ஆய்வுகளில் ஒன்றாக உயிரிகளின் இனப்பெருக்க சாத்தியம் குறித்தும் நீண்ட காலமாக உலக நாடுகள் ஆராய்ந்து வருகின்றன. உயிரியின் அடிப்படைத் தேவையான இனவிருத்திக்கு விண்வெளியிலும், இதர கோள்களிலும் அறிவியல்பூர்வமான வாய்ப்புகள் இருக்கிறதா என்பதை இதன் மூலம் தெளிவுபடுத்த முயல்கின்றன. புவியில் வாழும் உயிரிகள் அனைத்தின் இயக்கத்திலும் புவியீர்ப்பு விசை கணிசமான பங்கு வகிக்கிறது.

உடலுறவு மட்டுமன்றி அதன் நோக்கத்தை நிறைவேற்றும், பிறிதொரு உயிரை தரிப்பது மற்றும் பிரசவிப்பதிலும் இந்த ஈர்ப்பு விசை முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் ஈர்ப்பு விசை பூஜ்ஜியமாக இருக்கும் விண்வெளியில் உடலுறவும் அதையொட்டிய இனச்சேர்க்கையும் எந்தளவுக்கு சாத்தியம் என்பதே அறிவியலாளர்களின் ஆய்வில் பிரதான இடம் பிடித்து வருகிறது.

விண்வெளியில் ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகியவை வழக்கம்போல இந்த ஆய்வுகளிலும் முன்னணி வகிக்கின்றன. எலிகளை அனுப்பி அவற்றை 18 நாட்கள் பழகவிட்டு ரஷ்யா நடத்திய ஆய்வு, பூஜ்ஜிய ஈர்ப்பாற்றலின் மத்தியில் உடலுறவின் நோக்கமும் பூஜ்ஜியம் எனத் தெரிய வந்தது. மனிதர்களை வைத்தே நடத்தப்பட்டதாக சொல்லப்படும் சோதனைகளின் முடிவை வெளியிடுவதில் ஏனோ அமெரிக்கா தாமதித்து வருகிறது. இதற்கிடையே குரங்குகளை விண்வெளிக்கு ஏவி தங்கள் பங்குக்கு ஆய்வுகளை மேற்கொள்ள சீனா தீர்மானித்துள்ளது.

தற்போதைக்கு குரங்குகளின் உணவு உட்கொள்ளல் மற்றும் கழிவுகளை வெளியேற்றல் தொடர்பான சவால்களை விஞ்ஞானிகள் எதிர்கொண்டு வருகின்றனர். இவ்வாறான சவால்கள் களையப்பட்டதும் குரங்குகளால் விண்வெளியில் இயல்பாக இயங்க இயலும் என்றும் விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இந்த ஆய்வுகளின் அடுத்த கட்டமாக சீனாவின் தியாங்காங் விண்வெளி ஆய்வு மையத்துக்கு குரங்கினங்கள் தேனிலவு பயணம் செல்ல உள்ளன. அங்கு ஏற்கனவே உள்ள 2 ஆண்கள், 1 பெண் என 3 விண்வெளி வீரர்களும் இந்த குரங்குகளை வரவேற்க உள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in