இது ஒன்றும் எனக்கு கவுரவ குறைச்சல் இல்லை!

அசரவைக்கும் ஆத்ரா
இது ஒன்றும் எனக்கு கவுரவ குறைச்சல் இல்லை!
ஆத்ரா

கேரளத்தில், அரூர் - கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருக்கிறது அந்த சின்னஞ் சிறிய உணவகம். அப்புக்குட்டன் நடத்தும் அந்த உணவகத்தில் சமையல் மாஸ்டராகவும், உணவு பரிமாறுபவராகவும் இருக்கிறார் அவரது அன்பு மகள் ஆத்ரா. சமையல் மாஸ்டர் என்பதல்ல... பல்கலைக்கழகத்தின் ஆய்வு மாணவி என்பதே ஆத்ராவைச் சுற்றும் அழகான ஆச்சரியம்!

மாஸ்டர் ஆத்ரா
மாஸ்டர் ஆத்ரா

ஆத்ராவின் ஆய்வு மாணவி அடையாளம் இங்கு வரும் பலபேருக்குத் தெரியாது. சிறு உணவகம் என்பதால், சாயா குடிக்க ஒதுங்கும் வாகன ஓட்டிகளின் தலையைப் பார்த்துவிட்டால் பரிமாறும் வேலையைத் தன் அம்மா மோலியிடம் ஒப்படைத்துவிட்டு, அவர்களுக்காக டீ மாஸ்டராகி விடுகிறார் ஆத்ரா. கல்லூரிக்குள் காலடி எடுத்துவைத்தாலே, ஒயிட் காலர் வேலைதான் வேண்டும் எனவும் பெற்றோருக்கு உதவி செய்வதையே பெருந்தொந்தரவாகவும் நினைக்கும் இன்றைய யுவ, யுவதிகளுக்கு மத்தியில் சற்றே வித்தியாசமாக தெரிகிறார் ஆத்ரா.

கிச்சனில் ஆர்டருக்கு ஆப்பம் ஊற்றிக்கொண்டே நம்மிடம் பேசினார் ஆத்ரா. “என்னோட அப்பா ஆரம்பத்தில் கொத்தனார். அந்தத் தொழில் அப்பாவுக்கு கஷ்டமா இருந்துச்சு. அதனால மாற்றுத் தொழிலா இந்த உணவகத்தைத் திறந்தார். அப்ப நான் 12-ம் வகுப்பு படிச்சுட்டு இருந்தேன்.

நாங்க ஏழ்மைப்பட்ட குடும்பம். இந்தக் கடையே வாடகைக் கடைதான். இந்த நிலையில கடைக்கு வேலைக்கு ஆள் வெச்சு கட்டுபடி ஆகாதுன்றதால நானும் அம்மாவுமே அப்பாவுக்கு துணையா இறங்கிட்டோம். தினமும் காலையில் 6 மணிக்கு இங்க வந்துருவேன். 9 மணி வரைக்கும், டீ போடுறது, பரிமாறுவது, ஆப்பம் சுடுறது, பாத்திரங்களைக் கழுவி வைக்கிறதுன்னு என்னோட நேரம் ரொம்ப பிஸியாவே நகரும்.

அதுக்கப்புறம் கிளம்பி காலேஜுக்குப் போவேன். மாலையில் கிளாஸ் முடிஞ்சதும் நேரா கடை தான். ராத்திரி 10 மணிக்கு கடை பூட்டுற வரைக்கும் இங்க வேலை இருக்கும். அதுக்கப்புறம் வீட்டுக்குப் போனதும் தான் படிக்க உட்காரமுடியும். படிப்பு வேலைகளை முடிச்சுட்டு படுக்க ராத்திரி 12 மணி ஆனாலும், மறு நாள் காலையில் 6 மணிக்கு எந்திரிச்சுருவேன். அதிகமா பார்த்தா ஒரு நாளைக்கு 6 மணி நேரம் தான் எனக்கான தூக்கம் இருக்கும்” என்று சொன்னார் ஆத்ரா.

பெற்றோருடன் ஆத்ரா...
பெற்றோருடன் ஆத்ரா...

உணவகத்தில் வேலை பார்த்துக்கொண்டே பி.எஸ்சி., விலங்கியல், எம்.எஸ்சி., கடல் உயிரியலையும் முடித்த ஆத்ரா, தற்போது கொச்சியில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் கடல் உயிரியலில் முனைவர் படிப்பை பயின்றுவருகிறார்.

“சிலநேரங்களில் கடையில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அப்படியான நேரங்களில் நான் கல்லூரிக்குச் செல்ல சிறிது தாமதமும் ஆகும். எனக்குப் போதித்த ஆசிரியர்களும், நண்பர்களும் எனது குடும்பப் பின்னணியை நன்கு அறிந்தவர்கள். அதனால் அவர்கள் நான் தாமதமாக வருவதையும் அனுமதிப்பார்கள். இன்றைக்கு நான் இந்த நிலைக்கு உயர்ந்து நிற்பதற்கு என்னைப் பற்றிய அவர்களின் புரிதலும் முக்கிய காரணம். 2017-ல் நான் தொடங்கிய முனைவர் பட்டத்துக்கான ஆய்வை 2023-ல் சமர்ப்பித்தாக வேண்டும்.

உணவகத்திலேயே பெருவாரியான நேரம் இருந்தாலும் என்கூடவே அம்மாவும் அப்பாவும் இருப்பதால், எனக்கு வீட்டில் இருப்பது போன்ற உணர்வு தான் ஏற்படும். அதேசமயம் இளம் பெண்ணாக இருப்பதால், இங்கே நான் எதிர்கொள்ளும் சவால்களும் அதிகம்.

ஒருமுறை, 2 பேர் சாப்பிட வந்திருந்தார்கள். அவர்களுக்கு உணவு பரிமாறிவிட்டுத் திரும்பினேன். அப்போது, ‘கடையில் வியாபாரத்தை அதிகரிக்க ஓனர் தன்னோட மகளையே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் போல’ என அவர்களுக்குள் பேசிக் கொண்டார்கள். இது எனது காதில் விழுந்த நொடியில் சுக்குநூறாக நொறுங்கிப் போனேன். என் அம்மாவிடம் சொல்லி அழுதேன். ‘அப்படித்தான் பலரும் பலவிதமாப் பேசுவாங்க. அதையெல்லாம் நாம் காதில் வாங்கிட்டு இருந்தோம்னா பிழைக்கவும் முடியாது, முன்னேறவும் முடியாது’ன்னு அம்மா தான் எனக்கு அப்ப அறிவுரை சொன்னாங்க. அதிலிருந்து, எனக்கு பின்னால் இருந்து பேசுபவர்களைப் பற்றி நான் கவலைப்படுவதே இல்லை” தீர்க்கமாகச் சொல்கிறார் ஆத்ரா.

ஆத்ரா
ஆத்ரா

முதுகுக்குப் பின்னால் பேசுபவர்கள் ஒருபுறம் இருக்க, கடந்த பத்தாண்டு காலத்தில் கடைக்கு வந்தவர்களில் பலரும், பெற்றோருக்குத் துணையாக இருக்கும் தன்னைப் பாராட்டி ஊக்கப்படுத்தியதையும் நினைவுகூர்கிறார் ஆத்ரா.

நிறைவாக நம்மிடம் பேசிய ஆத்ரா, ”ஹோட்டலில் வேலை செஞ்சுட்டே படிக்கிறதுல எனக்கு எந்தவிதமான கவுரவ குறைச்சலும் இல்லை. எனக்காக எனது பெற்றோர் அடுக்களை சூட்டில் நித்தமும் சுட்டுக் கருகும்போது அவர்களுக்குத் துணையாக நானும் தோள் கொடுப்பது தானே சரியாக இருக்க முடியும்?

முனைவர் பட்டம்பெற்று பணிக்குச் செல்லும் வரையிலும் இந்த உணவகத்தில் தயக்கமின்றி நான் வேலை செய்வேன். கல்லூரி பேராசிரியர் ஆனதும் என் அப்பாவுக்குச் சொந்த இடம் வாங்கி ஒரு உணவகம் கட்டிக்கொடுக்க வேண்டும். காலம் முழுவதும் வாடகைக் கட்டிடத்தில் இருக்கிறோமே என்ற மனப் புழுக்கத்தில் இருந்து அவரை விடுவிக்க வேண்டும். அப்பா - அம்மா குறித்த நிறையக் கனவுகளை எனக்குள் நான் சுமக்கிறேன். இருந்தாலும் இப்போதைக்கு இதை மட்டுமே மனதில் ஏற்றிக்கொண்டு ஓடிக்கொண்டு இருக்கிறேன். இதற்கிடையில், வீட்டில் வரன் பார்க்கிறார்கள். அதற்குள்ளாக எனது பெற்றோரை நான் நினைக்கும் இடத்தில் உட்காரவைத்துவிட வேண்டும் என நினைக்கிறேன்” என்றார்.

’படிக்காத பிள்ளை பெற்றோருக்கு பெரும் பாரம்’ என அனுபவப்பட்டவர்கள் சொல்வார்கள். அப்படியான பிள்ளைகளும் இருக்கும் இந்தக் காலத்தில், படிக்கும் காலத்திலேயே பெற்றோரின் பாரத்தையும் சுமக்கும் ஆத்ராக்கள் உண்மையிலேயே ஆராதிக்கப்பட வேண்டியவர்கள் தான்!

Related Stories

No stories found.